பிரிவுகள்
பொது

என் சரித்திரம்

1979ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். இஸ்லாமிய புரட்சி நடந்து அயத்துல்லா கோமேனியின் கையில் ஈரான் நாடு சென்றது. சீன-வியட்நாமிய போர் ஆரம்பித்தது. சகாரா பாலைவனத்தில் 30 நிமிடங்கள் பனிப்பொழிந்தது. இந்த சரித்திர நிகழ்வுகளுக்கு மத்தியில் 25ஆம் தேதி காலை 9:10க்கு சென்னை அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது எனது பிறப்பு. 😀 .

அந்த சமயத்தில் என் தாத்தா ஓ.நா.துரைபாபு ஒரு சோஷியலிஸ்ட் மாநாட்டில் கலந்து கொள்ள போத்கயாவிற்கு (சித்தார்த்தன் புத்தனான இடம்) சென்றிருந்தார். நான் பிறந்த செய்தி அவரை அடைந்த போது, போத்கயாவின் நினைவாக எனக்கு சித்தார்த் என பெயரிட்டார். வளர்ந்தேன். குவைத் சென்றேன். இதோ இங்கு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

என்னை பற்றி இவ்வளவு போதும். உன் நண்பர்களை கூறு, உன்னை கூறுகிறேன் என்கிறது முதுமொழி ஒன்று. எனது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திய சிலரை பற்றி கூறி எனது அறிமுகத்தை முடிக்கிறேன்.

பாரதி. மூன்று வயதில் மாறு வேடப்போட்டியில், தலையில் முண்டாசை கட்டிக்கொண்டு "ஓதி விள்யாது பாப்பா.." என பாடத்தொடங்கிய போது தொடங்கியது பாரதியுடனான என் உறவு. அம்மாவிற்கு பாரதி என்றால் உயிர். அவர் மூலமாகவே பாரதியை பற்றிய பிம்பம் என்னுள் வளர்ந்தது. இன்றும் ஆச்சரியம் குறையாமல் தான் அவனை பார்க்கிறேன்.

ஓ. நா. துரைபாபு. என் தாய் வழி தாத்தா. சுதந்திர போராட்ட தியாகி. ஜெயப்பிரகாஷ் நாராயண் காங்கிரஸில் இருந்து வெளியேறி சோஷியலிஸ்ட் கட்சியை தொடங்கிய போது அதில் இணைந்தவர். முன்கோபி. கொள்கையில் பிடிப்பு என்றால் என்ன் என்று இவரிடம் தான் பார்த்தேன். தைரியசாலி. பல சமயங்களில் பாரதி இப்படி தான் இருந்திருப்பாரொ என எண்ண செய்தவர். பாரதி செல்லம்மாவிற்கு தந்த அனைத்து கஷ்டங்களையும் என் பாட்டி கிருஷ்ணவேனிக்கும் தந்தவர். நான் அழுத முதல் மரணம் இவருடையது. இன்றும் சமயங்களில் கண் கலங்கிவிடும், தாத்தாவை நினைக்கும் போது. இவரது அனுபவங்களை பற்றி தனி இழை ஒன்றே ஓட்டலாம். செய்யும் எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம்.

பூரணி. பள்ளி படிக்கும் போது தான் நா.பாவின் குறிஞ்சி மலரை படித்தேன். முதல் முதலில் படித்த போது ஏற்பட்ட அனுபவத்தை வார்த்தைகளில் சொல்லமுடியாது. அதன் கதாநாயகி பூரணி என்னை முழுவதும் ஆட்கொண்டாள். என் முதலும் கடைசியுமான காதல் கன்னி அவள் தான். 😀

ஹோவர்ட் ரார்க். கல்லூரி இரண்டாம் ஆண்டில் அயன் ராண்ட் எழுதிய Fountain Head என்ற நாவலை வாசித்தேன். அதன் கதாநாயகன் ஹோவர்ட் ரார்க். அதை தொடர்ந்த ஒரு மாத காலம் எனது ஒவ்வொரு செயலும் ஹோவர்ட் ரார்க்கின் அங்கிகாரத்திற்காக காத்திருந்தன. பேருந்தில் ஏறுவது முதல் அரசியல் பற்றி நண்பர்களிடம் உரையாடுவது வரை அனைத்திலும் ரார்க்கின் பாதிப்பு இருந்தது. எப்படியும் வருடத்திற்கு ஒரு முறையேனும் Fountain Head ஐ படித்து விடுகிறேன்.

