நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
குலத் தலைவனாக நந்தகோபனின் கோயிலைக் காப்பவனே! கொடியுடன் கூடிய தோரணமுடைய வாயிலைக் காப்பவனே ! மணிக் கதவை திற. ஆயர் குலச் சிறுமியருக்கு அருள் தருவதாக நேற்றே அந்த மாயன் மணிவண்ணன் கூறினான். அவனை பாடி எழுப்ப தூயவர்களாய் வந்துள்ளோம். காலையில் முதன் முதலில் முடியாது என கூறாதே. நீ இந்த கதவைத் திறப்பாயாக.