ஒரு படைப்பிற்கு, படைப்பாளியை தருவது என்பது அப்படைப்பிற்கு ஓரு முற்றுப்புள்ளியை, முடிவான அடையாளத்தை தந்து, “எழுதுதலை” முடித்துவைக்கும் செயலாகும்.
– ரோலண்ட் பார்த்தெஸ் (”ஆசிரியனின் மரணம்” கட்டுரையில்)
நான் வாசித்தவரை, குறுந்தொகையை உரையாடல்களின் தொகுப்பு என பொதுவாக வகைப்படுத்தலாம். தலைவியும் தோழியும் தலைவனும் தோழனும் தத்தமக்குள் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கவிதையும் ஏதோவோர் நாடகத்தின் உச்சக்காட்சியின் உறைகணமாக நிற்கிறது. அக்கணத்தின் உக்கிர உணர்வுகள் சொற்களாய் வழிந்தோடுவது தான் மீண்டும் மீண்டும் குறுந்தொகையில் நிகழ்கிறது. புறவயமான இச்சொற்களை சரடாகக் கொண்டு வாசக அகம் மேலேறி அதன் உச்சத்தை அடைகிறது. எனில் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாசல் மட்டுமே… அதனூடே நாம் செல்லும் தூரத்தை நமது அகமே தீர்மானிக்கிறது. இதை ரோலந்த் பார்தஸ் என்ற பிரென்ச் மொழியியலாளர் “வாசித்தல்-எழுதுதல்” (Reading-Writing) என்கிறார். வாசகன் வாசகன் மட்டுமல்ல. அவனளவில் அவனது வாசிப்பும் ஒருவகை “எழுதுதலே”. வாசிப்பின் அலகிலா சாத்தியங்களினூடே அவன் நிகழ்த்தும் பயணம் அது.
ஒரு குறுந்தொகை கவிதை. கவிதையை தனிப்பரப்பாய் கொண்டால், இது ஒரு விவரணை மட்டுமே…
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.
-தாமோதரனார்.
சூரியன் அகன்ற வானத்தில்
பாவம் இந்தப் பறவை
நெடிந்துயர்ந்த மரக்கிளைகளில் காத்திருக்கும்
பிள்ளைகளின் உள்வாய்க்கு புகட்ட
இரை கொண்டு விரைகிறது
தலைவி கூற்றாக வரும் இக்கவிதை பிரிவின் துயரை, தலைவனின் நிலையை குறித்த வருந்தத்தை, தந்தையை எதிர்நோக்கி நிற்கும் தன் பிள்ளைகளின் ஏக்கத்தை, இப்பறவையை கண்டாவது அவன் திரும்பக்கூடாதா என்ற ஆதங்கத்தை பேசுகிறது.
ஆனால் இதை தலைவியின் கூற்றாக மட்டும் ஏன் காண வேண்டும்? தலைவனின் ‘தனைப் போல் பறவை” என்ற கழிவிரக்க வெளிப்பாடாக, வெறும் கையுடன் திரும்பும் அவனது ஏக்கமாக, தூரம் வந்துவிட்டவனின் பிள்ளைகள் குறித்த நினைவாக….
இவை ஏதுமன்றி, கவிஞனின், அந்திவேளையில் இரைகொண்டு விரையும் பறவையைக் குறித்த மென்சோகமாகவும் காணலாம் அல்லவா?
