விதிர்²-த்தல் [ vitir²-ttal ] 11 v vitir. [T. Tu. vedaru, K. bidiru.] intr.–1. To tremble, quiver; நடுங்கு தல். 2. To be afraid; அஞ்சுதல். (W.)–tr. 1. To scatter, throw about; சிதறுதல்.
சொல் என்பதோர் ஒலி வடிவம். சொற்களால் ஆனதல்ல மொழி. சொல் எவற்றின் ஒலியாகிறதோ அவற்றால் ஆனது மொழி. இரு சற்றே மாறுபட்ட பொருட்கள் ஒரே சொல்லை குறிப்பானாய் கொண்டிருப்பதும், இடம் பொறுத்து அர்த்தம் கொள்ளப்படுவதும் வழக்கம் தான்.
புறநானூற்று கவிதைகள் இரண்டு. இரண்டிலும் விதிர்ப்பு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அச்சொல்லினைக்கொண்டு உருவாக்கப்படும் களங்களுக்கிடையே எத்தனை தொலைவு…
விதிர்த்தல் – To scatter, throw about; சிதறுதல்.
188. மக்களை இல்லோர்!
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,மயக்குறு மக்களை இல்லோர்க்குப்பயக்குறை இல்லைத் – தாம் வாழும் நாளே.– பாண்டியன் அறிவுடை நம்பி
பல உணவுகளை படைத்து பலரோடு உண்ணும்
எல்லாம் பெற்ற செல்வர் ஆயினும், இடை பட
குறுகுறுவென நடந்து, சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் குழப்பியும்
நெய் சேர்ந்த சாதத்தை உடலெல்லாம் உதிர்த்தும்
மயக்கும் மக்களை இல்லாதவர்க்கு
பயனேதும் இல்லை தாம் வாழும் நாளே
——-
விதிர்ப்பு – Trembling, shivering, shaking from fear; நடுக்கம்.
255. முன்கை பற்றி நடத்தி!
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் அப்பெண். செல்லும் வழியில் ஓர் கானகத்தில் காதலன் உயிர் துறக்கிறான். வெயிலில் கிடக்கும் அவனது உடலை பார்த்தபடி பாடுகிறாள்…
ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னைஇன்னாது உற்ற அறனில் கூற்றே!திரைவளை முன்கை பற்றி-வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!– வன்பரணர்
ஐயோ எனில் புலி வருமோ என அஞ்சுகிறேன்
அனைத்தெடுக்க முயன்றேன், விரிந்த மார்பை எடுக்க முடியவில்லை
என் போல் பெரும் நடுக்கமுறுக உன்னை
கொன்ற அறமில்லாத விதி!
வளையிட்ட என் கைபற்றி
நிழலுக்கு போகலாம்
நடந்துவாயேன் சிறிது
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்ப்பது தரும் உணர்விற்கும் என் போல் பெருவிதிர்ப்புறுக என்று கூற்றுவனுக்கு இடப்படும் சாபத்திற்கும் உணர்வு ரீதியில் சில ஒளியாண்டுகள் தூரம் இருக்கும். ஆனால் அவ்விரிவை விதிர்ப்பு எனும் சொல் கடக்கிறது இங்கு அனாயாசமாய்.
3 replies on “சொல் விரிவு – இரு புறநானூற்றுப் பாடல்கள்”
புதிதாய் ஒரு சொல்லையும், இரு பாடல்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
வேர்ட்பிரெஸ் தமிழாக்கம் கருத்த உங்கள் கருத்துகள், வழு அறிக்கைகள், பங்களிப்புகளைத் தர http://groups.google.com/group/tamil_wordpress_translation குழுமத்துக்கு வரவேற்கிறோம். நன்றி.
ஒரு சொல் தமிழில் இடம் நோக்கி வேறு வேறு பொருள்களைப் பெறுதல் இயல்பு. அருமையான விளக்கம் – புறநானூற்றில் இருந்து இரு பாடல்களில் – இரு வேறு பொருள்களில் – இரு வேறு இடங்களில் ……. நல்வாழ்த்துகள் சித்து – நட்புடன் சீனா