இலக்கிய உரையாடல் எப்போதும் சீரியசாகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த நோபல் பரிசு பெறப்போகும் எழுத்தாளர்/கவிஞர் யார் என்ற பேச்சு வந்தது. வெளியே மழை. இரவு சில்லிட்டுக்கொண்டுவந்தது. இடம்: ஓர் அமெரிக்க மாநிலம். நம்மூர் கவிச் சக்கிரவர்த்திகள், கவிமன்னர்கள், கவிப் பேரரசர்கள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், மிட்டா மிராசுகள் பெயரைச் சொல்லி, இவர்களுக்கு ஏன் தரப்படக் கூடாது என்றார் ஒரு நண்பர். கவிதை எழுதியிருக்க வேண்டுமே என்றார் ஒருவர். திடுமென எழுந்த நண்பர் ஒருவர், 'வடவர் வாலாட்டத்தை அடக்கிக் கனக விசயர் தம் தலையில் கல்லெடுத்து வந்து கண்ணகிக்குச் சிலை செய்த தமிழர் வீரம் எங்கே போயிற்று' என்றார். தொடர்ந்து, ஸ்டாக்ஹோமின் கதவை தட்டி, நோபல் சிலையை தழுவியப்படியே படம் எடுத்துக்கொண்ட அந்தக் கவிஞருக்கு நோபல் பரிசை ஏன் தரக்கூடாது என்றார் அவர். 'என் கையில் இருந்தால் கொடுத்துவிடலாம்…. அஞ்சோ பத்தோ, ஆனால் நோபல் பரிசாயிற்றே…' என்றார் ஒரு நண்பர் பரிதாபமாக. ஆனாலும், ஐரோப்பியர்களுக்கு இந்த ஓட்டாரம் கூடாது. யாரோ, ஓர் ஆஸ்திரியப் பெண்மணிக்குத் தந்திருக்கிறார்கள் இந்த வருஷத்து நோபல் பரிசை. தமிழுக்கு நேர்ந்த அவமானம் அல்லாமல் இது வேறென்ன? 'வடவர் தம் கொட்டத்தை அடக்கிய தமிழர் வீரம் ஐரோப்பிய அகங்காரத்தை அடக்காமல் எங்கே போகும்? எங்கே போயிற்று?' என்றார் அந்த நண்பர் மீண்டும் காட்டமாக.
'மெரினா கண்ணகி சிலை எங்கே இருக்கிறதோ, அதன் காலடியில் நெளிகிறது, தேடிப் பாரும்' என்றார் ஒரு நண்பர்.
சாகித்ய அக்காதெமி, ஞானபீடம், நோபல், புலிட்சர் என்று நூற்றுச் சொச்சம் பரிசுகள் உலகில் உள. இவைகளைப் பெற என்ன வழி? நேராக, அந்தந்த அலுவலகங்களுக்கே போவது. கையில் கட்டிக்கொண்டு போகும் புத்தகங்களை மேசையில் போட்டு பரப்புவது. 'இன்னாங்கடா…. பாருங்கடா புத்தகங்கள… நூற்று இருபத்தேழு கவிதத் தொகுதி எழுதியவண்டா நானு. கொடுங்கடா எனக்கு அந்தப் பரிசை… ' என்று கர்ஜிப்பது. இது, உங்களுக்குப் பரிசை வாங்கித் தருவதற்கான ஒரு வழி. விருத்தப்பா அரசர் அவ்வாறு செய்திருக்கிறர். ஒரு சமயம் இல்லையென்றாலும் ஒரு சமயம் பரிசு விழாமலா போகும்?
– பிரபஞ்சன் (காலச்சுவடு, டிசம்பர் 2004, பக் : 72)
4 replies on “தமிழுக்கு நோபல் – ஓர் எளிய வழி (உபயம்: பிரபஞ்சன்)”
[…] இரண்டு வருஷங்களுக்கு பிரபஞ்சன் சொன்ன விஷயத்தை, சித்தார்த் எடுத்துப் போடுகிறார் […]
ஏற்கனவே படித்திருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் படிக்கையில் ஒரு சுவை. குறிப்பாக யாரைக் குறிப்பிடுகிறார் என்பது நம்மில் பலருக்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.
இப்படி சக எழுத்தாளர்களை நக்கலடிப்பதே சிறந்த இலக்கிய எழுத்தாளன் என்று நிறுவுவதற்கான யுக்தியாக இவர்கள் நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. எழுதுவதற்கு ஒன்றும் இல்லையென்றால் சும்மா இருக்கலாம். இன்னமும் பத்திகளை நிரப்ப ஆள் தேடிப்பிடித்து இலக்கியச்சேவை செய்யும் நிலையில்தான் நாம் எழுத்து/பதிப்புச் சமூகம் இருக்கிறது, இல்லாவிட்டால் ஏன் இந்த குடுமிப்பிடி சண்டை. மேலும், இவர்கள் எழுதும் இலக்கியத்தைக் காட்டிலும் இவர்களின் சண்டைகள் ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது 🙂 ஆனால் எப்போதுமா? 😦
– முபாரக்
நடக்கட்டும் நாகரீகமாக…