தேவர்மகன் படம் பார்த்த ஒரு வாரத்திற்கு அந்த நடுக்கம் இருந்தது. எனது வழமையான ”குருதி காண் அச்சம்” மட்டுமல்ல அது. சக்தியும் மாயனும் தத்தம் கைகளில் வாளுடன் நிற்கின்றனர். மாயனின் வாளை தடுக்க மட்டுமே எத்தனித்த சக்தியின் கை நழுவ… கீழே உருண்டோடுகிறது மாயனின் தலை. நொடிப்பொழுதில் தோன்றி மறையும் இக்காட்சி. “தலை உருளுதலுக்கு” எத்தனை அருகில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணமே மயிர்கூச்செரிய செய்தது. எத்தனை முறை கையில் சிறு கத்தியுடன் விளையாடி இருப்பேன் தங்கையிடம்? எத்தனை முறை கோலுடன் “கத்திச்சண்டை” போட்டிருப்பேன் தோழர்களிடம். கை நரம்பு கிழிபட்டு உதிரம் வழிவதும் கோல் கை தவறி கண் பறிப்பதும் எதேச்சையாய் நிகழாது போன சாத்தியங்கள் மட்டுமே. கை தொடும் தூரத்தில் அமர்ந்திருக்கும் கொலை சாத்தியத்தை குறித்த அச்சத்தை தேவர் மகன் என்னுள் விளைவித்தது. கமல் பின்பொருமுறை ஒரு பேட்டியில் இவ்வாறு கூறி இருந்தார் – ”வன்முறைப் படங்களில் இரு வகை உண்டு. தேவர் மகன் பார்த்தபின் வன்முறையை குறித்த அச்சம் மட்டுமே மிஞ்சும். ஜாக்கி ஜான் படம் பார்த்துவிட்டு வருகையில் யாரையாவது அடிக்கவென தினவெடுத்து நிற்கும் கைகளும் கால்களும்.”
பொதுவாகவே உதிரம் வழிந்தோடும் வன்முறை சார்ந்த படங்களை தவிர்த்துவிடுவேன். எது சாலை விபத்தை கண்டால் என்னை தலையை வேறுபுறம் திருப்ப உந்துகிறதோ அது தான் இப்படங்களையும் காணவிடாது செய்கிறது. ஆனால் ”கில் பில்”(Kill Bill) வேறு ஒரு அனுபவம். படம் முழுக்க குருதி வழிந்தோடுகிறது. கதை என்று என்ன இருக்கிறது அதில்? பில் என்ற ஒரு கொலைக்கூட்ட தலைவன் தன் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்று ”சராசரி” வாழ்வை வாழ எத்தனித்த அவளை, தன் கூட்டத்துடன் சென்று அவளது திருமணத்தன்று சுட்டு வீழ்த்துகிறான். கணவனும் 4 உறவினர்களும் அங்கேயே இறக்க, இவள் 7 வருட கோமா நிலையில்… விழித்தெழுந்ததும் பில்லை கொல்ல விழைகிறாள். எப்படி என்பதை இரண்டு படங்களாக தந்தார் டரண்டினோ. படம் முழுக்க தலைகள் உருள்கின்றன, கைகள் துண்டாகின்றன, சிரமிழந்த கழுத்திலிருந்தும் கரமிழந்த தோளிலிருந்தும் உதிரம் ஊற்றெனப்பெருகுகிறது. ஆனால் தலை திருப்பவில்லை. மாறாக ரசித்தேன் (குற்றவுணர்வுடன்). இப்போது யோசிக்கையில் தோன்றுகிறது. இங்கு வன்முறை அதீதமாக்கப்பட்டு, அதன் அதீத நிலையில் தனது பயங்கரங்களை எல்லாம் இழந்து நிகழ்கலையாய் காட்சியளிக்கிறது. இன்னொன்றும் உள்ளது. நான் ரசித்த அதீத வன்முறை படங்கள் அனைத்துமே, தங்களுக்கும் நான் வாழும் நிகழ்தளத்திற்குமான உறவை வலிந்து துண்டித்துக்கொண்ட படைப்புகளே. கில் பில், 300, சின் சிட்டி (Sin City) போன்ற படங்களை சொல்லலாம். இவை அவற்றின் தொடக்கம் முதலே ஒரு வித அலாதி உலகில் புகுந்துகொள்வதால் அதன் வன்முறையை, குருதிப்பெருக்கை “விலகி நின்று” பார்க்க முடிகிறது.
