எனக்கு ஜாக்கி ஜான் படங்கள் மேல் ஒரு ஈர்ப்பு. எத்தனை முறை பார்த்தாலும சலிக்காது. மூளைக்கு வேலையெல்லாம் தராமல் சிரித்து, வெளியே வந்ததும் யாரையாவது அடிக்கவேண்டும் என கைகள் ஊரியபடி இருக்க ரோட்டில் ஹீரோ போல நடந்துசெல்லும் சுகம் இருக்கிறதே….. அது, அது தான். 🙂 ஆனால் தலைவர் இப்போதெல்லாம் அநியாயத்திற்கு சொதப்புகிறார். கடைசியாக வந்த மித் ஒரு விபத்து. மலைக்கா ஷராவத்துக்காக வேண்டுமானால் பார்க்கலாம். அவர் வரும் 20 நிமிடத்திற்காக 2 மணிநேரம் கொடுமையை அனுபவிக்க தயார் என்றால் மட்டும்.
இது இப்படி இருக்க, நேற்று நான் பார்த்த ஒரு தாய்லாந்து படத்தின் கதாநாயகன் பழைய ஜாக்கிஜானை நினைவுபடுத்தினான். அதுவும் எப்படி !!!! பையன் பேர் டோனி ஜா. பாவம், பிறக்கும் போதே உடம்பில் எலும்புகள் இல்லை போலிருக்கிறது. கூடவே கண்ணுக்கு தெரியாத ரெக்கையும் இருக்கிறது என படுகிறது. மனிதனில் ரஜினி சொல்வாரே, “சும்மா பறந்து பறந்து அடிப்பேன்” என்று. அப்படி தான் அடிக்கிறான். கால் தரையில் நிற்கவில்லை.
சரி சரி. படத்துக்கு வருகிறேன். படத்தின் பெயர் டாம் யம் கூங் (+) (Tom Yum Goong). தாய் (Thai) மொழி படம். கதை நம்ம எஸ்.பி. முத்துராமன் முதல் ராம.நாராயணன் வரை பலரும் அலுக்க அலுக்க சொன்ன கதை தான். தாய்லாந்தில் கதாநாயகனின் (காம்) அப்பா ஓர் யானையையும் அதன் குட்டியையும் வளர்க்கிறார். காமுக்கு குட்டி யானையின் மீது அலாதி பிரியம். ஒரு நாள் கடத்தல்காரர்களால் இந்த இரு யானைகளும் ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட, அதை தேடி ஆஸ்திரேலியா செல்கிறார் காம். அங்கு ஒரு கடத்தல் கும்பலுடன் மோதல் ஏற்பட, நம்ம விஜய், விக்ரம் கணக்காய் எல்லாரையும் தும்சம் பண்ணிவிட்டு யானையுடன் தாய்லாந்து திரும்புகிறார். சுபம்.
திரைக்கதைல அவ்வளவு ஆழம் இல்ல, இந்த கதாப்பாத்திரம் தட்டையா இருக்கு, எடுத்த விஷயத்த இன்னும் கொஞ்சம் நேர்மையா அனுகி இருக்கலாம் போன்ற ஜெர்க்குகளை விடுபவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த படம் உங்களுக்கானதல்ல. அப்பழுக்கற்ற, 100% சுத்தமான அக்மார்க் சண்டை படம் இது. அதுவன்றி வேறல்ல. 😀
ஏதோ பெரிய விஷயத்தை சொல்வதை போல சொன்னேன் எனது குவைத் நண்பர்களிடம் டோனி ஜாவை பற்றி. யாரு, அந்த “ஓங்க்பாக்”ல (டோனி ஜாவின் முந்தைய படம்) நடிச்சானே அவன் தான. ஆமாம், செமையா சண்ட போடறான். அதுக்கு? என்றார்கள் படு நிதானமாக. இங்கு குவைத்தில் டோனி ஜாவிற்கு நிறைய ரசிகர்கள் அதற்குள் சேர்ந்து விட்டார்கள். டோனி ஜாவை வைத்து கணினி விளையாட்டு கூட வந்துவிட்டதாம். இ.தி.கு(*) கணக்காய் அறையை விட்டு வெளியே வந்தேன்.
+ – டாம் யம் கூங் என்பது ஒரு வகை இரால் சூப்பாம்.
* – இஞ்சி தின்ன குரங்கு
One reply on “அடுத்த ஜாக்கிஜான் வந்தாச்சுடோய்….”
சித்தார்த்,
எப்படி இருக்கீங்க,
டோனி ஜா – இதுவரை நான் கேள்விப்படாத பெயர். இனிமேல் தான் இவரைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
இங்கே தியேட்டரில் இவரது படம் வந்தால் சொல்லுங்க.