சென்ற நூற்றாண்டின் கடைசியில் – சரியாக சொல்ல வேண்டுமென்றால் 1894ல் – பிரான்ஸில் இருந்த ஜெர்மானிய தூதரகத்தின் அறை ஒன்றை சுத்தம் செய்துகொண்டிருந்த பிரென்ச் வேலைக்காரியின் கைகளுக்கு அவ்வறையின் குப்பை தொட்டியில் இருந்து பிரென்ச் ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஒரு காகிதம் கிடைத்தது. அக்காகிதத்தில் குறிப்பிடப்பட்ட பிரென்ச் ராணுவ பிரிவில் பணிபுரிந்தவர்களில் Alfred Dreyfus என்ற யூதரும் ஒருவர். அதிக விசாரனைகள் ஏதுமின்றி வழக்கு வெகு விரைவாக முடிக்கப்பட்டு டிரெய்ஃபஸ் 1895ஆம் ஆண்டு ஆயுள்தண்டனையுடன் சிறையிலடைக்கப்பட்டார். பல நூறு ஆண்டுகளாக யூதர்கள் பிரான்சில் வாழ்ந்துவந்திருந்த போதிலும் பிரென்ச் சமூக அமைப்பில் அவர்கள் அன்னியர்களாகவே பார்க்கப்பட்டனர். ராணுவ ரகசியம் கசிந்துள்ளது என்றவுடன் அன்னியராக பார்க்கப்பட்ட டிரெய்ஃபஸ் மீது மிக இயல்பாய் பழிசுமத்தப்பட்டு விட்டது. இது பின்னர் பெரிய பிரச்சனையாக வெடித்து டிரெய்ஃபஸ் ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் என பிரான்ஸ் முழுதும் விவாதங்கள் நடந்தன. பின்னர் உண்மையான குற்றவாளி பிடிக்கப்பட்டு, டிரெய்ஃபஸ் விடுவிக்கப்பட்டார். மீண்டும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, முதலாம் உலக போரில் அதிகாரியான பணிபுரிந்தார்.
இந்த சரித்திர நிகழ்வை Max I Dimont எழுதிய Jews, God and History என்ற புத்தகத்தில் முதல்முறையாக 6 வருடங்களுக்கு முன் படித்தேன். இந்த ஆறு வருடங்களில் பல முறை பல கட்டுரைகளில் டிரெய்ஃபஸ் எட்டுப்பார்த்து போனார். இது வரை அவரது நிலையில் என்னை வைத்து பார்க்கவெல்லாம் தோன்றியதே இல்லை. அதாவது 3 வாரங்களுக்கு முன்பு வரை.
என் தாய் மொழி தெலுங்கு. பேசுவதோடு சரி, தெலுங்கை எழுத படிக்க எல்லாம் தெரியாது. எங்கள் குடும்பங்களில் இதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சரி பாதி, வெறும் தமிழ் பேசும் குடும்பங்களாகிவிட்டன. வீட்டில் பேச்சு மொழி தான் தெலுங்கே தவிர, (திருப்பதி தவிர்த்து) ஆந்திராவிற்கு போனது கூட கிடையாது. எங்கள் முன்னோர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர பகுதிகளில் இருந்து இங்கு வந்திருக்கலாம். கோபல்ல கிராமத்தில் கி.ரா இதை தொட்டு சென்றிருந்தார். அதை படிக்கும் வரை, நாங்கள் வெளியில் இருந்து வந்திருப்போம் என்று கூட தோன்றியதில்லை. வீட்டில் தெலுங்கும் வெளியில் தமிழும் பேசுவது ஒரு பெரிய விஷயமாகவே பட்டதில்லை. அம்மா, தீனி வினண்டா, “வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்த்துதறி…”… எந்தோ அந்தங்கா உந்தி சூடண்டாமி ஆண்டாளோட லைன்ஸ்…. இப்படி தான் வீட்டில் பேச்சு ஓடும்.