திடீர் என கில் பில் பற்றி யோசிக்க வைத்தது சுந்தர காண்டம். வரம் பதிப்பகம் வெளியிட்ட “சுந்தர காண்டம்” ஒலிநூலினை கேட்டுக்கொண்டிருந்தேன். கம்பராமாயணத்தில் சுந்தர காண்டம் பகுதியினை மூலத்தின் அடியொற்றி உரைநடையில் எழுதப்பட்ட பழ. பழனியப்பனின் நூலின் ஒலி வடிவம் இது. சுந்தரராமன் என்பவரின் அருமையான குரலுடன் வெளிவந்துள்ளது. சுந்தரகாண்டம் அனுமன் மகேந்திர மலையில் இருந்து புறப்படுவதில்(கடல் தாவு படலம்) தொடங்கி, கடல் அரக்கர்களை தாண்டி இலங்கை சென்று சீதையை கண்டு, அரக்கர்களுடன் போரிட்டு, இலங்கையை எறியூட்டி இராமனிடம் திரும்ப வந்து ”கண்டனென் கற்பினுக்கு அணியை” என்று சொல்வதில் (திருவடி தொழுத படலம்) முடிகிறது. சுந்தரராமனின் குரலில் கேட்டு முடித்தவுடன் மூலத்தை புரட்டிப்பார்த்தேன் (அ.ச.ஞானசம்மந்தன் தொகுத்தது. கங்கை புத்தக நிலைய வெளியீடு). ஓரளவிற்கு சரளமாய் வாசிக்க முடிந்தது. முடித்ததும் எனை அதிகம் ஈர்த்தது இப்பகுதியின் வன்முறை தான். வாசித்துக்கொண்டிருந்த பொழுதே ”கில் பில்”லையும் 300ஐயும் நினைவூட்டியது. முடிசூட்டு கோலத்தில் அமர்ந்திருக்கும் இராமனின் காலடியை வணங்கும் அமைதியின் உருவாய் திகழும் அனுமன் அல்ல இதில். போரின் அத்தனை பயங்கரங்களையும் “மறம்” என காணும் போர் வீரன் இந்த அனுமன்.
அனுமன் அசோகவனம் புகுந்து சீதையிடம் கணையாழி பெற்று திரும்புகையில் இராவணனின் கவனத்தை கவர வேண்டி அசோகவனத்தை சிதைக்கிறான். அதை கண்ட அரக்கர்கள் தாக்க வர, அவர்களை கொல்கிறான். செய்தி இராவணன் செவி சென்று சேர்கிறது. அரக்கர் படை, படைத்தளபதி சம்புமாலி, பஞ்ச சேனாதிபதிகள், இராவணனின் மகன் அக்ககுமாரன் என ஒவ்வொருவராக வந்து அனுமனுடன் போரிட்டு மடிகின்றனர். இறுதியில் போரிட வரும் இந்திரசித்தனின் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு இராவணனைப் போய் காண்கிறான். இப்படி போகிறது சுந்தரகாண்டம். இதன் தொடக்கத்திலே மகேந்திர மலையில் இருந்து இலங்கை நோக்கி பறக்க கால் ஊன்றிய பொழுது, கனம் தாளாது மலையின் வயிறு கிழிந்து குடல் வெளிவந்தது என்ற இடத்திலேயே இது ஒரு மாய தளத்துள் நுழைந்துவிடுகிறது (குரங்கு பறப்பதே அது தானே என்கிறீர்களா? 🙂 ) . அதன் பின் தொடரும் வன்முறைகளில் எல்லாம் விரவிக்கிடக்கும் இவ்வித அதீதங்கள் ரசிக்கவே வைக்கின்றன. செங்களம் படக்கொன்று… என தொடங்கும் குறுந்தொகை பாடல் ஒன்று. பாடல் முழுவதும் போரில் வழியும் குருதியால் சிவந்து நிற்கும். கிங்கரர் வதை படலம் தொடங்கி சுந்தர காண்டம் முழுவதும் உதிரச்சிவப்பே கண்களை நிறைக்கிறது. எழுத்துருக்களெல்லாமும் சிவந்தது போல…..
சில பாடல்கள்…
பரு வரை புரைவன வன் தோள், பனிமலை அருவி நெடுங் கால்
சொரிவன பல என, மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்;
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார்; உயர் தலை உடைய உருண்டார்-
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான்.
மலை அளவிற்கு உயர்ந்து நிற்கிறது அனுமன் தோள். அம்மலையிலிருந்து பாயும் அருவியைப் போல அவனை தாக்க வந்த அரக்கர்களின் குருதி வழிகிறது. ஒருவர் ஒருவராக வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது தலைகள் தரையினில் உருள்கின்றன. மின்னலும் அஞ்சி அசையும் படி இருந்தது அனுமனின் அடி ஒவ்வொன்றும்.
