ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றிவாங்க
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
உயர்ந்து உலகை அளந்த உத்தமனின் பேரைப்பாடி பாவை நோம்பிற்காக நாம் நீராடினால், மும்மாரி மழை பெய்யும். அதனால் நெல் நிறைந்து நிற்கும் வயல்களில் மீன்கள் நீந்திச்செல்லும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் உறங்கும். நிறைந்த முலைகளை பற்றுகையில் வள்ளலைப்போல பசுக்கள் பால் சுறந்து குடத்தினை நிறைக்கும். நீங்காத செல்வம் எங்கும் பெருகும்.
கண் படுப்ப – உறங்க