ஜெயமோகன். அசோகமித்திரன் தொகுத்த "புதிய தமிழ் சிறுகதைகள்" என்ற புத்தகத்தை NCBH அங்காடியில் வாங்கினேன். 1999ஆன் ஆண்டு என நினைக்கிறேன். அதில் திசைகளின் நடுவே என்று ஒரு கதை. யார் எழுதியது என்று தெரியாது. படிக்க ஆரம்பித்தேன். ஒரு புதிய உலகிற்குள் நுழைந்த உணர்வு. அதுவரை நான் படித்தவற்றிலிருந்து முற்றிலும் வேறு மாதிரியாய் இருந்தது கதை. அதன் மொழி என்னை அலைக்கழித்தது. மீண்டும் மீண்டும் படித்தேன் கதையை. எழுதியது யாரோ ஜெயமோகனாம். தேடிப்பிடித்து அவரது விஷ்ணுபுரமும் பின் தொடரும் நிழலின் குரலும் வாங்கினேன். அன்று ஆரம்பித்து இப்போது கொற்றவை வரை ஒவ்வொரு படைப்பையும் வரி விடாமல் வாசித்து வருகிறேன். ஆனால் இம்மனிதன் என்னுள் தொடங்கிய சலனம் அடங்கவேயில்லை.

நன்றிகள்…
நான் எழுதுவதை வாசிப்பவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வாசிக்காமல் தப்பித்துவிட்டவர்களுக்கு – பிழைத்துக்கொள்வீர்கள். வாழ்த்துக்கள்.

பி.கு:

தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவாளராய் அறிவித்து 48 மணிநேரம் முழுதாய் போய்விட்ட நிலையில் இந்த அறிமுகத்தை எழுதுகிறேன். அதற்காய் மன்னிப்பு. விஷயம் இது தான். 10ஆம் தேதி தங்கைக்கு திருமணம். சரி பத்தாம் தேதி திருமணம் முடிந்துவிடும். அதன் பிறகு வேலை எதுவும் இருக்காதென நினைத்தேன். ஆனால் அதன் பிறகு தான் வேலை புதைமணலாய் இழுத்துக்கொண்டது. நேற்று இரவு தங்கையை மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு இதை எழுதத்தொடங்கினேன். இன்று வலையேற்றுகிறேன்.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

12 replies on “என் சரித்திரம்”

வாழ்த்துகள் சித்தார்த் [மணமகளுக்கு அண்ணா என்னும் முறையில் 🙂 ]

முடிந்த அளவு எழுதுங்கள். முன்னமே தெரிந்திருந்தால் தேதிகளை மாற்றியிருக்கலாம். உங்களை நிறைய எழுத வைக்கும் முயற்சிதான் இது.

இந்த வாரத்தில் நினைத்த அளவு எழுத முடியவில்லையென்றாலும் தொடர்ந்து அடிக்கடி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

-மதி

இந்த வார நட்சத்திரத்திற்கு என் வாழ்த்துக்கள்.

ஒரு சந்தேகம். பத்திரிக்கையில் மை அடிக்கும் அரபு நாடுகளில், வுட்ஸ்மன் மாதிரி திரைபடங்களை
திரையிடுகிறார்களா?

அன்புடன்
சாம்

நட்சத்திர அறிவிப்பு வந்த பிறகும்கூட ஆளைக் காணலையேன்னு பார்த்தேன்.

பரவாயில்லை. வந்துட்டீங்கெல்லே? கலக்குங்க.

தங்கையின் கல்யாணம் நல்லபடி நடந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

வாழ்த்து(க்)கள்.
என்றும் அன்புடன்,
துளசி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s