மூன்று வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் பாரதிராஜாவின் பேட்டி. அதில் கடைசி கேள்வி “விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து?” அதற்கு இவர் இப்படி பதில் அளித்தார். “போனதெல்லாம் போனதாகவே இருக்கட்டும். இனி மேல் நமை ஆள்வது மண்ணின் மைந்தனாகத் தான் இருக்கவேண்டும்.”. படித்த கணத்திலிருந்து ஒரு நிலையின்மை இருந்துகொண்டே இருக்கிறது. எனில் நான் யார்? வீட்டில் ஆண்டாளையும் பாரதியையும் பற்றி (தெலுங்கிலே) பேசும் நாங்கள் அன்னியர்களா? “மண்ணின் மைந்தர்கள்” என்ற ஒரு சொல்லின் மூலம் தனிப்பட்ட முறையில் அவர் என்னை பார்த்து போடா வெளியே என்று சொல்வதைப் போல பட்டது. டிரெய்ஃபஸுடன் இணைத்து பார்க்கும் அளவிற்கு உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது அந்த வாக்கியம்.
விஜயகாந்த் அரசியல் செய்வதை பற்றி எனக்கு ஒரு கருத்தும் இல்லை. ஆனால் அவரை தாக்குவதாய் நினைத்துக்கொண்டு பாரதிராஜா என்னை தாக்கியதை கண்டித்தே இவ்வுரை. பூங்குன்றனை எல்லாம் துணைக்கு அழைக்காமல் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். “ஐயா… கலைஞர் தொலைக்காட்சிக்கு தெக்கத்தி பொண்ண எடுங்க.. ரொம்ப நாளா பேசிக்கிட்டு இருக்கற குற்றப்பரம்பரைய முடிங்க.. ஆயிரம் வேல கெடக்குது உங்களுக்கு. எனக்கு சான்றிதழ் வழங்கற வேலையெல்லாம் உங்களுக்கு வேணாம் ஐயா”.
இதில் அச்சமூட்டும் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கிறேன். சில சமயங்களில் ஒரு சொல்லைக்கொண்டே ஓர் மதில் சுவரை எழுப்பிவிட முடிகிறது. எனில் அதற்கு சொல்லுக்குரியவர் காரணமா, அல்லது எனது உள்ளார்ந்த பாதுகாப்பின்மை (insecurity) காரணமா?
13 replies on “பாரதிராஜாவின் மண்ணின் மைந்தர்கள்”
Alfred Deyfus பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். பள்ளிப்பருவத்தின் இறுதி வருடங்களில் “கைபர் கணவாய் வழியே வந்து நுழைந்தவர்கள்” என்று என்னை நோக்கி எரியப்பட்ட அம்புகளில் நானும் பெரும் பாதுகாப்பின்மையினை உணர்ந்திருக்கின்றேன். காலப்போக்கில் பெரும் நகைப்பிற்கிடமாகவே இருக்கிறது இது போன்ற செய்திகளும், உணர்வுகளும்.
எனக்கும் பூங்குன்றனாரே துணை இது போன்ற விஷயங்களில் எப்போதும்.
மிகவும் ஒரு சங்கடமான சூழ்நிலையை ஒரு வரலாற்று சம்பவத்துடன் சொல்லியிருக்கின்றீர்கள். அடையாளப்படுத்துவதும் மற்றவர்களில் குறிப்பிட்ட அடையாளங்களை தேடுவதும் தான் மிகப் பெரிய பிரச்சனைகளை ஆரம்பிக்கின்றது என நினைக்கிறேன். பாரதிராஜா போன்ற கலைஞர்கள் இவற்றை கடக்க வேண்டியவர்கள். எல்லைகளை தேடுவது அரசியல்வாதிகளுக்குரிய வேலையல்லவா?
சித்தார்த் , பாரதிராசா சொல்றதுக்கு எல்லாம் போய் இவ்ளோ ஃபீல் ஆவலாமா? அவருக்குப் படம் எடுக்கத் தெரியும், சில சமயம் நல்ல, பல சமயங்களில் மோசமான.
அதுக்கு மேலே அவருக்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கத் தேவையில்லை.
//சித்தார்த் , பாரதிராசா சொல்றதுக்கு எல்லாம் போய் இவ்ளோ ஃபீல் ஆவலாமா//
//அவருக்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கத் தேவையில்லை//
அதே அதே!!!!