ஒரு படைப்பு என்பது ஒவ்வொரு வாசிப்பிலும் நீட்சி கொள்ளும் பரப்பு. படைப்பாளி படைத்து முடித்தவுடன் அது தனி உரு கொள்கிறது. இனி அதன் பயணத்தை அது தொடரும். அந்த படைப்பாளியின் மூலம் பிறந்தது அதற்கு ஒரு எதேச்சை மட்டுமே. படைப்பாளியே முக்கியமில்லை எனும் போது, உரையாசிரியர்கள் வகுத்த திணை துறை கூற்று இத்தியாதிகள் குறுந்தொகையின் கவிதை அனுபவத்தை பெற அத்தனை முக்கியமா என தெரியவில்லை. எனக்கு இவற்றின் முழு ஆழம் தெரியாததால் வரும் கூற்றாக இருக்கலாம் இது. ஆனால் குறுந்தொகையிலிருந்து நான் எதை பெற்றேனோ, அதை பெற எனக்கு இவை தேவைப்படவில்லை. இப்படி சொல்வதன் நோக்கம் மேலும் ஓர் வாசிப்பிற்கான சாத்தியத்தை கண்டடைதலேயன்றி சங்கப்பாடல்களின் மீது நிகழ்த்தப்படும் மறபார்ந்த வாசிப்பை புறம்தள்ளுதல் அல்ல.
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
– வெள்ளிவீதியார்
கால்கள் ஓய்ந்தன, கண்கள்
பார்த்துப் பார்த்து வலுவிழந்தன
அகண்டு இருண்ட வானத்து வின்மீன்களை விட
அதிகம், இந்த உலகத்தில் பிறர்.
என்ற கவிதை செவிலித்தாயின் கூற்றாக வருகிறது. இக்கவிதையின் குவிமையம் “பிறர்” என்ற அந்த ஒரு சொல். கவிதையின் அத்தனை சொற்களும் சூரியகாந்தி மலர்களைப் போல, ஞாயிறெனச் சுடரும் அப்பிறரை நோக்கியே திரும்பியுள்ளன. இக்கவிதையின் எல்லை செவிலித்தாயின் “பிறருடன்” மட்டுமே முடிவடைகிறதா என்ன?
“கசார்களின் அகராதி” நாவலில் மிலோராட் பாவிச், அர்த்தங்கள் கொள்ளும் அலகிலா சாத்தியங்களை குறித்து இப்படி எழுதுகிறார்.
…yet, once I tell you what it is, it will no longer be all the things it is not.
– Milorad Pavic (Dictionary of Khazhars)
5 replies on “அலகிலா சாத்தியங்களினூடே….”
அலகிலா என்றவுடன் பா.ராகவன் எழுதியுள்ள அருமையான புத்தகத்தை பற்றி ஏதோ சொல்லியுள்ளீர்களோ என்று நினைத்தேன்,முடிந்தால் படித்து பாருங்கள் அருமையாக உள்ளது.
“தூரம் வந்துவிட்டவனின் பிள்ளைகள் குறித்த நினைவாக….”
பொருள் தேடத் தன் புலம் பிரிதல் தொடர்ந்துகொண்டேயிருக்கும் துயரம்.
உங்கள் பதிவுகளை ஒருநாள் நிதானமாக அமர்ந்து படித்தாலாவது கொஞ்சம் பழந்தமிழ் இலக்கிய அறிவு வருகிறதா என்று பார்க்கலாம்.எஸ்.ரா.வேறு இணைப்புக் கொடுத்திருக்கிறார்:)வாழ்த்துக்கள்.
//வாசகன் வாசகன் மட்டுமல்ல. அவனளவில் அவனது வாசிப்பும் ஒருவகை “எழுதுதலே”. வாசிப்பின் அலகிலா சாத்தியங்களினூடே அவன் நிகழ்த்தும் பயணம் அது.//
மிக்க உண்மை…
சித்தார்த் மோரியோடான செவ்வாய்க்கிழமைகளை தொடர்ந்து எழுதுங்கள்
சித்தார்த என்ன ஆனது மோரியோடான செவ்வாய்கிழமைகள்.
நீண்ட நாளாக ஏதும்காணவில்லை. கடும் பணிசுமையா? தொடர்ந்து எழுதுங்கள். உங்களின் எழுத்துக்களும் தளமும் பிரபலம் அடையும் நேரத்தில் இதுபோன்ற இடைவெளி பிழையாகிவிடும்.
அன்புடன்
RM_SLV
[…] அலகிலா சாத்தியங்களினூடே […]