அழிவின் தூது – மனுஷ்ய புத்திரன்
எங்கிருந்தோ ஓடிவந்து
சட்டெனக் கையைப் பற்றிக்கொண்டது
அந்தக் கெட்ட செய்தி
செய்திக்குரியவன்
நானாகவே இருந்திருந்தால்
நிம்மதியாய்ப் போயிருக்கும்
கொடுமதியின் காலம்
இன்றென்னைத் தேர்வு செய்தது
கெட்ட செய்தி கொண்டுபோகிறவனாக
அந்த வீட்டின் குழந்தைகள்
இப்போதுதான் தூங்கப்போயிருப்பார்கள்
அந்த வீட்டின் பெண்
நாளின் இறுதிக் கடமையையும்
பூர்த்தி செய்து
உடலைத் தளர்த்திக்கொண்டிருப்பாள்
அந்த வீட்டின் மனிதன்
நாளைக்கான
ஒரு அர்த்தமற்ற வரைபடத்தை
எழுதிக்கொண்டிருப்பான்
அந்த வீட்டின் விருந்தாளி
தனது இடத்தை
இன்னொரு முறை
சரிபார்த்துக்கொள்வாள்
சற்றைக்கு முன்
அரிந்தெடுத்த
மாமிசத்தின் சூட்டுடன்
சித்திரமாக உறையப் போகும்
நாளொன்றை
அவர்களுக்காகக் கொண்டுபோகிறேன்
முதலில் கதவு திறக்கப் போகும்
துரதிர்ஷ்டசாலிக்காக
என் கண்கள்
ஒரு வஞ்சகமுள்ள மிருகத்தின்
கண்களாகின்றன
எனது முதல் வாக்கியம்
சுவர்களை
இடம் மாற்றி வைத்துவிடும்
இரண்டாம் வாக்கியம்
தலைக்கு மேலுள்ள
கூரையை அகற்றிவிடும்
மூன்றாம் வாக்கியத்தை
யாரும் கேட்கமாட்டார்கள்
பிறகு
அவர்கள் ஒரு நாளும் மறக்க இயலாது
எனது இன்றைய முகத்தை
எனது இன்றைய குரலை
எனது இன்றைய ஆடைகளை
அழுகும் புண்ணொன்றின்
அருவெருப்பான புழுவாகி
நிரந்தரமாகத் தங்கிவிடுவேன்
புதைநிலங்களின் பாதையில்
என் கால்கள்
முடிவில்லாமல் செல்கின்றன
உருவாக்க வேண்டிய
வாக்கியத்தின் பதிலியாய்
முற்றிலும்
வேறொன்று உருவாகலாம்
தெய்வங்கள் இரங்கினால்
எனக்கு முன்
யாரேனும் சென்றிருக்கக்கூடும்
3 replies on “அழிவின் தூது – மனுஷ்ய புத்திரன்”
[…] நான் உணர்ந்த முதல் மரணம் எனது பாட்டியினுடையது. 89ல் நிகழ்ந்தது. அந்த மரணத்தைப் பற்றி இப்போது என் நினைவில் எஞ்சி நிற்பவை, கோர்வையாய் கோர்க்க முடியாத சில சம்பவங்கள் மட்டுமே. ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் தங்கையின் கை கதவிடுக்கில் மாட்டிக்கொள்ள, அம்மா, இப்போது ஆச்சரியப்படவைக்கும் நிதானத்துடன், அவளுக்கு மருந்து போட்டது – கணேசனின் வெள்ளை நிறச் சட்டை(மனுஷ்யப்புத்திரனின் வார்த்தைகளில் சொன்னால், இவரின் நினைவு “சற்றைக்கு முன் அறுத்தெடுக்கப்பட்ட மாமிசத்தின் சூட்டுடன்” மனதில் நிற்கிறது (கவிதை: அழிவின் தூது)) – பாட்டியை கண்டவுடன் அப்பா மயங்கி விழுந்தது – பாட்டியைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது மகேஷ் சொன்ன “இனிமே பாட்டிய பாக்க முடியாது இல்ல?” – என் மாமா, பகீரதன் முதன் முறை அழுது நான் பார்த்தது – இறந்த மறுவாரம், பாத்திரங்களைப் பகிர்வதில் நடந்த சண்டை…. […]
[…] மனுஷ்ய புத்திரனின் படப்பிடிப்பு. […]
அருமையான கவிதை …தந்ததற்கு நன்றி