மற்றபடி நீங்க மேலே சொன்ன தகவலை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
அறுவைசிகிச்சை செய்யும் போது வலிக்கத்தான் செய்யும். வலிக்கும் என்பதற்காக சிகிச்சை செய்யாமல் இருக்கமுடியாது. எல்லோரையும் ஓர்தாய் மக்களாய் தமிழினினம் நினைத்தது போதும். காடு மேடென்று பார்க்காமல் அனைத்தும் நம் நிலமே, நம் உறவே என்று பார்த்ததால் இந்தத் தமிழினம் இழந்தது ஏராளம். தமிழினம் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடகத்திலோ தமிழன் முதலமைச்சராக முடியுமா? ஒருபோதும் முடியாது. அப்படி நடக்கவும் கூடாது. தமிழ் நாட்டின் நிலமை என்ன என்பதை தாங்கள் சிந்திக்கவேண்டும். அவரவர் மண்ணை அவரவர் ஆளவேண்டும். இதுபற்றி நியாய உணர்வுடன் அனைவரும் சிந்திக்கவேண்டும்…
சிவராமன், கோசலன், பிரகாஷ், பரத் கருத்துக்களுக்கு நன்றி.
செந்தமிழன்.. என் கேள்வி இன்னும் அடிப்படையானது. வீட்டுல் தெலுங்கு பேசும் மற்றபடி தமிழ் வாழ்வையே வாழும் நாங்கள் யார்?
//இதில் அச்சமூட்டும் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கிறேன். சில சமயங்களில் ஒரு சொல்லைக்கொண்டே ஓர் மதில் சுவரை எழுப்பிவிட முடிகிறது. எனில் அதற்கு சொல்லுக்குரியவர் காரணமா, அல்லது எனது உள்ளார்ந்த பாதுகாப்பின்மை (insecurity) காரணமா?//
இரண்டுமேதான். பாதுகாப்பின்மை என்பதுவும் ஒரு சமூகக் காரணியாக திணிக்கப்பட்டதுதானே. இஸ்லாமியர்களை அந்நியர்கள் என்கிற ஆர்.எஸ்.எஸ் போலத்தான் இது. வாழ்வியல் சார்ந்த பிரச்சனை அல்ல. அரசியல் பிரச்சனை. தமீழக மக்களின் ஏகப்பிரதிநிதியாக நீங்கள் யாரையும் கருதிக் கொள்ள வேண்டியதில்லை. மண்ணின் மைந்தன் என்று பேசும் பாரதிராஜா எத்தனை மண்ணின் மைந்தர்கள் அல்லது மகள்களை வைத்து படம் பன்னிவிட்டார். இதெல்லாம் பிழைப்பு அல்லது இருத்தல் சம்பந்தப்படட்டது. அடிப்படையில் மக்களிடம் வேறுபாடு இல்லை. தேசியம், இனம், மொழி எல்லாம் உள்ளெ வெளியே என ஆடப்படும் ஒருவகை சீட்டாட்டம். அவனுடைய வெட்டு கார்டு விழுந்த விட்டால் வெற்றி எனஓடிவிடுவான்.
தேர்ந்த இலக்கியப்பார்வை உள்ள நீங்கள் இதற்காக வருந்த வேண்டியதில்லை. எப்படீயோ பாரதிராஜா உருப்படியாக ஒரு யூதர் பற்றிய வரலாற்றை வெளிக் கொண்டுவந்தார் உங்கள் மூலமாக எங்களக்கு தெரியாததை.
நன்றி…
இதெல்லாம் உள்ளே வெளியே என ஆடகிற ஒரு சூதாட்டம் விட்டுத் தள்ளுங்க… இவர் தமிழகத்தின் ஏகப்பிரதிநிதியுமல்ல.. விஜயகாந்த் தெலுங்கர்களீன் ஏகப்பிரதிநிதியுமல்ல..
தேர்ந்த இலக்கியப் பார்வை உள்ள நீங்கள் இதற்காக ஏன் கவலைப்பட வேண்டாம்?
