இரு குறுந்தொகை கவிதைகள். கபிலர் எழுதியவை. இரண்டையுமே பெண்கள் பாடுகிறார்கள், இழப்பின் வலியின் வெளிப்பாடாய். இக்கவிதைகளின் அழகியல் அப்பெண்கள் தங்களது இன்னலுக்கு இயற்கையை சாட்சிக்கு அழைக்கும் விதத்தில் ஒளிந்திருக்கிறது.
முதல் கவிதை :
யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.-கபிலர். (குறுந்தொகை 25)
யாரும் இல்லை. அந்த திருடன் மட்டும் தான் இருந்தான்.
அவன் பொய் உரைத்தால் நான் என்ன செய்வேன்?
தினையின் தாளைப்போன்ற சிறிய கால்களுடன்
ஓடும் நீரில் ஆரல் மீனுக்காக காத்திருந்த
கொக்கும் இருந்தது நாங்கள் கூடியபோது.
கள்வன் கொக்கு… இரையாகிவிட்ட ஆரல் இவள்…
இரண்டாவது கவிதை :
காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத் தியம்பு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.-கபிலர். (குறுந்தொகை 42)
நமது காதல் தீர்ந்து போனாலும், இரவெல்லாம்
மழை பெய்ததென அருவி
சப்தமிட்டு அறிவிக்கும் நாட்டினைச் சேர்ந்தவனே, நமது
தொடர்பும் தேய்ந்துபோகுமோ?
இரவெல்லாம் பெய்த மழையின் எதிரொலியாய் எழுகிறது காலையில் அருவியின் பேரிரைச்சல். முறிந்து போன காதல் உள்ளமெங்கும் வலியென எதிரொலிப்பதைப் போல….
இவ்விரு கவிதைகளிலும் “போல” வரவில்லை. மிக சன்னமாக நிகழ்கிறது இந்த தொடர்புறுத்துதல். காதல் கவிதைகளைப் வாசிக்க தனிமையில் மட்டுமே வாய்க்கும் உள்ளம் நெகிழ்ந்த பின்னிரவுகள் தான் சரியான நேரம். குறுந்தொகைக்கும்…
10 replies on “பின்னிரவும் கபிலரும் சந்தித்த போது…”
அருமை சித்தார்த்…’கள்வன்’ என்பது பெண்கள் காதலனை செல்லமாய் கடிந்து கொள்ளும் வார்த்தை இல்லையா! கவிதையின் அழகே அந்த ஒரு சொல்லில் தேங்கி நிற்பதாய் படும் எனக்கு.. அது இழப்பின் வழி என்பதை விடவும் காத்திருப்பின் தவிப்பு என்று சொல்வது பொருந்தும். ‘என் பெண்மையை அவன் கவர்ந்து கொண்டபோது சாட்சிக்கென எவருமில்லை எங்கே… மீனுக்காய் காத்திருந்த கொக்கைத் தவிர! அவன் இல்லையென மறுத்துவிட்டால் நான் என்ன செய்வேன்?’ என்பது அவள் புலம்பல்.. ஆனால் இந்த புலம்பல் அவன் மீதிருக்கும் நம்பிக்கையின்மையால் அல்ல என்பதை ‘கள்வன்’ என்ற ஒரு சொல் புலப்படுத்தும். குறிஞ்சிக்கு கபிலனை மிஞ்ச ஆளேது?
நன்றி காயத்ரி. நான் நீங்கள் கூறிய நோக்கில் யோசிக்கவே இல்லை. ஏமாற்றப்பட்ட பெண்ணின் ஓலமாகவே ஒலித்தது அந்த பாடல் எனக்கு. ஆனால் நீங்கள் கூறும் விளக்கமும் இப்போது படித்த பார்த்தபோது சரியாகவே இருக்கிறது.
ஆம் காயத்ரி. நிறைய கவிஞர்கள் இருந்தாலும் கபிலர், ஔவை, மிளைப்பெருங்கந்தனார் போன்ற சிலர் பளிச்சென தெரிகிறார்கள். அதிலும் கபிலரின் கவிதைகளில் தெரியும் எளிமையின் மேதமை மற்றும் கச்சிதம் அற்புதம்.
Hi, I very much enjoyed the exchange of ideas above. and I second what Gayathri says. As an elderly person I feel Very happy to see how you people read the Literature, enjoy it, and share your views on it. Glad, proceed!
நன்றி பாலாஜி அவர்களே.
Sujatha’s attempt in puthudkavidai form for sanga ilakkiyam is good and simple ?
hi tamil vasakar,
tamil valga
how can i type in tamil. is there any softwire for that.
அழகான பகிர்வு
காயூவின் விளக்கம் இன்னும் அழகு
நன்றி சித்தார்த்
நன்றி சக்தி.
[…] பின்னிரவும் கபிலரும் சந்தித்த போது […]