புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
பறவை வடிவில் வந்த அரக்கனை கொன்றவனின், பொல்லாத அரக்கன் ஒருவனைக் கிழித்துக் கொன்றவனின் புகழைப் பாட பெண்கள் எல்லோரும் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்றுவிட்டனர். வெள்ளி எனும் கோள் எழுந்து வியாழன் எனும் கோள் உறங்கி விட்டது. பறவைகள் ஒலியெழுப்பத் தொடங்கிவிட்டன. பூப்போன்ற கண்களையுடையவளே! உள்ளமும் குளிரும்படி நீராடாமல் உறங்கிக்கொண்டிருக்கின்றாயா? பெண்ணே! உனது கள்ளத்தனத்தை தவிர்த்து எங்களுடன் கலந்துக்கொள்.