இந்த வாரம் இந்தியா செல்கிறேன். ஒரு மாத விடுப்பில். அதற்குள் முடிக்கவேண்டிய வேலைகள் ஏகத்துக்கு இருக்க இந்த வாரம் வலைப்பதிவு ஏதும் செய்யக்கூடாதென்று இருந்தேன். ஆனால் நேற்று நண்பர் முபாரக் அனுப்பிய மடலில் கிடைத்த கவிதைகள் சலனப்படுத்தி விட்டன. முபாரக்கின் கவிதைகளில் ஊடாடும் சுயம் அலாதியானது. கட்டளையிடும், அடிபனியும், குழம்பும், கண்ணீர் விடும். ஆனால் எல்லாவற்றையும் உண்மையாகவே செய்யும். நேற்று அவர் எனக்கு அனுப்பிய இரு கவிதைகள் இங்கே.
எந்த சமரசத்துக்கும் இடம்தராத
கலகக்காரனின் வேடத்தை அணிந்துகொண்டேன்
நினைவின் கிடங்கிலிருந்து
என் குழந்தையின் புன்னகைக் கீற்றினை
எடுத்துக்கொண்டேன்
இதுவரை எழுதப்படாத பாடல் ஒன்றை
எழுதி வைத்துக் கொண்டேன்
ஆறுதல் செய்யவியலாமல்
கிளைக்கும் அச்சத்தை
அடக்கிக்கொண்டேன்
இன்றிரவு நிகழவிருக்கும்
வெறுமையை எதிர்க்கவென
—–
காதல் கடிதம்
கைதேர்ந்த நுட்பங்களின்
ரகசியங்களுடன்
எழுது ஒரு வேட்டைக்குறிப்பை
பறவையின் பெருமைகளை பட்டியலிடு
பறவைகள் இல்லாமல்
வாழ்வு எத்தனை வெறுமையானது
என்பதை விளக்கிச்சொல்
பறவையின் ருசியைப் பற்றி
ஒருபோதும் குறிப்பிட்டுவிடாதே
இறுதியாக
ஓரிரு வரிகளில்
வில்லின் பெருமைதனையும் எழுது
யாரேனும் கேட்டால்
வேட்டைக்குறிப்புகள்
என்று சொல்லிவிடாதே
4 replies on “மனதை கவர்ந்த கவிதைகள்….”
உங்க சென்னை எண்களை சொல்லலாமே. சென்னை வாழ் நண்பர்கள் தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும்.
சென்னை சென்றவுடன் நிச்சயம் இடுகிறேன். பெங்கலூருக்கும் செல்லும் திட்டம் இருக்கிறது.
‘entha samarasathukkum idam tharatha….’ kavithai mikavum arumai..manathai thotathu.
நாகூரார் கவிதைகள் என்பதாலோ என்னமோ மனம் “விற்பெருமை” யில் மையங்கொண்டு விடுகிறது….