பிரிவுகள்
இலக்கியம்

Milorad Pavic – ஒரு சிறு குறிப்பு

மிலோராட் பாவிச்இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் "The Dictionary of Khazars". செர்பிய எழுத்தாளரான மிலோராட் பாவிச் (Milorad Pavic) எழுதிய பின்நவீனத்துவ நாவல் இது. பாம்பாட்டி சித்தன் தனது பதிவில் எழுதியிருந்த பின்நவீனத்துவம் பற்றிய கட்டுரையில் தான் இந்நாவல் குறித்த குறிப்பு கிடைத்தது. இது ஒரு அகராதி வடிவிலான நாவல் என குறிப்பிட்டிருந்தார். ஆர்வம் மேலிடவே வாங்கிவிட்டேன். இது வரையிலான வாசிப்பு மிக அலாதியான பயணமாகவே இருக்கிறது.கசார்கள் 7ஆம் நூற்றாண்டில் இருந்து 10ஆம் நூற்றாண்டு வரை கருங்கடலுக்கு அருகில் ஆட்சிபுரிந்து வந்த ஓர் இனக்குழு. 9ஆம் நூற்றாண்டின் குறிப்பிடப் படாத ஏதோ ஒரு வருடத்தில், கசார் மன்னர்க் குடும்பங்களும், மக்களில் பெரும்பாலானவர்களும் யூத மதத்தை தழுவினார்கள். இதன் பின் இவ்வினம் தனது தனித்துவத்தை இழந்து, வரலாற்றின் ஏடுகளில் இருந்து மறைந்துவிட்டது. இவை தான் கசார்களை பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்று தகவல்கள்.இதில் கூட்டாய் மதம் மாறிய அந்நிகழ்வை மையமாய் வைத்தே பாவிச் இந்நாவலை உருவாக்கியுள்ளார். இந்நாவலின் படி கசார் மன்னனுக்கு ஓர் கனவு வருகிறது. அதில் ஓர் தேவதை தோன்றி, "மன்னனே, உனது நோக்கம் ஆண்டவனுக்கு பிடித்திருக்கிறது. ஆனால் உனது செயல்களில் அவருக்கு திருப்தியில்லை." என்கிறாள். உடன் கசார் மன்னன் யூத, கிருத்துவ, இஸ்லாமிய அறிஞர்களை அழைத்து, யார் தனது கனவிற்கான சரியான விளக்கத்தை தருகிறார்களோ, அவர்களுடைய மதத்தை தானும் தனது நாடும் தழுவுவதாக கூற விவாதம் தொடங்குகிறது. இந்நிகழ்வினையும் இந்நிகழ்வில் பங்குகொண்டவர்களையும் குறித்த அகராதி ஒன்று 1691ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பட்டு, மறு ஆண்டே அழிக்கப்படுகிறது. அதன் மறுபதிப்பே இந்நாவல். 🙂 எது புனைவு, எது நிஜம் என அறிய முடியாத ஓர் மாயவெளியிலேயே நாவல் நிகழ்கிறது.

இந்நாவல் உண்மையில் மூன்று அகராதிகளின் தொகுப்பு. "கசார் மத மாற்றத்தை" பற்றிய மூன்று அகராதிகள்Dictionary of the Khazars உள்ளன. இதில் சம்மந்தப்பட்ட மூன்று மதங்களும், இந்நிகழ்விற்கு, தங்களுக்கு சாதகமான வகையில் அர்த்தம் தந்து, கசார்கள் தங்கள் மதத்திற்கே மாறினர் என நிறுவுகின்றன. கிருத்துவர்களின் அகராதியான சிகப்பு புத்தகம் (Red Book), இஸ்லாமியர்களின் அகராதியான பச்சை புத்தகம் (Green Book) மற்றும் யூதர்களின் அகராதியான மஞ்சள் புத்தகம் (Yellow Book), ஆகிய புத்தகங்களின் கூட்டு தான் இந்நாவல். ஒவ்வோர் அகராதியின் ஒவ்வொரு பதிவை படிக்கும்போதும் மொத்த கதையின் ஒரு பகுதி நமக்குள் அமர்கிறது. அகராதி வடிவில் இருப்பதினால், இதை எப்படி படிக்கவேண்டுமென நாம் தான் முடிவு செய்ய வேண்டும். "புத்தகத்தை கீழே போட்டு, அது எந்த பக்கத்தில் திறந்திருக்கிறதோ, அங்கிருந்து கூட நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம்" என்கிறார் பாவிச் :). இந்நூலின் மற்றுமொரு குறிப்பிடப்படவேண்டிய அம்சம், இது இரு பதிப்புகளாக வெளிவந்துள்ளது. ஆண் மற்றும் பெண் பதிப்புகள். இரண்டிற்கும் 17 வரிகளில் தான் வித்தியாசம். ஆனால் முழு கதையின் போக்கையே மாற்றக்கூடிய 17 வரிகள் என்கிறார் பாவிச். (நான் வாசித்துக்கொண்டிருப்பது ஆண் பதிப்பு).

