'அந்த காலத்தில் காப்பி இல்லை'. ஆ. இரா. வெங்கடாசலபதி எழுதிய ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு. காபி தமிழகத்தின் நுழைந்த விதத்தில் இருந்து பாரதி ஏன் எழுத்தால் சம்பாதிக்கவில்லை என்பது வரை ஒரு பரந்த தளத்தில் இயங்கும் கட்டுரைகள் இவை. இவற்றில் ஒரு கட்டுரை, தமிழில் பகடி இலக்கியம் குறித்தது. ஒரு இலக்கிய ஆக்கத்தை அல்லது நடையை, அதன் எதிர்திசையில் மீள்கட்டமைப்பு செய்வது பகடி. தமிழில் பகடிக்கான எடுத்துக்காட்டுகள் கட்டுரை முழுவது சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம்மை புன்முறுவல் பூக்கச்செய்தபடி உள்ளன. அவற்றிலிருந்து சில. எடுத்துக்காட்டுகளுக்கான விளக்கங்கள் ஆ.இரா. வேங்கடாசலபதியின் மொழியிலேயே…
********
வைரமுத்துவின் ஆரவார, அலங்கார நடை, மிகையான அடைமொழிகள், பொருளற்ற முரண் தொடர்கள், வேண்டாத வடமொழிச் சொற்கள் முதலானவற்றை பகடி செய்யும் காக்கை – நரி – வடை – கதை இதோ:
அந்தக இரவில் கந்தக வடை
புழுதிப்படிந்த ஒரு கிராமத்தில் யௌவனக் கிழவி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள்; காசு பெற்று வந்தாள் ! அந்த மோக வடைக்காகத் தாகம்கொண்டு வந்தது ஒரு கார்மேகக் காகம்! 'சில்லரை கொடுக்காமல் வடை கேட்டால் உன்னைக் கல்லறைக்கே அனுப்பிவிடுவேன் எனச் சினந்தாள் அந்த சிங்காரக் கிழவி. ஆனால், பாட்டி பாராத சமயம் அந்தகக் காகம் சந்தன மின்னல் போலப் பாய்ந்து அந்த கந்தக வடையைக் கவர்ந்து சென்றது!…
அது ஒரு தாவணி மேகங்கள் சூழ்ந்த காடு; பொன்மாலைப் பொழுது! பச்சைப் புல்வெளி ஓரம் பன்னீர்க் குடங்களின் சாரம்!… ஒரு ரோஜாப்பூ ஆளான நேரம்! அங்கே சென்றது காகம்!
விதைக்குள் இருந்துவந்த விருட்சம், அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம்! அதன் கிளைகளில் சென்று அமர்ந்தது அந்த சொப்பனக் காகம்!…
அந்தக் கனவு வடையைத் தன் வீரிய விரல்களுக்கு இடையே வைத்து நேரிய நயனத்தால் சுற்றும்முற்றும் பார்த்து… கூரிய அலகால் கொத்தி சாப்பிட முயன்றபோது…
பூவுக்குள் பூகம்பம் போல புறப்பட்டு வந்தது நரி! அந்த நரி நர்த்தக நரி!… கார்மேகக் காகத்தைப் பார்த்து… உடல் வியர்த்தது! நரியின் மனதில் ஒரு வெறி வேர்விட்டது!… அந்த ராஜவடையை அபகரிக்க அதன் நந்தவனத்து மூளை நாசவேலை செய்தது!… நரி அதுவாக காகம் அருகே மொதுவாக… ஒரு இதுவாக சென்றது!…
'ஓ, உலக அழகியே !… உள்ளூர் மோனலிஸாவே ! கறுப்பு முந்திரியே ! கந்தர்வ சுந்தரியே ! நீ பார்க்கவே எவ்வளவு அழகு, நீ மட்டும் கானம் இசைத்தால், எருதுக்கு விருது கிடைக்கும் ! சர்ப்பம் கூட கர்ப்பம் தரிக்குமே !' என்றது. இந்த இடத்தில்தான் சரித்திரம் சரிகிறது, பூகோளம் புரள்கிறது! நரியின் தேவ எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது ! … கார்மேகக் காகம் நரியை வெறுத்தது; பாட்டை ஒறுத்தது; அது பதிலிறுத்தது …
'நான் வைரமுத்துவின் வாசலில் வளர்ந்த காகம் ! மெட்டிருந்தால்தான் பாடுவேன் … இல்லையேல் இல்லை !' என்று சொல்லிப் பறந்தது… நரியின் சூது இறந்தது!…
**********
'ஊடகம்' வெளியிட்ட 'பிசாசு எழுதுதல்' கவிதைகள் நவீனத் தமிழ்க் கவிஞர்கள் பற்றிய சிறந்த பகடி ஆகும். முக்கியமாக விக்கிரமாதித்யன், நகுலன், பசுவய்யா, பிரம்மராஜன் ஆகியோர் முறையே கீழ்கண்டவாறு பகடி செய்யப்பட்டுள்ளனர்.