ஓடிக் கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும்
கூடிக் கொன்றனன் சிலவரை; கொடி நெடு மரத்தால்
சாடிக் கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித்
தேடிக் கொன்றனன் சிலவரை – கறங்கு எனத் திரிவான்.
ஓடி கொன்றான் சிலரை; உடலோடு உடல் இடித்துக்கொன்றான் சிலரை; நெடிய மரத்தினை கொண்டு அடித்துக்கொன்றான் சிலரை; அங்கு விழுந்து கிடந்த பிணங்களினூடே யாரேனும் உயிரோடிருக்கின்றனரா என தேடிக்கொன்றான் சிலரை – சுழற்காற்று போல திரிந்த அனுமன்.
சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய,
நீறு சேர் நெடுந் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப
ஆறு போல் வரும் குருதி, அவ் அனுமனால் அலைப்புண்டு
ஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ் இலங்கை.
சேறும் வண்டலும் போல மூளையும் சதையும் மிதக்க அந்த நெடிய தெருவெல்லாம் வெள்ளம் வந்த ஆறு போல பாய்ந்தோடிய குருதி அனுமனின் கால்களால் அலைக்கப்பட்டு, இலங்கை முடிவின்றி வாயிலிருந்து உதிரம் உமிழ்வதை போல பாய்ந்தோடியது.
தரு எலாம் உடல்; தெற்றி எலாம் உடல்; சதுக்கத்து
உரு எலாம் உடல்; உவரி எலாம் உடல்; உள்ளூர்க்
கரு எலாம் உடல்; காயம் எலாம் உடல்; அரக்கர்
தெரு எலாம் உடல்; தேயம் எலாம் உடல் – சிதறி
மரம் எல்லாம் உடல்; திண்ணை எல்லாம் உடல்; தெரு முனைகளில் எல்லாம் உடல்; கடல் எல்லாம் உடல்; ஊர் நடு எல்லாம் உடல்; ஆகாயம் எல்லாம் உடல்; தெரு எல்லாம் உடல்; தேசமெல்லாம் உடல் – சிதறிக்கிடந்தன.
ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்; –
தான் எலாரையும், மாருதி சாடுகை தவிரான்,
மீன் எலாம் உயிர்; மேகம் எலாம் உயிர்; மேல் மேல்
வான் எலாம் உயிர்; மற்றும் எலாம் உயிர் – சுற்றி
உடல்களில் இருந்து உயிரை பிரித்து எடுத்துச்செல்லும் காலன் ஓய்ந்தே விட்டான். எல்லாரையும் அடித்துக்கொல்வதை அனுமன் நிறுத்தவேயில்லை. அவனால் கொல்லப்பட்டவர்களின் உயிர்கள் விண்மீன்களில் எல்லாம், மேகமெல்லாம், அதுக்கும் மேலே மேலே வானமெல்லாம்… அதையும் தாண்டி அலைந்துகொண்டிருந்தன.
5 replies on “செங்களம் படக் கொன்று….”
தேவர் மகன் தொடங்கி 300 தொட்டு அசோகவனம் சென்று குறுந்தொகையில் நிறைவுற்றாலும் பதிவு மனிதனின் அடிப்படைப்பண்பு வன்முறை என்பதை நிலைநாட்டுகிறது. நியாண்டர்தால் சகோதரர்களை அழித்தொழித்துவிட்டே ஹோமோசெபியன்ஸ் ஆகிய நாம் இராமனையும்,சீதையையும் அனுமனையும் வார்த்தெடுத்திருக்கிறோம். நீட்சியாக கீதையிலும் பைபிளிலும், குரானிலும் தர்மம் மற்றும் அன்புசெய்தல் குறித்து பேசியும் வருகிறோம். நல்ல பதிவு. மனிதநேயம் தழைப்பதாக 🙂
Amazing
நல்ல பதிவு..வாழ்த்துக்கள்
….
ஓம் …என்ற மலக்கட்டை
கழிய வைத்தால்
உடலில் உள்ள வாதைஎல்லாம்
ஓடிபோச்சு
தாம் …என்ற சிறுநீரை
தெளிய வைத்தால்
சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு
கூம் …என்ற உமிழ் நீரை
முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு
கோ ….வென்ற இவை மூன்றும்
களங்கம் அற்றால்
கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே …!
-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ….பாடல்
நல்ல பதிவு நண்பா.
Very good article siddharth. Enjoyed the poems.