இது பாவிச்சின் முதல் நாவல். இதன் பிறகும் அவர் எழுதிய ஒவ்வோர் நாவலிலும் உள்ளடக்கத்தின் ஆழத்திற்கு இணையாக நாவலின் வடிவத்திலும் கவனம் செலுத்திவந்திருக்கிறார். இவரது நாவல்களின் பட்டியல் இது:

Dictionary of the Khazars – அகராதி வடிவிலான நாவல்.

Landscape painted with tea – குறுக்கெழுத்து போட்டி வடிவிலான நாவல்.

The Innerside of Wind – கிரேக்க புரான கதாப்பாத்திரங்களான ஹீரோ மற்றும் லியாண்டரை பற்றிய நாவல். ஆரம்பம் முதல் கடைசி வரையோ அல்லது கடைசியிலிருந்து ஆரம்பம் வரையோ, எத்திசையிலும் படிக்கக்கூடிய நாவல்.

Last Love in Constantinople – எதிர்காலத்தை கணிக்க பயம்படும் டாரட் அட்டைகளின் (Tarot Cards) வடிவில் எழுதப்பட்ட நாவல்.

Unique Item – நூறு முடிவுகளை கொண்ட நாவல். எந்த முடிவை படிக்கவேண்டுமென வாசகன் முடிவு செய்துக்கொள்ளலாம்.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

7 replies on “Milorad Pavic – ஒரு சிறு குறிப்பு”

நல்லது மதி. படிங்க. அடுத்து Stone Raft (Jose Saramago) படிக்கலாம்னு இருக்கேன். உங்களுக்கு வசதி. பட்டுன்னு நூலகத்துக்கு போய் எடுத்துகிட்டு வந்துடுவீங்க… இங்க அது முடியாது. ஒன்னு உள்ளூர் கடைங்க. அங்க அமெரிக்கா போயிட்டு வர்ர டிக்கெட் செலவையும் சேத்து கேப்பாங்க. இல்லைன்னா அமேசான். 🙂

சித்தார்த், சித்தனின் பதிவிலும் சொன்னதுபோல, மிக சுவாரஸ்யமான புத்தகம் இது. இளவரசி அதே (Ateh) கண் இமைகளில் எழுதப்பட்டிருக்கும் கொலை மந்திரங்கள், காலத்தைப் பின்தங்கிக் காட்டும் கண்ணாடி என்று எத்தனையோ விஷயங்கள்… உங்களுக்கு இம்மாதிரி நாவல்களில் ஆர்வமிருப்பின், OuLiPo கும்பலில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் – இத்தாலோ கால்வினோ, ரேமண்ட் க்வினோ, ழோர் பெரக் என்று. விருப்பமிருப்பின் Georges Perecன் Life: A user\’s manual, ஆங்கில e எழுத்து ஒன்று கூட இல்லாமல் எழுதப்பட்ட A void போன்ற புத்தகங்களைப் படிக்க முயலவும்.

Tarot கார்டுகளை வைத்து எழுதப்பட்ட இன்னொரு சுவாரஸ்யமான நாவல் (அளவில் மிகச் சிறியது) கால்வினோவின் Castle of crossed destinies….

Khazars படித்து முடித்ததும், வாய்ப்பிருந்தால் விளக்கமாக மேலும் எழுதவேண்டுமென்று ஒரு விண்ணப்பத்தை வைத்துவிடுகிறேன் 🙂

வணக்கம் சன்னாசி. பின்னூட்டத்திற்கு நன்றி. நாவலை கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். இப்போது டோரோத்தியா எழுதிய கடிதங்களை (Yellow Bookஇன் கடைசி பகுதி) படித்துக்கொண்டிருக்கிறேன். முடித்த உடன், நாவலை பற்றி கட்டாயம் எழுத வேண்டும். பாவிச்சின் கற்பனை திறனும், குழப்பமான களத்தை, மிகவும் எளிமைப்படுத்தாமலும், அதே சமயம் கைக்கு எட்டும் தூரத்திலும் வைத்து பேசும் விதமும் ரசிக்கத்தக்கது.

நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற நூல்களையும் படிக்க முயல்கிறேன். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s