ஜெயமோகன், சுந்தர ராமசாமியின் நினைவாக எழுதிய “நினைவின் நதியில்” நேற்று இரவு கைக்கு கிடைத்தது. இரவோடு இரவாக படித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். படித்த முடித்த கணம் தோன்றிய உணர்வு சுராவின் மேல் பிரியம் தான். தேவதூதனாகவோ அசுரனாகவோ அல்லாமல் ஒரு மனிதனாக சுராவை காட்டியது இவ்வஞ்சலி. புத்தகம் முழுவதுமே ஜெயமோகனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையிலான ஒரு பெரிய உரையாடல் போலவே செல்லுகிறது. அதனாலேயே அலுப்பு தட்டாமல் ஒரே வாசிப்பில் முடிக்க முடிந்தது.
புத்தகத்தில் சுராவின் ஒரு பரிமாணம் முழுவதுமாக பதிவாகியுள்ளதென்றால் அது அவரது நகைச்சுவை உணர்வாகத்தான் இருக்கும். இரவெல்லாம் சிரித்தபடியே படித்துக்கொண்டிருந்தேன் இதை. பெரிய பெரிய நிகழ்ச்சிகள் அல்ல. மிக சின்ன நிகழ்வுகளில் சுராவின் timing sense மூலம் தெரிக்கும் நகைச்சுவைகள். ஒரு உதாரணம்:
எண்பதுகளில் ஒருமுறை நாடகப் பேராசிரியர் சே.ராமானுஜம் சுந்தர ராமசாமியின் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தார். நானும் சுந்தர ராமசாமியும் அவரது உணவு மேஜையில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். சே. ராமானுஜம் எழுந்து வந்து கொட்டாவியுடன் “சவுண்ட் ஸ்லீப்” என்றார். “கேட்டேன்” என்றார் சுந்தர ராமசாமி. அவர் கவனிக்காமல் காபியை எடுக்க நான் சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அந்த கூரிய நேரக் கணக்குதான் சுந்தர ராமசாமி.
புத்தகமெங்கும் இது போன்ற தெரிப்புகள் பரவிக்கிடக்கின்றன.
காந்தியை தொட்டு செல்லும் பல விஷயங்களும் இப்போது என் கண்ணில் பட்டபடியே உள்ளது. இப்புத்தகத்தில் சுரா காந்தியை பற்றி பேசியதாக ஜெயமோகன் எழுதிய பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தன. காந்தியை எப்படி வகைப்படுத்துவது என்பதில் எனக்கு இருக்கும் சில பிரச்சனைகளை இப்பகுதிகள் தொட்டு செல்கின்றன. அதிலிருந்து ஒரு பகுதி.
“அவரை நன்னா புரிஞ்சுண்டவர் ரொமைன் ரோலந்த், மார்டின் லூத்தர் கிங் ஜூனியர், இ.அம்.ஷூமாக்கர், இவான் இல்லிச்….” ஏன் மேல்நாட்டினர் காந்தியைப் புரிந்துகொள்கின்றனர்? “ஏன்னா காந்தி ஒரு இந்திய மைண்ட் செட்டப் உள்ளவர் இல்லை. அவரோட மனசு வெஸ்டர்ன் மனசு…” சுந்தர ராமசாமியின் ஆச்சரியமளிக்கும் அவதானிப்புகளில் ஒன்று இது. “அவருக்கு இந்தியா மேல ஆழமான பற்று இருந்துது. ஆனா இந்தியாவை ஒரு வெஸ்டர்னர் பாக்கற மாதிரித்தான் அவர் பாத்தார். பாருங்க எப்பவுமே அவருக்கு உணர்ச்சிகரமான பற்று கெடையாது. சரித்திர