படம்: சிடிசன் கேன் (Citizen Kane)
மொழி: ஆங்கிலம் (அமெரிக்கா)
ஆண்டு: 1941
இயக்கம்: ஆர்ஸன் வெல்லஸ்
ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டாகிவிட்டது கடந்த 60 ஆண்டுகளில். இன்றும் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதும்போது ஏதோ ஓர் புதிய அவதானிப்பு காணக்கிடைக்கிறது. சிடிசன் கேன் (Citizen Kane) வெளிவந்தது 1941ஆம் ஆண்டில். இதன் உருவாக்கமே ஓர் விந்தை தான். 25 வயதே நிரம்பிய ஆர்ஸன் வெல்லஸ்(Orson Welles) கையில் ஆர்.கே.ஓ நிறுவனம் தங்களது முழு studioவையும் கொடுத்து, பணம் ஒரு பிரச்சனையே இல்லை என கூறி ஓர் படத்தை இயக்க சொல்கிறது. படத்தின் நடிகர்கள் பெரும்பாலானோர் வெல்லஸின் நண்பர்கள். திரைதுறைக்கு புதியவர்கள். கதை, திரைக்கதையை ஆர்ஸன் வெல்லஸுடன் இணைந்து எழுதியது பயங்கர குடிகாரரான ஹெர்மென் ஜெ. மேன்கெய்விக்ஸ். விளைவு? இதோ 60 வருடம் கழித்து நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் இதை பற்றி. 🙂
பொதுவாகவே 40களில் வெளிவந்த ஆங்கில படங்களில் ஒரு வித நாடகதன்மை இருக்கும். சில படங்கள் அந்த நாடகத்தன்மையாலேயே அமரத்துவம் பெற்றன. காஸபிளாங்கா (Casablance) போல. யதார்தத்திற்கு மிக அருகில் பயணிக்கும் படங்கள் மிக அரிதாகவே வந்தன (நான் பார்த்தவரை). இந்த சூழலில் சிடிசன் கேன், தனித்து நிற்கிறது. படம் ஒரு மனிதனின் வாழ்வை பற்றியது. நல்லதும் தீயதும் சேர்ந்த ஓர் மனிதனை பற்றியது. இதை நேராக, கேன் இங்கு இந்த வருடம் பிறந்தார். இப்படி எல்லாம் வளர்ந்தார் என கூறி இருந்தால் அது தட்டையான படைப்பாகவே இருந்திருக்கும். இதை போக்க ஓர் அருமையான யுக்தியை கையாண்டார்கள் திரைக்கதையில்.
படம் தொடங்குவது சார்லஸ் ஃபாஸ்டர் கேனின் (Charles Foster Kane) மரணப்படுக்கையில். தனக்கென கட்டிய அந்த பிரம்மாண்ட மாளிகையில், செவிலியின் துணையோடு மரணத்தை எதிர்நோக்கும் கேனின் கடைசி சொல்லாய் வருகிறது “ரோஸ்பட்”(Rosebud). ரோஸ்பட் என்றால் என்ன? அந்த சொல்லுக்கும் கேனின் வாழ்விற்கும் என்ன தொடர்பு? இதை ஆராய்ந்து ஓர் கட்டுரை எழுதலாம் என
முடிவெடுக்கிறது செய்தி நிறுவனம் ஒன்று. கேனின் நண்பர்கள், விரோதிகள், காதலி என பலரின் கோணங்களில் கேனின் வாழ்வு நம் கண்முன் விரிகிறது. காலத்தை சீட்டுக்கட்டாய் கலைத்துப்போட்டு அதன் மீது கம்பீரமாய் நிற்கிறது திரைக்கதை.
கேன் பிறந்தது ஓர் ஏழை குடும்பத்தில். ஆனால் கேனின் 9வது வயதில் அவனது தாயாருக்கு நிறைய சொத்து இருப்பது தெரிய வர, அதை எல்லாம் அவன் பெயரில் எழுதிவைத்து, அவனையும் ஓர் கண்டிப்பான பணக்காரரின் பொறுப்பில் விடுகிறார். அவர்களுடன் இருந்தால் அவன் சரியாக வளர முடியாது என்ற எண்ணத்தில். படிப்பை முடித்து, ஒரு செய்தித்தாளை துவக்கி, அதை பன்மடங்காய் பெருக்கி, அரசியலில் கால் வைத்து, சூடு பட்டு…… நிலையில்லாமல் கழிந்த வாழ்வு கேனுடையது.