யார் முதலில் வந்தார்கள் என்பது கால எல்லையைக் குறிக்காத ஒரு ஆபத்த கேள்வி..
தெற்கில் தமிழ் பேசுபவர்கள் தெலுங்கு பேசும் “மனவாடு”களைக் கண்டு கடுப்படைவதற்கு காரணங்கள் இருக்கத் தான் செய்கின்றன.
பிள்ளைஅகளை தெலுங்கு பேசச் சொல்வது – பேசுவதோ bastardized தெலுங்கு. வீட்டில் தமிழ் பேசாதே என்று அறிவுரை. நம்மெல்லாம் தெலுங்கு என்று தனி அடையாளம் தேடுவது / பிரித்து பார்ப்பது ரெட்டி,நாயக்கர் ஜாதிக் காரர்கள் தாங்களாகவே செய்து கொள்வது தான். cultural identity என்று வரும் போது நான் தனி, எனக்கு தனி தொகுதி கொடு என்றெல்லாம் மாநாடு போடுகிறார்கள். அதையே தமிழ் பேசுறவன் உன்ன தமிழ் நாட்டு சிஎம் ஆக விட மாட்டேன்னு சொன்னா discrimination ன்னு சொல்ல வேண்டியது.
வைகோவின் தனிபட்ட செல்வாக்கு இருந்த போதிலும் மதிமுக தெற்கில் பல இடங்களில் காலூன்ற முடியாமல் போனதற்கு காரணம் இது தான் – கட்சி ஆஃபிஸ் போனால் தெலுங்கு தேசத்துக்கு போன மாறி இருக்கும். அதான் சிவகாசில கூட ஜெயிக்க முடியல அவரால.
என் குடும்பத்தில் தெலுங்கு பேசுவதை நிறுத்தி எழுவது வருஷம் ஆச்சு, நான் என்னை தமிழன் என்றே கருதுகிறேன். எந்த சொந்தக்காரன் வீட்டுக்குப் போனாலும் என்ன உனக்கு தெலுகு தெலதா? ஏன் இப்படி இருக்கே நம்மெல்லாம் தெலுங்கு தான் பேசனும், தமிழ் காரங்க இல்லன்னு அவனவன் பேசறான். இதைக் கேட்ட எனக்கே எரிச்சலா இருக்கு, மத்தவங்களுக்கு எப்படி இருக்கும்.?
மைனாரிட்டி அடையாள அரசியல் என்பது ஒரு இருமுனைக் கத்தி. assimilate ஆகாம self alienate செஞ்சா இந்த மாதிரி தான் நடக்கும். இவர்களுக்கு “தெலுங்கு” என்ற அடையாளம் வேணும், அதை வைத்து அரசியலும் செய்யணும், ஆனா அதையே வச்சு தமிழ் காரன் எதிர் அரசியல் செஞ்சா ஏன் கசக்குது?. அதோட இந்த தமிழ் / தெலுங்கு; நாயக்கர் / மறவர் அரசியல் ஒண்ணும் புதிசில்லை. பொல்லாப் பாண்டிய கட்டபொம்ம்னும், பூலித்தேவனும் அடிச்சுகிட்ட காலத்தில் இருந்தே நடந்துகிட்டுதான் இருக்கு. ரெட்டியாரும் நாயக்கரும் வோட்டு வாங்க இந்த அடையாள அரசியல் செய்யாம இல்ல – 2006 விளாத்திகுளம் சட்டமன்ற தேர்தல்லியே இந்த பிரச்சனய வச்சு தான் அதிமுக எம் எல் ஏ ஜெயிச்சாரு.
இதாச்சு பரவாயில்ல கர்நாடகா காரங்க இம்சை இன்னும் கொடும. தமிழ் நாட்டுக்கு தண்ணி தரமாட்டேன்னு சொன்ன தேவ கவுடாவுக்கே வொக்கலிக ஜாதி மாநாட்டுல மேடையில ஏத்தி பாராட்டுராங்க. இந்த கூத்த என்ன சொல்றது?
நாளைக்கு பின்ன ethnic cleansing வந்தா நம்ம பாடு திண்டாட்டம் தான்
//அதற்கு சொல்லுக்குரியவர் காரணமா, அல்லது எனது உள்ளார்ந்த பாதுகாப்பின்மை (insecurity) காரணமா?//
பாரதிராஜா அரசியல் அரிதாரம் பூச ஆரம்பித்ததின் வெளிப்பாடுதான் இது.
திரு.சித்தார்த் அவர்களே,
திரு .பாலா அவர்கள் சொன்னதிலேயே எல்லாம் வந்து விட்டதால் ஒரு சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
உங்கள் மனநிலை எனக்கு தெளிவாக புரிகிறது. தாய்மொழி(தெலுங்கு) பேசவும் முடியாமல், விடவும் முடியாமல் எதோ ஆதரவற்று நிற்பதாய் உணர்கிறீர்கள். கண்டிப்பாக இது “உங்களின்” பாதுகாப்பற்ற உணர்வுதான்.
அதனால் தான் தமிழர்கள் யாராவது தமிழர் உரிமை பற்றி பேசும்போது உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதில் கலைஞர் தொலைக்காட்சியை வேறு வம்புக்கு இழுக்கிறீர்கள். தெரியாமத்தான் கேட்கிறேன், கலைஞர் தொலைக்காட்சிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? பதில் சொல்லவும்.
கர்நாடகத்தில் இதே போன்று கன்னடர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒருவரைப்பற்றி நீங்கள் இவ்வாறு சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் தான் பெங்களூரில் குடியேறிய தெலுங்கர்கள் யாரும் தங்களை தெலுங்கர் என்று வெளிப்படையாக சொல்லிக்கொள்வது கூட இல்லை. அவர்கள் தங்களை கன்னடர் என்றே கூறிக்கொள்கின்றனர். ஆனால், இதை தமிழ்நாட்டில் நீங்கள் சொல்ல முடிகிறதென்றால் அதற்கு காரணம் உங்களை(தெலுங்கர்களை) யாரும் இங்கே மூன்றாம் தர குடிமக்களாகவோ அல்லது வெளியாட்களாகவோ நினைப்பதில்லை என்பதுதான். புரிகிறதா?
பாரதிராஜா தெலுங்கர்கள் எல்லோரும் தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லவில்லை. விஜயகாந்த் அரசியலைப்பற்றி நன்றாக தெரிந்ததனால்தான் அப்படி சொல்லியிருக்கிறார் . அதுவும் அவர் சொன்னது விஜயகாந்த்தைப்பற்றி மட்டுமே. தமிழ் நாட்டில் வாழுகின்ற, தமிழர்களோடு தமிழர்களாய் பழகுகின்றவர்களைப்பற்றி கூற வில்லை. இது உங்களின் தவறான் கண்ணோட்டத்தையும் உங்களின் பாதுகாப்பற்ற உணர்வையுமே காட்டுகிறது.பிரச்சினை எங்கே என்றால் சாதியை வைத்து வோட்டு வாங்கி முதல்வராகி இன்னும் நாலு கல்யாண மண்டபம் கட்டி காசு பார்க்கலாம் என்று நினைக்கும் விஜயகாந்த் மாதிரியான ஆட்களால்தான். மேலும் இதே பாரதிராஜா தான் சில வருடங்கள் முன்பு, விஜயகாந்த் அரசியல் பற்றி வாயே திறக்காத போது , அவரை வைத்து “தமிழ் செல்வன்” என்று படம் எடுத்தார். விஜயகாந்த் தெலுங்கர் என்று அப்போது அவருக்கு தெரியாதா? காரணம் பாரதிராஜா தெலுங்கர், தமிழர் என்று பிரித்து பார்க்கவில்லை. ஆனால் இப்போது, அரசியல் முதிர்ச்சியும், வரலாறும் தெரியாத (அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத) விஜயகாந்துகளிடமிருந்து தன் தாய்நாட்டையும், தாய்மொழியையும் காப்பாற்ற நினைக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு பா.ம.க. வுக்கும் விஜயகாந்த்துக்கும் நடந்த மோதலின் போது பா.ம.க. காரர்கள் தமிழகம் முழுவதும் விஜயகாந்த் துக்கு கேள்வி கேட்டு சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகம் இதுதான். ” சாதி ஒழிப்பு நாடகம் ஆடும் விஜயகாந்த்தே! “மறுமலர்ச்சி” படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? தமிழ் தவிர வேறு எந்த மொழி படத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு “நாயுடு தி கிரேட்” என்ற படத்தில் நடித்தது ஏன்? “. மேலும், தமிழ் திரையுலகினர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள “தென்னிந்திய நடிகர் சங்க” த்தை “தமிழ் நாடு நடிகர் சங்கமா” க மற்ற சொல்லி போராடிய போது இவர் தானே தலைவராக இருந்தார். அதற்கு ஏன் முட்டுக்கட்டை போட்டார்?
