“கார்னகி மெலன் பல்கலைக்கழக நண்பர்கள், நமது தேவாலயம், உற்றார் உறவினர் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். நீங்கள் செய்த அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளோம். இந்த கதைக்கு சுகமான முடிவு இல்லை, மன்னிக்க வேண்டும்.”
– ராண்டி பாஷ் [Randy Pausch] (ஆகஸ்ட் 27, 2007).
கார்னகி மெலன் பல்கலைக்கழக பேராசிரியரான ராண்டி பாஷுக்கு கணைய புற்றுநோய் இருப்பது 2006ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தெரிந்தது. அதற்கு முன் ராண்டி ஒரு பேராசிரியர், விர்ச்சுவல் ரியாலிட்டியில் உலகறிந்த ஆளுமை, கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் விர்ச்சுவல் ரியால்லிட்டி பாட திட்டத்தை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர், ஆலிஸ் என்ற மென்பொருளின் உருவாக்க குழுவை கட்டமைத்துக்கொண்டிருந்தவர். ராண்டி பாஷ் சென்ற மாதம் (ஜூலை 25, 2008) இறந்துவிட்டார்.
மீள்பார்வையில் ஒன்று தெரிகிறது. இன்று ராண்டியின் சாதனைகள் அனைத்தும் (ஒன்றை தவிர) அவரது புற்றுநோய்க்கு முன்னமே தொடங்கப்பட்டுவிட்டன. பின் ஏன் இந்த கட்டுரை? உலகில் எத்தனையோ பேருக்கு புற்றுநோய் வருகிறது. ராண்டியில் அப்படி என்ன சிறப்பு? ஒன்று இருக்கிறது. ராண்டி தொடங்கிய எந்த பணியும் புற்றுநோயின் காரணம் நிறுத்தப்படவில்லை. ராண்டியின் வாழ்வில் புற்றுநோய் தடைக்கல்லாக அல்ல, ஒரு கிரியாஊக்கயாகவே செயல்பட்டது. மெலும் துரிதமாய் நிகழ்ந்தன பணிகள். தனக்குப்பின் யார் தனது திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப் போகின்றனர் என்பதை குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க முடிந்தது அவரால். மரணச்செய்தியை ஊக்கச்சக்தியாக மாற்றியது, மரணத்தினை கடைசி கணம் வரை கண்ணோடு கண் பார்த்தது இவை தான் ராண்டியின் ஆகப்பெரிய சாதனைகளாக எனக்கு தோன்றுகிறது. புனைவுகளில் மரணத்தை நோக்கி புன்முறுவலிட்டவர்களின் பட்டியல் நீளமானது. அது புனைவு என்பதனால் ஒரு கட்டத்திற்கு மேல் தாக்கம் ஏற்படுத்தாது. ஆனால் நம்மிடையே வாழும் ஒரு மனிதர் இச்செயலை புரிகையில் “அவன் மானுடன், இது சாத்தியமாகி இருக்கிறது அவனுக்கு. அதனால் நானும் ஓர் மானுடன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்ற மனநிலைக்கு இட்டுச்செல்கிறது. எங்கோ அமெரிக்காவில் வாழ்ந்த ராண்டி இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் கண்கள் பனித்தது நாம் ஏதோ ஓர் இழையினால் பின்னப்பட்டுள்ளோம் என்பதனால் தான்.
ஆலிஸ் பற்றி சிறிது பேசலாம்.