துருவித்துருவித் தேடியும் ரோஸ்பட்டின் அர்த்தம் விளங்கவில்லை அந்த பத்திரிக்கையாளர்களுக்கு. கேனின் மாளிகையில் அவனது பொருட்களை எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டே சொல்கிறார் அவர், “ஒரு வேளை அந்த வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லையோ? ஒரு சொல்லைக்கொண்டு ஒருவனின் வாழ்வை விளக்க முடியாது”. அடுத்த காட்சி, கேனின் பழைய பொருட்கள் எல்லாம் தீயில் இட்டு எரிக்கப்படுகின்றன. அதிலிருக்கும் பனி சருக்கு பலகை ஒன்று தீயிலிடப்படுகிறது. அவனது தாயாரை விட்டு அவன் பிரிந்த நாள், கேன் விளையாடிக்கொண்டிருந்த சருக்குப்பலகை அது. அதன் மீது பெரிய எழுத்தில் இருக்கும் “ரோஸ்பட்” தீயில் கருகும் காட்சியுடம் முடிவடைகிறது படம்.
முடிவை பார்த்தவுடன் தோன்றியது. எனில், கேனின் அதன் நிலையின்மை இழந்த குழந்தைமைக்கான பழிவாங்குதல் தானா? நீங்கள் வேறு ஓர் முடிவிற்கு வரக்கூடும். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கான முடிவுகளுடன் மீள்வோம். ஏனெனில் சிடிசன் கேன் ஓர் வாழ்வை பற்றி பேசுகிறது. வாழ்க்கை மாயக்கண்ணாடியை போல. அதில் நாம் எதை பார்க்க விரும்புகிறோமோ, அதுவே தெரிகிறது.
படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. இது ஓர் நிஜ மனிதனின் வாழ்வை கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட படம். செய்தித்தாள் துறையின் ஜாம்பவானாக இருந்த வில்லியம் ஹேர்ஸ்டின் வாழ்வையொட்டியே திரைக்கதையை பின்னி இருந்தார் வெல்லஸ். ஹெர்ஸ்டும் தன்னால் இயன்றதையெல்லாம் செய்து பார்த்தார், படத்தின் வெளியீட்டை நிறுத்த. ஆனால், வெல்லஸ் சாமர்த்தியமாக படத்தை வெளியிட்டுவிட்டார். ஆனால் ஹெர்ஸ்டின் எந்த செய்தித்தாளும் இப்படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை. ஹெர்ஸ்டின் செய்தித்தாளான லாஸ் ஏஞ்சல்ஸ் ஹெரால்ட் படம் வந்து 30 வருடங்கள் கழித்து 1971ஆம் ஆண்டு ஓர் விமர்சனம் எழுதியது.
1999ஆம் ஆண்டு அமெரிக்க அரசு 20ஆம் நூற்றாண்டு அமெரிக்க வரலாற்றை நினைவுகூறும் விதமாய் சில தபால்தலைகளை வெளியிட்டது. அதில் ஒன்று “சிடிசென் கேன்” நினைவு தபால்தலை.
7 replies on “ஆதியில் ஒரு சொல் இருந்தது….சிடிசன் கேன் குறித்து”
Good review Siddharth. Please read the review I wrote in Maraththadi a while back.
http://www.maraththadi.com/article.asp?id=1071
Regards,
.:dYNo:.
your review has created quite an air of expectancy… or was it the film? 😉
ரோஸ்பட்டின் அர்த்தம் விளங்கவில்லை
tumbler talk with William Randolph Hearst or Marion Davies 😉
tumbler talk with William Randolph Hearst or Marion Davies 😉
இது விளங்கவில்லை. (பெயர் என்னவோ?)
ரோஸ்பட் கேன் இழந்த குழந்தைமையின் குறியீடாகவே படத்தில் வருவதாக நான் நினைக்கிறேன். அதை தான் சொல்லி இருந்தேன்.
சித்தார்த் நான் எழுதியது, திரைப்படத்துக்கு அப்பால் வெல்ஸுக்கு ‘ரோஸ்பட்’ என்ற பதம் முகிழ்த்ததற்குச் சொல்லப்படும் காரணம் குறித்தது.
William Hearst மற்றும் Marion Davies விவகாரத்தை இப்போது தான் விகிபீடியாவில் படித்தேன். நன்றி. 60 வருஷம் கழிச்சு படிச்சாலும் கிசு கிசு சுவாரஸ்யமாதான் இருக்கு 😉
[…] அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: சித்தார்த் […]