பிரிவுகள்
திரைப்படம்

சொர்கத்தின் குழந்தைகள்

"இப்பிரபஞ்சத்தின் முடிவிலா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை"

– மார்க் ட்வைன்.

உறவு. அலாதியான கருத்தாக்கம் இது. யோசித்துப்பார்க்கையில் என்னையும் என் தங்கையயும் இணைப்பது எது? எதன் விசையால் உருவானது எங்களின் பாசம்? என் தாயின் கருவறை என்னை பெற்றபோது, இன்னும் பிறக்காத என் தங்கைக்கு ஓர் அண்ணனை,தாத்தாக்களுக்கு பாட்டிகளுக்கு ஒரு பேரனை, ஒரு மாமனை, பெரிய கூட்டமொன்றிற்கு நண்பனை என ஒரு மிகப்பெரிய உறவுக்கூட்டமே அல்லாவா பெற்றது. நமது உறவுகள் வெறும் கருவறையின் அடிப்படையில் மட்டுமே அமைபவை. வேறு கேள்விகளே இல்லை. அயன் ராண்ட் (Ayn Rand), 'ஃபௌண்டைன் ஹெட்(Fountain Head)' நாவலில் ஒரு கேள்வி கேட்டிருப்பார். 'அவள் என் தாய் என்ற ஒரே காரணத்தால் நான் ஏன் அவளை மதிக்க, பாசம் வைக்க வேண்டும்' என. இந்த கேள்வி நமக்கு மிக அன்னியமான ஒன்று அல்லவா…?

அண்ணனுக்கு தங்கைக்குமான உறவை பற்றி காலம் காலமாய் நாம்மிடம் கதைகள் இருந்தபடியே உள்ளன. அவை எவ்வளவு sentimentalizedஆக இருந்தாலும் சரி (எனக்கு பொதுவாய் over sentimentalization பிடிப்பதில்லை), என்னை கொஞ்சமாவது உலுக்கிவிட்டே போகின்றன. பாசமலரில் இருந்து சமுத்திரம் வரை.

இந்த வரிசையில் இப்போது மஜித் மஜிதி இயக்கிய சொர்கத்தின் குழந்தைகள் (children of heaven) படத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். முற்றிலும் குழந்தைகளின் உலகிலேயே நிகழும் புனைவுகள் மிக அபூர்வமாகவே காணக்கிடைக்கின்றன. இப்படம் குழந்தைகளின் உலகில் நின்று குழந்தைகளின் பிரச்சனைகளை பேசுகின்றது. அண்ணனுக்கு தங்கைக்குமான உறவு தான் படத்தின் ஆதார அச்சு.

பாசம், அன்பு, தியாகம், பற்று, காதல் போன்ற உணர்வுகள் அரூபமானவை. மனம் சார்ந்தவை. அவை வெளிப்பட ஏதேதும் ஓர் பருப்பொருள் தேவைப்படுகிறது. இந்த படத்தில் அப்பருப்பொருளாய் ஒரு ஜோடி காலணிகள். பிய்ந்து போன காலணிகளை 9 வயது அண்ணனிடம் தைக்க கொடுக்கிறாள் 6 வயது தங்கை. செருப்பு தொலைந்துவிடுகிறது. அங்கிருந்தே ஆரம்பிக்கிறது படம். "சங்க இலக்கியம் எதை பற்றி பேசும்போதும் மனதை பற்றியே பேசுகிறது" என சங்க சித்திரங்களில் ஜெமோ கூறி இருந்தார். அது போல இந்த படம் செருப்பை பற்றியது அல்ல. செருப்பு என்ற பொருளை கொண்டு, உறவுகளின் மகத்துவத்தையும் அதன் முன் வெற்றிகளும் சுயநலன்களும் பொருளிழந்து போவதையும் பற்றி பேசுகிறது படம். தொலைந்து போன செருப்பை தேடியும் கிடைக்காமல் அண்ணனும் தங்கையும் ஒரு முடிவு செய்கின்றனர். தங்கைக்கு காலையில் பள்ளி. அண்ணனுக்கு மதியம். காலையின் அண்ணனின் காலணியை தங்கையும் மாலையில் அண்ணனும் போட்டுக்கொண்டு போவதாய் திட்டம். இதில் வரும் சிக்கல்களும் அவை எழுப்பும் மன அதிர்வுகளும் என படம் வளர்கிறது.

படத்தில் வரும் அந்த சிறுவனும் சிறுமியும் அவலது தோழியும் கொள்ளை அழகு. பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்த சிறுவனின் நடிப்பும் மிக நன்றாக வந்துள்ளது. ஷூ தொலைந்த பதட்டம், "பள்ளிக்கூடத்துக்கு செருப்பு போட்டுகிட்டு போகறது தான" எனும்போது ஒரு நக்கல், தாமதமாய் போனதற்காக ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் தவிப்பு என சகலத்தையும் அவனது கண்களே பேசுகின்றன. கடைசி ஓட்டப்பந்தைய காட்சியில் நிஜமாக நமக்கே மூச்சி வாங்குகிறது. 🙂

மஜித் மஜிதியின் அடுத்த படமான சொர்கத்தின் நிறம் (Color of Paradise), Children of Heavenஐ விட தொழிற்நுட்பத்திலும் திரைக்கதை அமைப்பிலும் மேலான ஒரு படமாகவே தோன்றுகிறது. ஆனால் இப்படத்தின் கரு, களம் மற்றும் அதன் எளிமை இதை ஒரு அனுபவமாக மாற்றுகிறது.

3 நாட்களுக்கு முன் தங்கைக்கு திருமணம் நடந்தது. மண்டபத்தில், இதன் கதையை சில சிறுவர்/சிறுமியர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தேன். மிகவும் ரசித்தார்கள். அதுவும் அந்த கடைசி ஓட்டப்பந்தைய காட்சியை சொல்லும்போது இருக்கையின் நுனியில் வந்து கதை கேட்டார்கள். முடிவை மட்டும் கொஞ்சம் மாற்றி சொன்னேன். பக்கத்தில் இருந்த ரெண்டு மூன்று 'பெருசு'கள் நான் ஏதோ சொந்தமாய் சொல்லியதாய் நினைத்துக்கொண்டு பாராட்டு வேறு. எல்லா புகழும் மஜிதுக்கே 😉 . மாயாஜாலக் கதைகளை மட்டுமே குழந்தைகள் ரசிப்பார்கள் என நினைத்திருந்த எனக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. தமிழில் இது போன்ற குழந்தை படங்கள் வரலாம். குறைந்த பட்சம், தொலைக்காட்சி தொடர்களாவது.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

9 replies on “சொர்கத்தின் குழந்தைகள்”

மிக நல்ல பதிவு சித்தார்த். நிச்சயம் திரைப்படம் பார்க்க தூன்டுகிற விதமாய் இருக்கிறது. இது நேரடி ஆங்கிலப்படமா அல்லது மத்திய கிழக்கு நாடுகல்ள்ன் (ஈரான்) படமா?

நன்றி.

சிவா

இப்படம் பற்றி எழுதப்பட்ட பிற வலைப்பதிவுகள் இங்கே. இத்தனை முறை படித்தும் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை! பார்த்துவிடுகிறேன்…

நல்ல பதிவு.
பாலுமகேந்திராவும் தனக்குப் பிடித்த முதல் பத்துப்படங்களில் இதையும் ஒன்றாகச் சொல்லியிருக்கிறார். ஈரான் படமென்று குறிப்பிட்டிருக்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s