பிரிவுகள்
இலக்கியம்

சுகிர்தராணியின் இரு கவிதைகள்

இலக்கியம் படிக்கிறோம். சிலது பிடிக்கிறது. சில பிடிக்காமல் போகிறது. பல பிடிபடாமலேயே போய்விடுகிறது. ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் ஓர் குறிப்பிட்ட படைப்பாளியும் நாமும் படைப்பினூடாக நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் தருணம் வாய்க்கிறது. நம்முள் அவர் மொழி விதையாய் விழுகிறது. அவ்விதையிலிருந்து அப்படைப்பாளிக்கான ஆளுமையை நாமே நீரூற்றி வளர்க்கிறோம். அவரது வெளியுலக ஆளுமைக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. உள்ளே வளரும் அவர் நம்மையும் உரமாய் மண்ணாய் நீராய் கொண்டே வளர்கிறார். அவரைக்கொண்டு நாமும். அந்த படைப்பாளியின் படைப்பை படிக்கையில் தர்க்கங்களுக்கப்பால் ஒளிந்திருக்கும் அலாதியுணர்வு நம்மை மூழ்கடிக்கிறது. எனக்கு வாய்த்திருக்கிறது இது. காதலியிடம் முதல் கடிதத்தை பெறுபவன் இப்படி உணரமுடியுமாயென தெரியவில்லை. முடியுமெனில் காதல் பெரிய விஷயம் தான்.

பலரை என்னுள் வளர்க்கும் பேறு எனக்கு கிடைத்திருக்கிறது. பாரதி, அயன் ராண்ட், ஜெயமோகன், எம். யுவன். இப்போது சுகிர்தராணி. அபாசமான கவிதைகளை எழுதுபவர் என இவரை புறங்கையால் ஒதுக்கும் பாங்கு, அவரது – மனிதத்தை மையமாய்க்கொண்ட – பரந்த கவிதைத்தளத்தை நிராகரிக்கும் செயலாகும்.

புது எழுத்து ஜூலை 2006 இதழில் சுகிர்தராணியின் மூன்று கவிதைகள் இடம்பெற்றுள்ளன. முதல் கவிதை நல்ல கவிதையெனினும் கடைசி இரு கவிதைகள் நேரடியானவை, “எளிமை”யானவை, படிமங்களுக்குள் செல்லாது நேரே என் கண் நோக்கி பேசுபவை என்பதால் அவற்றை இங்கு இடுகிறேன்.

ஒருவேளை

தோலினால் அடி தைக்கப்பட்டக்
கூடையுடன் அவள் கிளம்புகிறாள்
முனைமழுங்கிய இரும்புத்தகடும்
சேகரிக்கப்பட்ட சாம்பலும்
அவள் கைகளில் கனக்கின்றன.
மனித நெரிசலில் திணறும்
வீடொன்றின் பின்புறம் வந்து நிற்கிறாள்
பார்வையில் படுகிறது
ஆணியில் சுழலும் சதுரத்தகடு
ஒற்றைக்கையால் அதை உயர்த்தியபடி
சாம்பலையள்ளி உள்ளே வீசுகிறாள்
பின்
துளையின் முரட்டுப் பக்கங்களில்
முழங்கை சிராய்க்க
இடவலமாய் கூட்டிக் கூட்டி
கூடையில் சரிக்கிறாள்.
நிரம்பிய கூடை தலையில் கனக்க
நெற்றியில் வழியும் மஞ்சள்நீரை
புறங்கையால் வழித்தபடி
வெகுஇயல்பாய் கடந்து போகிறாள்.
அவளுக்காக என்னால் முடிந்தது
ஒருவேளை மலங்கழிக்காமலிருப்பது

*

புகையும் சாம்பல்

பனைகள் நிரம்பிய முரட்டுவெளியில்
பூஉதிர பிஞ்சுதிர
ஒலித்தடங்குகிறது குரல்.
புதுமொந்தையின் நிறச்சோறு தீர
துக்கத்தைக் கடந்தவன் போல்
விறைத்த சடலத்திற்குத் தீயிடுகிறான்.
நெருப்பின் காமம் தோலாடையை உரிக்க
வெண்தசைகள் பளிச்சிடுகின்றன.
சூட்டின் வலிமை நரம்புகளைச் சுண்ட
உறுப்புகளை உயர்த்துகிறது சுட்ட உருவம்.
நீண்ட கோலினால் தட்டுகிறான்
முகத்தில் தெறிக்கின்றன நெருப்புத் துளிகள்.
சிதையின் பக்கங்களைக்
குத்திக் கிளறுகிறான்.
வண்டல் நிறத்தில் உருகுகிறது உடல்நெய்.
ஆகாயக் கழுகின் வட்டமிடல்போல்
இராமுழுவதும் சுற்றிச் சுழல்கிறான்.
மதுவின் கிறுகிறுப்பும் காற்றின் நெடியும்
அவனைக் கீழே தள்ளுகின்றன
ஆறடி நீளத்திற்குப்
புகைந்து கொண்டிருக்கிறது சாம்பல்.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

8 replies on “சுகிர்தராணியின் இரு கவிதைகள்”

ஒருவேளை..
யாரும் தொடாத… கவிதை.

புகையும் சாம்பல்
இடுகாடு கண் முன் கணன்றது. நல்ல கவிதை தேர்வு சித்து. வாழ்த்துக்கள் உங்கள் ரசனைக்கு.

Welcome to Nagapattinam “Kalai Ilakkiya Iravu’08”. Deliever your practical speech with poetric words. Spread your thoughts to the people of downdroden.

Thanking you

A.M.Jawahar
Periyar Illam
4, Perambukara Street
Nagapattinam -611 01.
Mobile: 98943 78759

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s