(விக்கிரமாதித்யன்)
அவர்
இருமிக்கொண்டிருக்கிறார்
இவர்
புகைத்துக்கொண்டிருக்கிறார்
இவர்
பேசிக்கொண்டிருக்கிறார்
அவர்
கிளம்பிக்கொண்டிருக்கிறார்
இவர்
புலம்பிக்கொண்டிருக்கிறார்
~~~
(நகுலன்)
மத்லப்
மத் லப்
லப் மத்
லப் டப்
மத்து லப்பு
மத்லப்
லப்மத்
சுசீலா
மத்லப்
~~~
(பசுவய்யா)
செருப்பைக் கழற்றி
அடிப்பேன் என்றிகாய்
நான் ஆட்சேபிக்கவில்லை
என்றாலும்
நீ
சற்று தயங்கக்கூடும்.
அப்போது நான் சொல்வேன்
உன் செருப்பு பிய்ந்துவிடக் கூடுமெனினும்
என்னை அடிப்பதுதான் அழகு
தயங்காதே
அடி.
~~~
(பிரம்மராஜன்)
ஒரு கச்சித இசைத்தட்டு
அதை வெட்டு
கட்டவிழ்ந்து பரவட்டும்
சரோட்களும் செல்லோக்களும்
ஒரு துல்லிய அலைவரிசையில்
துடிக்கிறது
உன் புயல் உயிர்
மணி அய்யரின் கல்யாணியில்
வீழ்ந்துகொண்டிடுக்கிறது
அந்த அருவி
மகத்தான
செய்தி நெடுஞ்சாலை
பில் கேட்ஸைக் கேட்டுப்பார்
நீரின்றி
நீர் – இன்றி
சுரக்காது உலர்ந்த முலைகள்
உனக்கிருப்பதோ
சுவைக்காத நாக்கு
கனவில் எரிமலை
பின்னங்கழுத்தில் நீர்ச்சுழல்
~~~
சில 'கிறள்கள்'…
சிறப்பொடு பூனை இறப்பில் இருப்பின்
புறப்பட மாட்டா தெலி
சுண்டைக் கறியின் சுவை அறியார் அறியார்
பண்டைத் தமிழ்ப் பெருமை
டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றதெல்லாம்
கை கட்டிப் பின்செல் பவர்
தின்றதனா லாயபயனென் கொல் ஏப்பந்தான்
நன்று வராஅ தெனின்?
நீரில் பால் ஊற்றுவான் பால்காரன்; பாலில்நீர்
ஊற்றிலென் ஊற்றாக்கா லென்?
தந்தை மகற்காற்றும் நன்றி, மகன் அவற்காகக்
கந்தை உடுத்தச் செயல்
– சித்தார்த்
3 replies on “பகடி இலக்கியச் சிதறல்கள்”
[…] ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘அந்த காலத்தில் காப்பி இல்லை’ நூலில் இருந்து சில பகுதிகள், சித்தார்த்தின் பதிவு வழியாக […]
பகடியை ரசித்தேன்
haa haa its very nice sir.