ஒவ்வொரு வருடமும் ஆண்டு விடுமுறை தொடங்கியதும் தொடங்கிவிடும் எந்த ஊருக்கு போவது என்ற விவாதம். ஊர் என்றால் அம்மா ஊரான மதுராந்தகம், அப்பா ஊரான திருவண்ணாமலை, இரண்டில் ஒன்று. இரண்டுக்குமே தாம்பரம் வழியாகத்தான் போக வேண்டும். தாம்பரத்தில் ஒரு கண் தெரியாதவர் கைக்குட்டைகள் விற்றபடி பேருந்தில் ஏறுவார். கைக்குட்டை மிக மிக சுமார் ரகம் தான். ஆனாலும் அதை கடமையாக வாங்குபவர்கள் இருவராவது இருப்பார்கள் பேருந்தில். அங்கு கைக்குட்டையின் தரத்தினை தீர்மானித்தது கைக்குட்டை அல்ல, விற்றவரின் ஊனம். ஆலிஸ் பற்றி பேசுகையில் இது நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
ஆலிஸ் என்ற இந்த நிரலின் பயன்பாட்டினை உணர ராண்டி பாஷின் புற்றுநோய் குறித்து அறிந்திருக்க வேண்டியதில்லை. தன் பலத்திலேயே நிற்கும் தகுதி ஆலிஸுக்கு உண்டு. ஆலிஸ் என்பது சிறு வயதினருக்கு கணினி நிரலாக்கத்தின் (Programming) (குறிப்பாக பொருள் சார் நிரலாக்கத்தின் [Object Oriented Programming]) அடிப்படைகளை விளையாட்டு முறையில் கற்றுத்தரும் ஒரு நிரல். அமெரிக்காவில் சில ஆண்டுகளாக கல்லூரிகளில் கணினி துறையில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்துள்ளது. கணினி நிரல் உருவாக்கம் குறித்த ஒரு வித ஒவ்வாமை பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு உருவாகிவிடுவதாலேயே இது நிகழ்வதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஆக பிரச்சனையின் தீர்வு பள்ளியில் கணினியினை ஆர்வமூட்டும் வகையில் கற்றுத்தருவது தான். இதை சரி செய்வதென முடிவெடுத்த ராண்டி உருவாக்கிய நிரல் தான் ஆலிஸ்.
ஆலிஸ் மூலம் நாம் நிரல்களை “எழுதலாம்”, ஒரு வரி கூட எழுதாமல். ஆலிஸ் பற்றி அறிந்துகொள்ள பொருள் சார் நிரலாக்கம் குறித்து புரிந்துகொள்ள வேண்டும். பொருள் சார் நிரலாக்கம் (Object Oriented Programming) என்ற நிரல் உருவாக்க கோட்பாட்டின் படி அனைத்துமே பொருட்கள் தாம். ஒவ்வொரு பொருளுக்கும் சில தன்மைகள் (Properties) மற்றும் செயல்பாடுகள் (Behaviour) உண்டு. பொருட்கள் தத்தமக்குள் நிகழ்த்தும் உறவாடல்களே ஒரு நிரலின் நிகழ்வுகளாய் விரிகின்றன. உதாரணத்திற்கு, வங்கி செயல்பாட்டிற்கான நிரல் உருவாக்க, அந்த “சிக்கல் களத்தில்” (Problem Space) என்ன பொருட்கள் இருக்கிறதென பார்க்க வேண்டும். வங்கி கணக்கு என்பது ஒரு பொருள். வங்கி கணக்கிற்கு வைப்புத்தொகை (Balance) என்பது ஒரு தன்மை. பணம் கணக்கிற்கு உள்ளே வருவதும் (Deposit), வெளியேறுவதும் (Withdrawal) செயல்பாடுகள். ஒரு பரிவர்தனை (transaction) நிகழ ஒரு கணக்கிலிருந்து மற்றோர் கணக்கிற்கு பணம் செல்ல வேண்டும். அதாவது இரு “வங்கி கணக்கு” பொருட்கள் தமக்குள் உறவாட வேண்டும். இதை நான் இப்போது விளக்கியது போலவே 6வது படிக்கும் குழந்தைக்கு சொல்லிக்கொடுத்தால் என்ன ஆகும்?
