திரை என்று ஓர் புதிய மாத இதழ் துவங்கப்பட்டுள்ளது. உலகச்சினிமாவிற்க்கான இதழ் இது. மிகவும் வரவேற்கப்படவேண்டிய முயற்சி. சினிமாவை அறிந்துகொள்ளும் தாகத்துடன் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள இதழ். இவர்களது இணையத்தள முகவரி : http://www.thirainet.com
இந்த பதிவு, டிசம்பர் மாத திரை இதழின் வெளியான சாரு நிவேதிதாவின் “உலக சினிமா வரைபடத்தில் தமிழ் சினிமா?” என்ற கட்டுரையை குறித்து. கட்டுரை தமிழ் திரைப்படத்துறை உலக தரமான திரைப்படங்களை தராததன் காரணங்களை அலசுகிறது. இதற்கு தேவையான தமிழ் சினிமாவை பற்றிய வரலாற்று பின்புலத்தை தியோடர் பாஸ்கரன் எழுதிய “எம் தமிழர் செய்த படம்” நூலில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார் சாரு. கட்டுரையின் முதல் பாதி தியோடர் பாஸ்கரன் அவர்களது மொழியிலேயே முன்வைக்கப்படுவதால், நான் கொஞ்சம் குழப்பம் அடைந்தேன். உண்மைகள் உண்மைகளாகவே சொல்லப்பட்டன. சாருவின் வழமையான உதாசீனக்கருத்துகளாய் அவை மாறவில்லை. சரி, நம்ம தலைவர் மாறிட்டாரு, என தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். பாஸ்கரனின் பணி பாதி கட்டுரையில் முடிவடைந்தது. தமிழ் திரைப்படங்களில் வரலாற்று பின்புலம் விளக்கப்பட்டுவிட்டது. இதன் பிறகு சாரு தனது ஆலாபனையை தொடங்கினார்.
சாரு நிவேதிதாவின் ஒரு கூற்று உண்மை. உலக திரைப்பட அரங்கில் கவனம் பெற சினிமாவை கலைவடிவமாய் பார்க்கும் ஓர் கூட்டம் உருவாகவேண்டும். வணிக, பொழுதுபோக்கு திரைப்படங்களையும் தாண்டி வேறு ஒரு தளம் உருவாக்கப்படவேண்டும். இதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எடுக்கப்பட்டவை அனைத்துமே குப்பைகள் என்பது கட்டுரையின் தொனியாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களாக கருதப்படும் பாரதிராஜாவையும் மணிரத்னத்தையும் போகிறபோக்கில் தள்ளிவிடுகிறார்.மணிரத்னம் குறித்து பேசுகையில் மணியின் மூளையாக செயல்படுபவர் வணிக எழுத்தாளரான சுஜாதா, அதனால் மணியின் படங்கள் ஆழத்தை அடையமுடியவில்லை என்கிறார். சுஜாதாவிற்கு ஜாதி வெறியர் பட்டம் வேறு.
தவிரவும் தமிழ் திரைப்படத்துறையின் மிக முக்கியமான அங்கங்களான மகேந்திரன், பாலுமகேந்திரா, கமல்ஹாசன், பாலா போன்றோரைப்பற்றி எந்த குறிப்புகளும் இல்லை. பாலச்சந்தர் ஒரே வரியில் மௌளி, சோ போன்ற நாடக இயக்குனர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.
கட்டுரையில் கூறப்படும் சில படங்களை பற்றிய அவதானிப்புகள்:
பாரதி – தொலைக்காட்டி சீரியலை விட மட்டமாக இருந்தது.
மோகமுள் – ஷகிலா டைப் மலையாளப்பட ரேஞ்சில் இருந்தது
காதல் – “சிறுவர்களுக்கும் எழும் பாலியல் தேட்டத்தை எப்படி இந்த சமூகம் காதல் என்று பெயரிட்டு ரசிக்கிறது?”
