பாம்பாட்டி சித்தனின் பதிவில் நேற்று போலிஷ் கவிதாயினி விஸ்லாவா சிம்போர்காவினை பற்றி படித்தேன். அவரது இரண்டு கவிதைகள் (மொழிபெயர்ப்பு: சுகுமாரன் ) கொடுக்கப்பட்டிருந்தன. இன்று மதியம் உணவு உண்ண உட்கார்ந்த போது பக்கத்தில் இருந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். டிசம்பர் 2004 காலச்சுவடு. அதில் சு.ரா மொழிபெயர்ப்பில் விஸ்லாவா சிம்போர்காவின் "பார்வையற்றவனின் இரக்கம்" என்ற கவிதை இடம்பெற்றிருந்தது. ஒரு தகவல் நம்மை வந்தடைந்தபின் அது குறித்த மேலதிக தகவல்கள் நம்மை வந்தடைந்தபடியே இருக்கும் என்பது என் நம்பிக்கை. மயிலிறகு குட்டிப்போடும் என்பதைப் போன்ற நம்பிக்கை தான் இதுவும் என தெரிகிறது. ஆனாலும் மனதில், அறிவியலின் நிரூபனத்திற்கு அப்பால் நின்றுகொண்டிருக்கும் இவை போன்ற நம்பிக்கைகளை ஒன்றும் செய்வதற்கில்லை.
கீழே காலச்சுவடின் அந்தப் பக்கத்தை அப்படியே இடுகிறேன். கவிதையின் கீழ் உள்ள விவரணப் பத்தி, சுரா எழுதியது.
கவிதை: விஸ்லாவா சிம்போர்கா
தமிழில் : சுந்தர ராமசாமி
பார்வையற்றவனின் இரக்கம்
————————–
ஒரு கவிஞன் அந்தப் பார்வையற்றவர்களுக்கு வாசிக்கிறான்
அது மிகக் கடினமென அவன் சந்தேகம் கொள்ளவில்லை
அவன் குரல் உடைகிறது.
அவன் கைகள் நடுங்குகின்றன.
இருளின் சோதனைக்கு இங்கு ஒவ்வொரு வாக்கியமும்
உள்ளாகிறது என்று அவன் உணர்கிறான்.
ஒளிகளோ வண்ணங்களோ இன்றி
அது தன்னைக் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அவனது கவிதைகளில் நட்சத்திரங்களுக்கு,
விடிவெள்ளிக்கு, வானவில்லுக்கு, மேகங்களுக்கு
நியான் விளக்குகளுக்கு, சந்திரனுக்கு,
நீருக்குள் இப்போது வரையிலும்
ஒரே வெள்ளியாக இருந்த மீனுக்கு,
வானத்தில் நிசப்த உயரத்திலிருக்கும் கழுகுக்கு
அனைத்திற்கும் ஆபத்து மிகுந்த சாகசம்தான்.
அவன் வாசிக்கிறான் – நிறுத்த வெகுவாகத் தாமதமாகிவிட்டது என்பதாலும் –
பச்சைப் புல்தரையில் மஞ்சள் மேலாடையிலிருக்கும்
அந்தச் சிறுவனைப் பற்றி,
பள்ளத்தாக்குகளில் சுலபமாகத் தெரிகிற செந்நிறக் கூரைகளைப் பற்றி,
விளையாட்டுகாரர்களின் சட்டைகளின் பதற்றமான எண்களைப் பற்றி,
வெடித்துத் திறந்த வாசலின் அம்மண அந்நியன் பற்றி.
கதீட்ரல்களில் கூரைப் புனிதர்களையும்,
ரயில் ஜன்னல்களில் விடைபெறும் கையசைப்புகளையும்,
பூதக்கண்ணாடி வில்லையையும், இரத்தினக் கல்லின் ஒளிக்கீற்றையும்,
வீடுயோ திரைகளையும், கண்ணாடிகளையும்
முகங்கள் நிறைந்த ஆல்பங்களையும்
அவன் தாண்டிப்போக விரும்புவான் – அதொரு தேர்வல்ல என்றாலும்கூட.
என்றாலும் பெரிது பார்வையற்றவர்களின் இரக்கம்,
பெரிது அவர்களது கருணையும் பெருந்தன்மையும்.
அவர்கள் செவிசாய்க்கிறார்கள், புன்னகைக்கிறார்கள், கை தட்டுகிறார்கள்,
தலைகீழாகப் பிடித்துக்கொண்ட புத்தகத்துடன்
ஒருவன் அணுகவும் செய்கிறான்,
பார்வைக்குத் தெரியாத கையெழுத்தை வாங்கும் பொருட்டு.
(போலிஷ் மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு: ஜஸ்டினா கோஸ்ட்கோவ்ஸ்கா.
நியூயார்க்கர் வார இதழில் 2004 ஆகஸ்ட் இதழில் வெளியானது)
விஸ்லாவா சிம்போர்கா மேற்கு போலாந்தில் 1923இல் பிறந்தவர். உலகளவில் முக்கிய மொழிகளில் எல்லாம் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழிலும் – சிம்போர்காவுக்கு தெரியாது என்றாலும் – மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். மிக எளிமையான கவி. காட்சி அளிக்கும் அளவிற்கு எளிமையானவரும் அல்ல. இயற்கையின் அழகு அளிக்கும் ஆச்சரியத்தையும், காதல், அன்பு ஆகியவற்றின் இளிவரலையும், கலையின் மாயத்தன்மையையும் வெளிப்படுத்தியவர். சிம்போர்காவின் குரல் மென்மையானது. அவரது சாதுவான நகைச்சுவை உணர்வு, இறுகிப்போய்விட்ட நிறுவனங்களின் அஸ்திவாரங்களைத் தோண்டும் குணம் கொண்டது. சாதாரணத்திலிருந்து அசாதாரணத்தை சலித்தெடுப்பதில் வல்லமை கொண்டவர். 1996ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றவர். இப்போது வட அமெரிக்காவில் சிக்காகோ பெருநகரத்தில் வசித்து வருகிறார்.
சிம்போர்காவின் கவிதைகள் குறித்து மேலே குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் எதுவும் என்னுடையவை அல்ல. பல்வேறு விமர்சகர்கள் கூறியிருப்பவற்றின் சாராம்சம் அவை. என்றாலும் என் மனதை அள்ளும் குணம் அவரது கவிதைகள் கொண்டிருப்பதை மீண்டும் மீண்டும் நான் உணர்ந்திருக்கிறேன். நான் விரும்பி மொழிபெயர்த்திருக்கும் இக்கவிதையில், பார்வையற்றவர்கள் தொடர்பாக அவர் பயன்படுத்தியுள்ள 'கருணை', 'பெருந்தன்மை' போன்ற சொற்களுக்கு பின்னால் இருக்கும் பார்வை எனக்கு உறுத்தலை தந்தது.
One reply on “விஸ்லாவா சிம்போர்காவை பற்றி சுரா”
எனது blog இல் நான் ஒருங்குறியில் எழுதினான் ஏன் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை? நான் Mozilla 1.7.12 பாவிக்கிறேன்