மேலும் தமிழர்கள் விஜயகாந்த்தை தெலுங்கர் என்று நினைத்து ஒதுக்கியிருந்தால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட சாதியைத் தவிர வேறு எந்த சாதியிலும் ரசிகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அவருக்கு இருப்பதில் பெரும் பகுதி தமிழ் ரசிகர்களே. நான் கூட சிறு வயதில் விஜயகாந்த் ரசிகன் தான். இதெல்லாம் உங்களுக்கு ஏன் தோன்ற வில்லை?
பாரதிராஜா ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் பிரதிநிதியான்னு கேக்குறாங்க. கேக்குறவங்க யாருன்னு பார்த்தா யாரும் தமிழன் இல்லை. அப்படியே அவன் தமிழனாக(பிறப்பால்) இருந்தாலும் அது மாதிரி அரைவேக்காடுகளை பொருட்படுத்துவது அவசியமற்றது. தமிழர்களின் பிரதிநிதி யார் என்று தமிழர்களை தவிர வேறு யார் முடிவு செய்ய முடியும்? பாரதிராஜா ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் பிரதிநிதியான்னு யாராவது கேட்டா அவரும் ஒரு பிரதிநிதின்னு சத்தமா சொல்லுவேன். தன் தாய்மொழி மீது பற்றுள்ள ஒருவன் , தாய்நாட்டின் மீது பற்றுள்ள ஒருவன் அதன் எதிர்காலத்தில் அக்கறை கொண்டு, மண்ணின் மைந்தன் மண்ணை ஆள வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?
உங்களைப் போலவே எனக்கும் நிறைய தெலுங்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் பெரும்பாலும் தமிழ் தான் பேசுகிறார்கள். தமிழர்களாகவே ஆகிவிட்டார்கள். நான் என் தாய்மொழி(தமிழ்) மீது மிகுந்த பற்றுடையவன். அந்த கண்ணோட்டத்தில் பார்க்கையில் அவர்கள் தெலுங்கு பேசாதது எனக்கு வியப்பாக இருக்கும். அவர்கள் தன் தாய்மொழியை மறந்தது சரியல்ல என்று தான் நினைப்பேன். அதே நேரம் தமிழ் நாட்டில் வந்து குடியேறிய இரண்டு தெலுங்கர்கள் சந்திக்கும் போது பெரும்பாலும் தமிழில்தான் பேசுகிறார்கள். அவர்கள் நான் தெலுங்கு நீ தமிழ் நாம ரெண்டு பேரும் வேற வேற ஆளுங்க என்றெல்லாம் நினைப்பதில்லை.
உங்களின் இந்த பாதுகாப்பற்ற உணர்வு தேவையற்றது. தமிழர்கள் யாரும் உங்களை வெளியாட்கள் என்று நினைப்பதில்லை. அது தமிழர்களின் பண்பாடும் அல்ல.
பாதுகாப்பற்ற உணர்வுடன் நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்பதனால் தன் உஜ்ங்களுக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறது . இது பற்றி உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
i understand your feelings. but only in tamilnadu we have this issue… bcos in any other place we dont find this… please have a survey… compare other states… no one can become cm or minister if he is from other state person… Y this is happening only in tamilnadu….
