வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
உலக மக்களே! நாம் பாவை நோன்பில் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை கேளுங்கள். பாற்கடலில் மெல்ல உறங்கும் பரமனின் திருவடியைப் பாடுவோம். நெய்யும் பாலும் உண்ணாமல் இருப்போம். தினமும் அதிகாலையிலேயே குளித்துவிடுவோம். கண்களில் மையிட மாட்டோம். கூந்தலில் மலர் சூட மாட்டோம்.செய்யக்கூடாதவற்றை செய்ய மாட்டோம். தீய சொற்களை கூற மாட்டோம். தானமிடுவோம். இவையனைத்தையும் இயன்றவரையில் செய்து தீவினைகளிலிருந்து விடுபடுவோம்.
ஐயம், பிச்சை – இரண்டுமே தானத்தை குறிக்கின்றன.
உய் – பாவத்திலிருந்து விடுபடல்.
கேள்விகள் :
“ஆந்தனையும் கைகாட்டி” இது என்ன?
2 replies on “ஆண்டாள் திருப்பாவை – பாடல் 2”
ஆந்தனையும் என்பதற்கு “இயன்ற வரையில்” என்று பொருள் கொள்ளலாமா?
“தீக்குறளைச் சென்றோதோம்” – என்ற வரிகளில் “தீய சொற்கள் சொல்லாதது” என்பதனை விட கோள் சொல்லுதல்
கூடாது என்பதுதான் வலியுறுத்தப்படுவதாக அறிந்திருக்கிறேன். தவறிருந்தால் கூறவும்.
ஆந்தனையும் என்பதற்கு ‘இயன்ற வரையில்” என்ற பொருள் சரியாக பொருந்துகிறது சிவராமன். மாற்றிவிட்டேன். நன்றி