காற்றை கோவலன் நன்கறிவான். யாழின் குடத்துக்குள் ஒளிந்திருக்கும் மெல்லிய காற்றுடன் தான் அவன் விரல்கள் ஓயாது பேசின. யாழின் உடல் அக்காற்றின் கலமன்றி வேறல்ல. நரம்புகள் சென்று தொடுவது அதன் காணா நுண்மையையே.
மெல்விரல் மீட்டல்களினூடாக அவன் மீண்டும் மீண்டும் வினவுவதெல்லாம் அதனிடம்தான். இசையென்பது அந்தக் காற்றின் அமைதியின் கரு முளைக்கும் தளிர். விரல்களில் இல்லை இசை. விரல்நுனிகளைத் துடிதுடிக்கச் செய்யும் அகத்தின் தாகத்திலும் இல்லை அது. கலங்களில் எல்லாம் தன்னை நிரப்பிக்கொள்ளும் வானத்தில் உள்ளது இசை. கலத்தில் அள்ளும் வானமே இசையா? தன் விரல்களை அவன் பார்ப்பதுண்டு. அவை ஒருகணம்கூட ஓயாமல் மீட்டிக் கொண்டிருக்கின்றன. யாழில்லாதபோது காற்றின் கற்றைகளை அல்லது வானின் விளிம்புகளை ஓயாது மீட்டி இவ்விரல்கள் எழுப்பும் முடிவற்ற வினாக்களின் தொகையா அவன் அகம்? அவ்வினாக்கள் சென்று மோதிப் பின்வாங்கும் விடையின்மையா அவன்?
– ஜெயமோகன் (கொற்றவை. பக்கம்:102)
2 replies on “ஜெயமோகனின் கொற்றவையிலிருந்து ஒரு பத்தி”
// அவ்வினாக்கள் சென்று மோதிப் பின்வாங்கும் விடையின்மையா அவன்? //
இவ்விதம் யோசித்து எழுதுபவர் தமிழில் வேறு யாராவது உள்ளார்களா ?
தூற்றுவோர் தூற்றட்டும். 🙂
உங்கள் பதிவில் ஜெயமோகனை பற்றி எழுதி இருந்ததை படித்தேன். நன்றாக வந்திருந்தது. நன்றி.