மிக மிக மட்டமான படைப்புகளாக எனக்கு பட்ட “9 songs” (UK)உம், “Bais Moi”(France)உம் “உலகத்திரைப்படங்களாக” மேற்கில் கொண்டாடப்படுகையில், எங்களின் மகாநதியும், தேவர் மகனும், அந்தி மந்தாரையும், தண்ணீர் தண்ணீரும், நிழல் நிஜமாகிறதும், உதுரிப்பூக்களும், முள்ளும் மலருமும், வீடும், சந்தியா ராகமும், கன்னத்தில் முத்தமிட்டாலும், 16 வயதினிலேவும், சேதுவும், பிதாமகனும் எந்த பட்டியலிலும் இடம்பெறலாம். உலகசினிமா அந்தரத்தில் நிற்பதல்ல. அது அந்தந்த மண்ணோடு தொடர்புடையது. அப்படிப்பார்க்கையில் எங்களிடமும் மண்ணில் காலூன்றி நிற்கும் படங்கள் பல உண்டு.
சாரு நிவேதிதாவின் கடைசி பத்தியை போட்டு இந்த பதிவை முடிக்கிறேன்.
“எழுத்தாளர்களுக்கு சினிமா பற்றி தெரியவில்லை. சினிமாகாரர்களுக்கு கிஞ்சித்தும் இலக்கிய பரிச்சயம் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் “பைங்கிளி!” எழுத்தாளர்களைத் தான். அவர்கள் மட்டுமல்ல; தமிழ் சமூகமே கலை இலக்கியப் பிரக்ஞையற்று சக்கையைத் தின்றுகொண்டிருக்கிறது. அந்த நிலை மாறும்வரை தமிழ் சினிமாவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை”
– சித்தார்த்
5 replies on “சாரு நிவேதிதாவின் பார்வையில் தமிழ் சினிமா”
சனி, செப்டம்பர் 10, 2005
தமிழ் சினிமா, சாரு நிவேதிதா, தியோடர் பாஸ்கரன்
http://ravisrinivas.blogspot.com/2005_09_01_ravisrinivas_archive.html
//எங்களின் மகாநதியும், தேவர் மகனும், அந்தி மந்தாரையும், தண்ணீர் தண்ணீரும், நிழல் நிஜமாகிறதும், உதுரிப்பூக்களும், முள்ளும் மலருமும், வீடும், சந்தியா ராகமும், கன்னத்தில் முத்தமிட்டாலும், 16 வயதினிலேவும், சேதுவும், பிதாமகனும் எந்த பட்டியலிலும் இடம்பெறலாம்//
athu..
[…] அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: சித்தார்த் […]
இப்படி அனைத்து தமிழ்த்திரை ஆட்களையும் கிழித்து தோரணமிட்ட சாரு ஒரு பத்தியில் “இப்போது அவருக்கு பிடித்த சொல்லும்படி படமெடுப்பவர்கள் கில்லி தரணியும், ரன் லிங்குவும்” என்கிறார்! ஆச்சரியமாக இல்லை?!
சீக்கிரமே பாருங்கள்… தரணி, லிங்கு படங்களில் சாரு வசனகர்தாவாக வரக்கூடும்! 🙂
//எங்களின் மகாநதியும், தேவர் மகனும், அந்தி மந்தாரையும், தண்ணீர் தண்ணீரும், நிழல் நிஜமாகிறதும், உதுரிப்பூக்களும், முள்ளும் மலருமும், வீடும், சந்தியா ராகமும், கன்னத்தில் முத்தமிட்டாலும், 16 வயதினிலேவும், சேதுவும், பிதாமகனும் எந்த பட்டியலிலும் இடம்பெறலாம். உலகசினிமா அந்தரத்தில் நிற்பதல்ல. அது அந்தந்த மண்ணோடு தொடர்புடையது. அப்படிப்பார்க்கையில் எங்களிடமும் மண்ணில் காலூன்றி நிற்கும் படங்கள் பல உண்டு.//
சும்மா நச்சுண்ணு சொன்னீங்க!