மயக்கம் இல்லை. காசிக்கு போறார். கோயில் அழுக்கா இருக்கேன்னுதான் அவருக்கு படுது. எல்லாத்தையும் சயண்டிஃபிக்கா பாக்கிறார் அவர். வயத்து வலியா, மலச்சிக்கலா, அவுரி விவசாயிகளோட பிரச்சனையா… எல்லாத்தையும்… அன்னியதுணி பகிஷ்கரிப்பு எவ்ளவு சயன்டிஃபிக்கா யோசிச்சு போட்ட திட்டம், யோசிச்சு பாருங்க… அதே மாதிரி உப்பு சத்தியாக்ரகம்… அவருக்குத் தெரியும் உப்பைக்கூட காச்ச விட மாட்டேங்கறானேன்னு ஜனம் கொதிச்சுப்போகும்னு… வெஸ்டர்னர் இந்தியாவுக்கு வந்தா இங்க உள்ள அழுக்கும் குப்பையும் தான் கண்ணில படும், காந்திக்கும் அப்டிதான். எல்லாத்தையும் எப்பவும் சின்ன அளவில செஞ்சு பாத்து அதில் உள்ள நடைமுறைப் பிரச்சனைகளைப் பத்தி யோசிச்சு மேலே கொண்டுட்டு போறார் … தொடர்ச்சியா எல்லா போராட்ட முறைகளையும் இம்ப்ரூவ் பண்ணிண்டே இருக்கார். மிகப் பெரிய ஒரு சோஷியாலஜிஸ்ட் மாதிரி யோசிச்சு திட்டம் போடறார் மனுஷன் … அவரோட அந்தராத்மா இருக்கே அது வேற யாருமில்ல, இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சயண்டிஸ்ட்தான் .. அது ராமன்னு கெழம் தப்பா நினச்சுண்டுடுத்து …” சுந்தர ராமசாமி சிரித்தார்.
“சும்மாவா? குஜராத்தின்னா! நேக்கு தெரிஞ்சு லௌகீகத்ல கெட்டியா இல்லாத ஒரே ஒரு குஜராத்தில்தான் இருக்கார், நம்மூர்ல புக்ஸ் வித்துண்டிருக்கார்” (திலீப்குமார்!)
– சித்தார்த்
4 replies on “சுந்தர ராமசாமி – நினைவின் நதியில்”
Siddharth,
Thx for this post, but it could have been lengthy.
– Suresh Kannan
கருத்துக்கு நன்றி சுரேஷ் கண்ணன். ஆம். இன்னும் கொஞ்சம் பெரிதாகவே எழுதி இருக்கலாம்.
நினைவின் நதியில் பற்றிய இன்னொரு பதிவை எழுதலாம் என இருக்கிறேன். இப்போது கொற்றவை எனது நேரமனைத்தையும் ஆக்கிரமித்திருக்கிறாள். 🙂
[…] ஜெயமோகன், சுந்தர ராமசாமியின் நினைவாக எழுதிய “நினைவின் நதியில்” குறித்து ‘அங்குமிங்கும்’ சித்தார்த் எழுதுகிறார். சே. ராமானுஜம் எழுந்து வந்து கொட்டாவியுடன் “சவுண்ட் ஸ்லீப்” என்றார். “கேட்டேன்” என்றார் சுந்தர ராமசாமி. “அவரை நன்னா புரிஞ்சுண்டவர் ரொமைன் ரோலந்த், மார்டின் லூத்தர் கிங் ஜூனியர், இ.அம்.ஷூமாக்கர், இவான் இல்லிச்….” ஏன் மேல்நாட்டினர் காந்தியைப் புரிந்துகொள்கின்றனர்? “ஏன்னா காந்தி ஒரு இந்திய மைண்ட் செட்டப் உள்ளவர் இல்லை. அவரோட மனசு வெஸ்டர்ன் மனசு…” […]
//படித்த முடித்த கணம் தோன்றிய உணர்வு சுராவின் மேல் பிரியம் தான். தேவதூதனாகவோ அசுரனாகவோ அல்லாமல் ஒரு மனிதனாக சுராவை காட்டியது இவ்வஞ்சலி.//
எனக்கும் அவ்வாறுதான் தோன்றியது சித்தார்த்.