பிரிவுகள்
இலக்கியம் திருப்பாவை பழந்தமிழ் இலக்கியம்

ஆண்டாள் திருப்பாவை – பாடல் 1

பாடல் 1.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

மார்கழி மாதம். நிறைந்த நிலவொளியுடைய நல்ல நாள். நீராடப் போகவேண்டும்.
அழகிய உடைகளணிந்த பெண்களே! போகலாமா?
சிறப்புமிக்க ஆய்ப்பாடியைச் சேர்ந்த செல்வச் சிறுமிகளே! போகலாமா?

கூர்வேல் கொண்ட கடும் உழைப்பாளியான நந்தகோபனுக்கும், கூர்மையான கண்களையுடைய யசோதைக்கும் மகனாகிய இளம்சிங்கம் போன்ற, மேகக்கறுமை நிற உடலும், செங்கதிர் சூரியனையும் குளிர் நிலவையும் போன்ற முகமும் கொண்ட நாராயணன் நமக்கு அருள் தருவான். உலகத்தார் புகழும்படியாக நாம் நீராடுவோம். வாருங்கள்.

கேள்விகள் :

நேரிழை – அழகிய(நேர்த்தியான) உடை. சரியா?
ஏரார்ந்த – ஏர் போல் கூர்மையான. சரியா?
பறை   – செல்வம், அருள், விரும்பிய பொருள். எது சரி?

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

5 replies on “ஆண்டாள் திருப்பாவை – பாடல் 1”

இழை= உடை? நான் தலைமுடியைச் சொல்றாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன்..

ஏரார்ந்த – ஏர் போல் கூர்மையான = சரி
ஏர்+ ஆர்ந்த => ஆர்ந்த – போன்ற

பறை தெரியலை.. பறை என்ற பெயரில் ஒரு இசைக்கருவி உண்டு.. ஒருவேளை செல்வமாக இருக்கலாம்…

“கூர்வேல் கொண்ட கடும் உழைப்பாளியான” என்ற பதம்
நன்றாகப்பொருந்துகிறது நான் “கூர்வேல் கொண்ட கடும் உழைப்பாளியான” – நான் “கூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான” என்று அர்த்தம் செய்து கொண்டிருந்தேன்.

கூர்வேல் கொடுந்தொழிலன் என்று நந்தகோபரை சுட்டும்போது புரிந்து முதன்முறை கேட்ட நாளிலிருந்தே
சற்று கடுமையான வார்த்தைகளோ / இன்னும் மென்மையான அடிகளை கைக்கொண்டிருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டிருப்பேன்.

பறை என்பது விரும்பிய பொருள்தான் சரியான பொருள் என நினைக்கிறேன்.

நல்ல பதிவு. தொடருங்கள்.

// “கூர்வேல் கொண்ட கடும் உழைப்பாளியான”//

என்ற பதம் இரண்டு முறை தட்டச்சு செய்யப்பட்டு விட்டது. திருத்தி வாசிக்க வேண்டுகிறேன். நன்றி.

//இழை= உடை? நான் தலைமுடியைச் சொல்றாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன்..

ஏரார்ந்த – ஏர் போல் கூர்மையான = சரி
ஏர்+ ஆர்ந்த => ஆர்ந்த – போன்ற

பறை தெரியலை.. பறை என்ற பெயரில் ஒரு இசைக்கருவி உண்டு.. ஒருவேளை செல்வமாக இருக்கலாம்…//

இழை கூந்தலாகவும் இருக்கலாம் பொன்ஸ். நான் படித்த உரையில் அப்படி தான் இருந்தது. எனக்கு உடையைக் குறிக்கலாமோ என தோன்றியதால் உடை என்று எழுதினேன்.

ஏரார்ந்த – அழகிய கண்கள் என்றிருந்தது உரையில். ஆனால் ஏர் போல என்று எடுத்துக்கொண்டால் கூர்மையான கண்கள் என்று பொருள் வருகிறது. இதுவே மூலப்பொருளுக்கு அருகில் இருப்பதாக படுகிறது.

பறை தான் இன்னமும் குழப்புகிறது. இசைக்கருவியை இங்கு குறிக்க முடியாது. அது பொருளை சிதைக்கிறது. சிவராமன் அவர்கள் கூறியுள்ள “விரும்பிய பொருள்” தான் சரி என படுகிறது.

ரொம்ப நாளாகவே ஆண்டாள் பாடல்கள் படிக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றாக இருக்கிறது.

பொன்ஸ் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி