பிரிவுகள்
திரைப்படம்

பழியுணர்ச்சி – வெறுமையை நோக்கி ஓர் பயணம்.

படங்கள்: Oldboy மற்றும் Sympathy for Lady Vengeance
மொழி: கொரிய மொழி (Korean)
இயக்குனர்: சான்-வூக் பார்க்

REVENGE is barren of itself: it is the dreadful food it feeds on; its delight is murder, and its end is despair.

– Johann Friedrich Von Schiller

பழியுணர்ச்சி நமது ஆதார உணர்வுகளில் ஒன்றா? இருக்குமென்றே தோன்றுகிறது. அவன் அடித்தால் திரும்ப அடிக்காதே என சொல்லத்தான் நமக்கு அறிவுரை அதிகம் தேவைபட்டுள்ளது. பழியுணர்ச்சியை மையமாய் கொண்ட மூன்று படங்களை (trilogy) இயக்கவேண்டுமென நினைத்தார் கொரிய இயக்குனர் சான்-வூக் பார்க். அதன் பலனாய் உருவானவை sympathy for mr. vengeance, oldboy மற்றும் sympathy for lady vengeance. இன்னும் sympathy for mr. vengeance கையில் கிடைக்கவில்லை. நீண்ட நாட்களாய் தேடிக்கொண்டிருக்கிறேன். oldboyஐ பற்றி.

கண்ணை மூடிக்கொண்டு இதை யோசித்துப்பாருங்கள். இன்று உங்கள் மகளுக்கு பிறந்தநாள். கொஞ்சம் அதிகமாகவே குடித்துவிட்டு அவளுக்கான பரிசுடன் மழையில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்களை காணவில்லை. ஒரு சின்ன அறை. 15 வருடம் இதே அறையில் அடைக்கப்படுகிறீர்கள். யார் உங்களை அடைத்துவைத்திருக்கிறார்கள், எதற்காக என எதுவும் தெரியவில்லை. வேளாவேளைக்கு உணவு வந்துவிடுகிறது. சில சமயங்களில் மயக்க வாயுவை அனுப்பி மயக்கப்படுத்தி விட்டு சிகைவெட்டும். ஒரு தொலைக்காட்சிப் பெட்டி உண்டு. மெல்ல மெல்ல அந்த தொலைக்காட்சியே உங்கள் உலகம் என்றாகிறது. ஒரு நாள் மயங்குகிறீர்கள். கண்விழித்துப்பார்த்தால் நீங்கள் வெளியே எங்கேயோ. உங்கள் நிலை என்னவாக இருக்கும்? இந்நிலையில் சிக்கிய ஓதேசு என்ற ஓர் மனிதனின் வாழ்வை பேசுகிறது இப்படம். பழியுணர்ச்சியை தவிர வேறு எதுவும் இல்லை அவனது மனதில். ஆனால் ஒரு பிரச்சனை. யாரை பழிவாங்க? அதை தேடிய பயணமும் அதன் விபரீத முடிவுகளுமே படத்தின் கதையாய் அமைகின்றன.

oldboy நான் பார்த்த இரண்டாவது கொரிய படம். முதல் படம் spring, summer, fall, winter and spring. அது ஜென்மத கோட்பாடுகளை பற்றி, வாழ்வின் சுழற்சியை பற்றி மௌனமாய் பேசும் படம். oldboyயின் கதையே வேறு. நொடிக்கு நொடி தன்னையே புதுப்பித்துக்கொண்டு முன்னேறும் திரைக்கதையும் மனிதனின் ஆழ்மன இச்சைகளை, அதன் விளைவுகளை எந்த வடிகட்டலும் இல்லாமல் முகத்தில் அரைந்தார்ப்போல் சொல்லும் காட்சிகளும் ஒவ்வோர் காட்சியிலும் வியக்க வைக்கும் செய்நேர்த்தியும் ஹாலிவுட் படங்களின் தரத்தை மிஞ்சுகின்றன.

படத்தின் கடைசி சில காட்சிகள் நம்மை உலுக்கிவிடும். நாம் அதிகம் பேசாத சில விஷயங்களை மிக சாதாரனமாக கையாண்டுள்ளார்கள். தேவையா என கூட தோன்றியது எனக்கு.

பி.கு : இப்படம் இப்போது அப்பட்டமாக திருடப்பட்டு சஞ்சய் தத் நடிப்பில் “ஜிந்தா” என்ற பெயரில் ஹிந்தியில் வெளிவந்திருக்கிறது. (படத்தின் முடிவு மாற்றப்பட்டு)

sympathy for lady vengeance. இதுவும் பழிவாங்கும் கதையமைப்பை கொண்ட படம் தான். ஆனால், இதன் களம் வேறு. கதையிலோ அல்லது திரைக்கதையிலோ oldboy அளவிற்கு புதுமைகள் இல்லை. ஆனால் oldboyஐ விட இது நம் மனதை அதிகமாகவே தொட்டுச்செல்கிறது. படத்தின் கதையை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்.

“பணக்கார வீட்டு குழந்தையை கடத்துவது அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது. பணத்தை பெற்றுக்கொண்டு அந்த குழந்தையை நாம் திரும்ப அனுப்பிய உடன் அதன் மீதான அக்குடும்பத்தாரின் அன்பு பலமடங்கு கூடி விடும்”
இந்த காரணத்தை சொல்லி 18 வயதே நிரம்பிய லீ – கெயும்ஜாவை தனது கடத்தல் திட்டத்திற்கு துணைக்கு அழைக்கிறான் அவன். அவளும் சம்மதிக்கிறாள். ஆனால் கடத்திய அந்த 5 வயது சிறுவனை அவன் கொன்றுவிடுகிறான். லீயின் குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டி, அவளை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கிறான். 13 வருட சிறைவாசம் முடிந்து வெளியே வருகிறாள் லீ.

ஓர் குழந்தையின் மரணத்திற்கு தானும் ஓர் காரணம் என்ற குற்றவுணர்வு அரிக்க, வெளியே வந்தவுடன் தனது பழிவாங்கும் திட்டத்தை ஆரம்பிக்கிறாள். மெதுவாய் காய்களை நகர்த்தி, அந்த கொலைகாரனை கண்டுபிடித்து, அவனை கொல்ல ஓர் பழைய பள்ளி கட்டிடத்திற்கு கொண்டுவந்து விடுகிறாள்.

அவனை கொல்லப்போகும் அந்த தருணத்தில், அவன் வேறு 4 குழந்தைகளை கொலை செய்திருப்பதும் தெரியவருகிறது. பழிவாங்குதலில் அக்குடும்பத்தாருக்கும் பங்கு இருக்க வேண்டும், அதுவே தர்மம் என கருதி அவர்களையும் அழைத்து வந்து அவனை கொல்கிறாள்.

இத்தனைக்கு பிறகும் அக்குற்றவுணர்வின் பிடியிலிருந்து தான் விடுபடாதத்தை அவள் உணர்வதோடு படம் முடிகிறது.

படத்தின் ஒளிப்பதிவும், காட்சி அமைப்பும் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியபடியே இருந்தன. பொதுவாக அகிரா குரோசாவாவின் படங்களில் ஓர் அம்சம் இருக்கும். ஓர் காட்சியில் 10 பேர் தெரிந்தார்களெனில், அப்பத்துப்பேரும் அவர்களாகவே இருப்பர். இது தனியாக நம் கண்ணில் படாது. ஆனால் மொத்த காட்சியின் நம்பகத்தன்மையை வெகுவாக கூட்டிவிடும். இந்த அம்சத்தை இப்படத்தில் பல இடங்களில் பார்க்க முடிந்தது. உதாரணமாக இறந்து போன குழந்தைகளின் உறவினர்கள் யாவரும் தங்கள் வரிசை வருவதற்காய் காத்திருக்கிறார்கள் (யார் எந்த வரிசையில் அவனை துன்புறுத்துவது என சீட்டுப்போட்டி முடிவெடுத்தனர்). ஒரே நேரத்தில் 9 பேர் திரையில் தெரிவார்கள். ஒவ்வொருவரும் அவரவர்க்கான யதார்த்த செய்கைகளுடன்.

படத்தின் இன்னோர் மிகப்பெரிய பலமாக எனக்குப்பட்டது அதன் மெல்லிய அங்கதம். பெற்றோர் அனைவரையும் ஓர் இடத்தில் கூட்டி, அவர்களுக்கு அவர்களது குழந்தைகள் மரணமடைந்த விதத்தை காட்டும் படங்களை காண்பிக்கிறாள் லீ. இனி கூட்டம் முடிவு செய்ய வேண்டும் அந்த கொலைகாரனை என்ன செய்ய வேண்டுமென. அந்த காட்சியின் எள்ளல் அலாதியானது. குழந்தையின் கொலையை பார்த்த பெற்றோரின் மனநிலைக்கும், கொலைக்கு / சமூகத்திற்கு அஞ்சும் சராசரி குடிமக்கள் மனநிலைக்கும் இடையில் ஊஞ்சலாய் ஆடும் அக்கூட்டம். இந்த காட்சி மிக அழகாய் விரிந்து வரும் விதம், ரசிக்க வைத்தது.

கொரிய சினிமாவின் மீதான மதிப்பு என்னளவில் மிகவும் உயர்ந்திருக்கிறது இந்த ஒரு மாதத்தில்.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

3 replies on “பழியுணர்ச்சி – வெறுமையை நோக்கி ஓர் பயணம்.”

//கொரிய சினிமாவின் மீதான மதிப்பு என்னளவில் மிகவும் உயர்ந்திருக்கிறது இந்த ஒரு மாதத்தில்.//
என் அபிப்ராயமும் இதே. சமீபத்தில் நான் பார்த்த இரு கொரியப் படங்களுமேகூட சோடைபோகவில்லை (Painted fire, 3-iron).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s