பட்டியல். யுவன் ஷங்கர் ராஜா இசையில் 6 பாடல்களும் மிக நன்றாக உள்ளன. அது இளையராஜா பாடும் அந்த பாடல் தாளம் போட வைக்கிறது. ஆனால் இந்த பதிவு இந்த பட்டியலை பற்றி அல்ல. வேறு ஒரு பட்டியலை பற்றி. இப்போது நமது இணையத்தை பறவை காய்ச்சலாய் தாக்கியிருக்கும் "நாலு நாலா பட்டியல் போடு" வியாதி. என்னையும் முபாரக் இழுத்து விட்டார். ஆகையால் இதோ நானும்.
பிடித்த நான்கு இடங்கள்:
————————–
இஸ்ரேல் – 18 வயதிலிருந்து என் கனவு தேசம் இது.
ஸ்விஸர்லேண்ட் – ஒரு முறையாவது போய்விட வேண்டும் என நினைக்கும் இடம்.
பொட்டங்காடு – மதுராந்தகத்திற்கும் செங்கல்பட்டிற்கும் இடையில் உள்ள எனது கிராமம். சொர்கமே என்றாலும்….
சென்னை – இங்கு மட்டும் தான் நான் நீரினுள் மீன். யாதும் ஊரே ஜெர்க் எல்லாம் எவ்வளவு விட்டாலும், இது தான் எனது ஊர்.
பிடித்த நான்கு உணவுகள்:
—————————-
அம்மா சுடும் பருப்பு அடை – உலகிலேயே மிகவும் ருசியான உணவு இது. அம்மாவின் அடைக்கு நான் கேரண்டி.
என் தங்கை செய்யும் சிக்கன் பிரியாணி – எங்கு கற்றுக்கொண்டால் என தெரியவில்லை. திடீரென எங்கள் வீட்டில் பிரியாணி நிபுணராகிவிட்டாள்.
ஒரு கையில் கண்ணாடி கோப்பையில் சூடான தேநீர். மறுகையில் செய்தித்தாளில் சுற்றிய சூடான [வாழைக்காய்/மிளகாய்] பஜ்ஜி. டீக்கடை வாசல். வெளியே மழை. சொர்கம்.
என் அப்பாவும் நானும் சேர்ந்து செய்யும் பேச்சிலர் சமையல். (அம்மா ஊருக்கு வர இன்னும் 3 மாதங்கள் ஆகும். அதுவரை இது பிடித்தே ஆக வேண்டும். வேறு வழியில்லை :D)
சமீபத்தில் படித்த புத்தகங்கள்:
——————————–
கொற்றவை – ஜெயமோகன் [ஜெயமோகனின் ஆகச்சிறந்த ஆக்கம் இதுவென்பது என் எண்ணம்]
கைமறதியாய் வைத்த நாள் – எம். யுவன் – கவிதை தொகுப்பு. [கவிதை வாசிப்பில் நிகழும் அந்த அலாதியான அனுபவத்தை ஒவ்வொரு கவிதையினுள்ளும் ஒளித்துவைத்திருக்கும் தொகுப்பு]
சுபாஷிதம் – [மொழிபெயர்ப்பு – மதுமிதா]. [3000 ஆண்டு பழமையான சமஸ்கிருத கவிதைகளை இன்றைய புதுக்கவிதை சாயலோடு மொழிபெயர்த்துள்ளார் மதுமிதா. நன்றாகவே வந்திருக்கிறது]
ஆழ்நதியை தேடி – ஜெயமோகன். [சங்க இலக்கியத்தின் ஆன்மீகம் என்ன.. என்ற கேள்வியை மையமாய் கொண்டு ஜெமோ எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு].
சமீபத்தில் பார்த்த திரைப்படங்கள்:
————————————-
Children of Heaven – ஈரான்.
ரங் தே பஸந்தி – ஹிந்தி. நீண்ட நாட்களுக்கு பின் திரைக்கதை அமைப்பால் என்னை ஈர்த்த படம். வரலாற்றை சமகாலத்தோடு ஒப்பிட்டு கூறிய பாங்கு, படத்தின் தாக்கத்தை மேலும் ஆழமாக்கியதாய் எனக்கு படுகிறது.
காழ்ச்சா – மலையாளம் – அடைக்கும் தாழிலா பரிசுத்த அன்பு, இந்த "நடைமுறை" உலகில் படும் பாட்டை பற்றிய படம்.