இங்கு தான் ஆலிஸ் முக்கிய இடம் வகிக்கிறது. பொருள் சார் நிரலாக்கத்தில் அடிப்படைகளை கற்றுத்தர ஆலிஸ் பயன்படுத்தும் உத்தி இது தான். ஆலிஸை திறந்தவுடன் நம்முன் ஒரு “உலகம்” இருக்கும். இப்போதைக்கு அந்த உலகத்தில் எதுவும் இல்லை. வெறும் பாழ் [படம் 1]. இவ்வுலகில் நாம் வீடு, மனிதன், பூச்சி என பல்வேறு விதமான பொருட்களை சேர்க்கலாம். ஒவ்வொரு பொருளின் தன்மையை மாற்றலாம். செயல்பாடுகளை சேர்க்கலாம். உதாரணமாக சூரியன் என்ற பொருளை சேர்க்கலாம். சூரியனுக்கு “இங்கு இருந்து இவ்வளவு தூரம் நகர்ந்து அதோ மலைக்கு பின்னே போய் மறை” என்ற செயல்பாட்டினை தரலாம். அது நிகழும் போதே “உலகில்” “வெளிச்சத்தை குறைத்துக்கொள்” என்ற செயல்பாட்டினை தரலாம். விளையாட்டாக பாவித்தே இதை குழந்தைகள் செய்யலாம். ஆனால் இவற்றின் மூலம் அவர்கள் நிரலாக்கத்தின் பல அடிப்படைகளை கற்காமலேயே உள்வாங்கிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நிரலின் முடிவும் ஒரு animationஆக காட்சியளிக்கும் [படம் 2]. இவற்றை avi கோப்புகளாகவும் சேமிக்க முடியும் . ஆலிஸ் குழு இப்போது அடுத்த பதிப்பான 3.0வை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். 2.0 குறிப்பாக எந்த ஒரு கணினி மொழியையும் கற்றுத்தருவதில்லை. நிரலாக்கத்தின் பொது விதிகளை மட்டுமே கற்றுத்தருகிறது. ஆனால் ஆலிஸ் 3.0 மூலம் நாம் ஜாவா மொழியை கற்றுக்கொள்ள முடியும்.

படம் 1 – “பாழ்” உலகம்.
படம் 2 : நான் “எழுதிய” நிரல் – காட்சிக்கோப்பாக
பத்து சதவிகித அமெரிக்க பள்ளிகள் ஆலிஸ் மூலம் கணினி நிரலாக்கத்தினை கற்றுத்தருவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறார்கள். இந்தியாவிலும் இந்த நிரலினை பயன்படுத்தி கற்றுக்கொடுத்தால் நிச்சயம் பலன் தரும் என்றே தோன்றுகிறது.
ராண்டி பாஷ் 2007 செப்டம்பர் மாதம் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் “கடைசி உரை” (Last Lecture) என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார். இது இணையத்தில் மிகப்பரவலாக பார்க்கப்பட்டது. அந்த உரையில் ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார். ‘மோசஸின் வாக்களிக்கப்பட்ட பூமி (Promised Land) போல தான் எனக்கு ஆலிஸ் 3.0. அங்கு தேனும் பாலும் ஓடுகிறது என எனக்கு தெரியும். உங்களுக்கு வழியையும் காட்டுவேன். ஆனால் நீங்கள் அங்கு சென்று சேரும் போது நான் இருக்க மாட்டேன்”. அடுத்த வருட கோடையில் தான் ஆலிஸ் 3.0 வெளிவரவிருக்கிறது. ராண்டி கைகாட்டிய திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது அவர் உருவாக்கிய குழு.
சிறு வயதில் தினமணி கதிரில் பார்த்த ஒரு புகைப்படம். பசுமை சூழ்ந்த குளம். அதில் ஒரு பெண் குளித்துக்கொண்டிருக்கிறாள். தன் நீண்ட மயிற்கற்றைகளை காற்றில் எம்ப விட, அவற்றிலிருந்து மேலெழும் நீர்த்திவலைகள் அந்தரத்தில் உறைந்து நிற்கின்றன. கண்ணைப்பரிக்கும் அழகு மிலிரும் படம் அது. அதன் கீழ் இந்த வாசகம். கண நேர வாழ்வெனினும் காட்சியாய் வாழ். ராண்டி பாஷின் வாழ்க்கையை நோக்கினால் இது தான் பிரதானமாய் தெரிகிறது. கண நேர வாழ்வெனினும் காட்சியாய் வாழ்தல்.
சுட்டிகள் :
ராண்டி பற்றிய விக்கி பக்கம் : http://en.wikipedia.org/wiki/Randy_Pausch
ராண்டியின் “கடைசி உரை” : http://en.wikipedia.org/wiki/Really_Achieving_Your_Childhood_Dreams
கடைசி உரை கூகுல் வீடியோவில் படமாக : http://video.google.com/videoplay?docid=-5700431505846055184
ஆலிஸ் தளம் : http://www.alice.org
2 replies on “காட்சியாய் வாழ்தல்”
ம்ம் நல்ல தொகுப்பு. இவர் பற்றி நான் ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறேன். நல்ல ம்யற்சி. இவரை பற்றி தமிழில் வெளீயிட்டவருக்கு எனது வாழ்த்துக்கள்…
அருமை சித்தார்த். பகிர்வுக்கு நன்றி.