பாரதிராஜாவின் நோக்கம் விஜயகாந்தை சாட வேண்டும். பெரும்பாலும் மனித சமுதாயங்களில் , இவ்விதம் சாடும்போது எதிராளியின் சாதி, மதம் , இனம் , மொழி , அவர்கள் பரம்பரை எல்லாவற்றையும் தாக்கி பேசுவார்கள். கவன ஈர்ப்புக்காக பாரதிராஜா சொல்வதை பொருட்படுத்த வேண்டியதில்லை. நீங்கள் இதில் வருதப்படுவதுற்கு ஒன்றுமேயில்லை. தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் ஒரே மொழிதான். 100% உண்மை. போதுமான தொலைதொடர்பு வசதி இல்லாத காரணத்தினால் திரிபு ஏற்பட்டது 4 மொழிகளாக பெயர் சூட்டப்படுள்ளது .
——தந்தை பெரியார் “ எழுத்துச் சீர்திருத்தம்” நூலிலிருந்து…—–
ஒரு பொருளுக்குப் பல சொல்
ஆனால், என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழிஅதாவது தமிழ்தான் நாலு இடங்களில் நாலுவிதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன். உதாரணமாக, இங்கு தோட்டத்திற்குப் போகிறேன் என்றால் வயலுக்கு, விளை நிலத்திற்குப் போகிறேன் என்று அர்த்தம். கொல்லைக்குப் போகிறேன் என்றால் கக்கூசுக்குப் போகிறேன் என்று அர்த்தம். சோழ நாட்டில் தோட்டத்திற்குப் போவதென்றால். கக்கூசுக்குப் போவதாகவும், கொல்லைக்குப் போவதென்றால் வயலுக்குப் போவதாகவும் அர்த்தம் செய்து கொள்வார்கள். ஒரே தமிழ்ச் சொல் இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருளில் வழங்குகிறது. இதேபோல் தமிழில் வீடு என்பதைத் தெலுங்கில் இல் என்றும், கன்னடத்தில் மனை என்றும் மலையாளத்தில் பொறை என்றும் கூறுவார்கள். இந்த நான்கையும் தமிழ் அகராதியில் வீட்டிற்குரிய பல பெயர்களாகக் காணலாம். இதே போல் நீர் என்ற, தண்ணீர் என்று பொருள்படும் தமிழ் வார்த்தைக்கு, கன்னடத்தில் நீரு என்றும், தெலுங்கில் நீள்ளு என்றும், மலையாளத்தில் வெள்ளம் என்றும் கூறுவார்கள். மலையாளத்தில் மழை அதிகம். ஆதலால், தண்ணீரை அவர்கள் எப்போதும் பெருத்த அளவில்தான் பார்ப்பார்கள். ஆதலால், தமிழில் பெருந்தண்ணீர்ப் போக்குள்ள பெயரை அங்கு நீருக்கு வழங்குகிறார்கள். இந்த மாதிரித் தமிழ் வார்த்தைகள் அந்தந்த இடத்திலுள்ள சீதோஷ்ண நிலைக்கேற்ப, பேச்சுப் பழக்கத்துக்கு ஏற்ப உச்சரிப்பில் சிறிது மாற்றமடைந்திருக்கிறதே தவிர வேறில்லை. இதனால் வெவ்வேறு மொழியாகிவிடமுடியுமா? ஒரு பொருளுக்குப் பல சொல் இருந்தால் ஒவ்வொரு சொல்லும் ஒரு மொழியாகிவிடுமா?
நாலு மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அநேகமாகத் தமிழ்ச்சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். அகராதிகொண்டு மெய்ப்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும்கூட அவற்றுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை, தமிழ்ச் சப்தத்தில்தான் நாலாயிரப் பிரபந்தங்களையும், திருப்பாவையையும் தெலுங்கு எழுத்தில் படித்துப் பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில் தமிழ்ச் சப்தத்தில்தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர்களுக்கும், மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது. வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளி-களும், கன்னடியர்களும் தம் தாய் மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுநர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக்கொண்டு உள்ளார்கள் என்பது நமக்கு, மேலும் நம் கருத்துக்கு வலிமையை ஊட்டுகிறது.