The Little terrorist – ஹிந்தி – குறும்படம். ஆஸ்காருக்கு சென்ற இந்திய குறும்படம். 15 நிமிடத்தில் பல விஷயங்களை சொல்லி சட்டென முடிந்துவிடும் அற்புதப்படைப்பு.
பிடித்த பெண் கதாப்பாத்திரங்கள்
———————————–
பூரணி – குறிஞ்சி மலர் – நா.பா . என் முதலும் கடைசியுமான காதலி.
ஜமுனா – மோகமுள் – தி.ஜா
டாமினிக் ஃப்ராங்கன் – ஃபௌண்டைன் ஹெட் – அயன் ராண்ட். மிக மிக சிக்கலான, சுவாரஸ்யமான கதாபாத்திரம்.
கொற்றவையின் கண்ணகி.
பிடித்த ஆண் கதாப்பாத்திரங்கள்
———————————–
அரவிந்தன் – குறிஞ்சி மலர் – நா.பா
குட்டப்பன் – காடு – ஜெயமோகன்
ஹோவர்ட் ரார்க் – ஃபௌண்டைன் ஹெட் – அயன் ராண்ட்
வாத்தனாபி சான் – இகிரு (ஜப்பானிய திரைப்படம்) – அகிரா குரசோவா
பிடித்த பாடல்கள்
——————-
ஆறோடும் மண்ணில் எங்கும்… – பழனி – டி.எம்.எஸ்/சீர்காழி/P.B. ஸ்ரீநிவாஸ்/ஏ.எம்.ராஜன் – மெல்லிசை மன்னர்கள்
பூஜைக்காக வாழும் பூவை… – காதல் ஓவியம் – தீபன் சக்கிரவர்த்தி – இளையராஜா
கெஹனா ஹெ… கெஹனா ஹெ… – படோஸன் – கிஷோர் குமார் – S.D.பர்மன்
ஏ லாலு ரங் கப் முஜே சோடேகா – பிரேம் நகர் – கிஷோர் குமார் – S.D.பர்மன்
இவ்வளவு போதும் என படுகிறது. இதுக்கு மேல பீட்டர் உட்டா இது நான் படிச்ச பச்சையப்பன் கல்லூரிக்கு பன்னற துரோகம் 😀
நான் இப்ப இன்னும் நாலு பேர அழைக்கனுமாம். யார கூப்பிட? தெரியல. டப்புன்னு ஒரு நாலு பேர சொல்லறேன். அவங்க இந்த ஆட்டத்தை எனக்கு முன்னாடியே அடி இருந்தா நான் பொறுப்பு இல்ல.
மதுமிதா
மரவண்டு கணேஷ்
விழியன்
மதி கந்தசாமி
6 replies on “அந்த நான்கு விஷயங்கள்…”
//ஆறோடும் மண்ணில் எங்கும்… – பழனி – டி.எம்.எஸ்/சீர்காழி/P.B. ஸ்ரீநிவாஸ்/ஏ.எம்.ராஜன் – மெல்லிசை மன்னர்கள்// – என்னையும் மிகவும் கவர்ந்த பாட்டு.
//ஜமுனா – மோகமுள் – தி.ஜா//
I too loved her.
“ரங் தே பஸந்தி” பார்க்க வேண்டும் என்ற எனது ஆவல் மேலும் உறுதியடைந்துள்ளது சித்தார்த்.
யமுனாவை பிடிக்கும் என்றாலும் டாமினிக் அளவிற்கு இல்லை. ரோர்க் எனக்கும் பிடித்த கதாபாத்திரம்.
படோசனில் எனக்கு பிடித்த பாட்டு போட்டியின்போது பாடும் பாடல். நல்ல நகைச்சுவை
இஸ்ரேல் – 18 வயதிலிருந்து என் கனவு தேசம் இது.
Any special reason Sidharth!
Have you been in Israel?
regards,
sankar
வணக்கம் சித்தார்த்
நலமாக இருப்பீர் என்றே எண்ணுகின்றேன், முதலில் முன்னாள் ஆசிரியப்பணியிலிருந்த தகுதியில் “தங்கை – சிக்கன் பிரியாணி எங்கே கற்றுக்கொண்டால் ” இல்ல “கொண்டாள்” 🙂 மேலும், அந்த பஜ்ஜி சமாச்சாரம், ஹஹஹா சமீபத்தில் பார்த்த ஒரு விவேக் நகைச்சுவைதான் நினைவிற்கு வந்தது, தமிழன் படத்தில் பஜ்ஜி சாப்பிடுவது பற்றி ஒரு பாடம் எடுப்பார், அதுதான் 🙂
ஸ்ரீஷிவ்…:)