கடந்த இரண்டு நாட்களாய் ஆண்டாளின் திருப்பாவையைப் படித்துக்கொண்டிருக்கின்றேன்.பக்தி எல்லாம் இல்லை. வளர்சிதை பருவத்தின் ஏதோ ஓர் கணத்தில் கடவுள் பக்தி இல்லாதாகிப்போனது. நவீனக்கவிதைகளைப் படிக்கையில் அபூர்வமாய் நிகழும் மனமெங்கும் தன்னை நிறைத்துக்கொள்ளும் கவிதையனுபவம், திருப்பாவையின் பெரும்பாலான பாடல்களில் கிடைத்தது. பாடல்களின் பெரும்பாலான வரிகளை உரையின் துணையின்றியே படிக்க முடிகிறது.பழந்தமிழ் பாடல்களை சொந்த விருப்பத்தில் படிப்பது இதுவே முதன்முறை (திருக்குறளைத் தவிர்த்து). உள்ளடக்கம், மொழி, வடிவம் என பல தளங்களில் இது எனக்கு ஓர் புதிய அனுபவம். மொத்தமாய் 30 பாடல்களையும் படித்து முடித்த போது என்னை கவர்ந்தவை இரு விஷயங்கள். ஒன்று தமிழ். ஆண்டாளின் மனநிலைக்கேர்ப்ப மொழியும் வளைந்து நெகிழ்ந்து போகிறது. மற்றது தானல்லாத வேறொன்றின் மீது செலுத்தப்படும் அளவற்ற அன்பு. இங்கு அது கண்ணன். ஆனால் வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த மனநிலையே எனக்கு முக்கியமாகப் பட்டது.
Apostle’s zeal என்பார்களே… அது போன்ற ஒரு ஆரம்ப உத்வேகம். இது கரைவதற்குள் இப்பாடல்களுக்கும் விளக்கம் எழுதலாமென யோசிக்கிறேன். இவ்வுரையினை எழுது நோக்கம் ஒன்றே ஒன்று தான். உரை எழுதுகையில் பாடலைப்பற்றிய எனது புரிதல் அதிகரிக்கிறது. இயன்ற வரை பாடலின் வடிவத்தையொட்டி அதிக தகவல்களேதும் தராமல் உரை எழுத முயற்சிக்கிறேன். பல பாடல்களில் சொற்கள் குறித்த சந்தேகங்கள் உள்ளன. அவற்றையும் கொடுக்கிறேன்.இதை நேற்று முத்தமிழ் குழுமத்தில் இட்ட போது நிறைய தெளிவுகள் கிடைத்தன. வலைப்பதிவில் மாற்றங்களை செய்துகொண்டே இருக்கலாம். அது ஒரு வசதி…
5 replies on “ஆண்டாள் திருப்பாவை – முதல் பார்வை”
வாங்க சித்தார்த். ஆண்டாளின் திருப்பாவை ஒரு அழகான அன்புக் கவிதை. அப்படியே காதலனை நினைத்து நினைத்து உருகி, அந்த மோகத்தில் வேகத்தில் தானாகக் கவிதை பீறிட்டு வந்தது. அதை அப்படியே படிப்பதும் சுகம். விளக்கம் சொல்லப் படிப்பதும் சுகம். 2005 மார்கழியில் http://iniyathu.blogspot.comல் திருப்பாவைகளுக்கு எளிய விளக்கம் சொன்ன நினைவலைகளைக் கிளறி விட்டீர்கள். உங்கள் பதிவுகளையும் படிக்கிறேன். காத்திருக்கிறேன்.
(உங்கள் சொற்கள் தொடர்பான ஐயங்களை எனது பதிவு தெளிவு செய்யவும் வாய்ப்புள்ளது.)
நன்றி ராகவன்.
உங்களது தளத்திற்கு சென்றேன். ஆனால் திருப்பாவையை கண்டெடுக்க இயலவில்லை. நேர் சுட்டி தர இயலுமா?
எனக்கும் அதேதான் சித்தார்த். பக்தியெல்லாம் இல்லை. ஆனால் ஆண்டாளின் திருப்பாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அந்தத் தமிழ்!!!
மரத்தடியில் முந்தி ஜெயச்ரீ திருப்பாவையை தினமொன்றாக இட்டார். உங்களின் சுட்டியை அவங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன். மரத்தடி குழுமத்தில் எங்கேன்னு அவங்களே சுட்டி குடுத்திருவாங்க. 😉
-மதி
The link.
http://groups.yahoo.com/group/Maraththadi/msearch?query=thiruppaavai&pos=190&cnt=10
நன்றி மதி… எனக்கு புது உலகம் இது.. நல்லாவே இருக்கு 🙂
சுட்டிக்கு நன்றி.