பிரிவுகள்
பொது

காந்தி – சில சிந்தனைகள்


காந்தி நினைவு – 1
நேற்று எனது அறையை சுத்தம் செய்தபோது (ரூம, ரூமாவா வெச்சிருக்க? குப்பத்தொட்டி மாறி இருக்கு – அம்மா) கையில் 7.10.2003 தேதியிட்ட குமுதம் ஜங்ஷன் கிடைத்தது. அதில் “மகாத்மாவின் மகன் – ஒரு துயர சரிதம்” என்ற கட்டுரை என்னவோ செய்தது.

காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியை பற்றிய கட்டுரை அது. கட்டுரையின் சுருக்கம் இது தான். ஹரிதாஸ், காந்தியின் சொல்லுக்கு அடங்காத பிள்ளையாகவே வளர்ந்திருக்கிறார். சிறிய வயதிலேயே திருமணம். பிறகு தந்தையுடனான மனஸ்தாபம். அவரிடம் இருந்து பிரிந்து சென்று, குடிபழக்கத்தால் சிதைந்து, 1939ல் இஸ்லாமிய மதத்தை தழுவி, பிறகு ஆரிய சமாஜத்தில் இணைந்து மீண்டும் இந்துவாக மாறி, 1948ல் மரணமடைந்தார்.

காந்தி ஒரு கட்டத்திற்கு மேல் மகனிடம் விலகி நிற்கும் போக்கையே கடைபிடித்திருக்கிறார். அவன் அப்படி தான். அவனை திருத்த முடியாது. நான் அவனை கைகழுவி பல வருடங்கள் ஆகின்றன. இப்படி. ஏன்? ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை உலுக்க முடிந்த அவரால், ஏன் அவரது மகனின் மனதை மாற்ற முடியவில்லை? இது குறித்து அவரது அந்தராத்மா ஏதும் கூறவில்லையா? கஸ்தூரிபாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? சில கேள்விகள்.

காந்தி நினைவு 2

1908ஆம் ஆண்டு டால்ஸ்டாய் ஒரு இந்திய செய்திதாளுக்கு கடிதமொன்று எழுதினார். A letter to a Hindu என்ற பெயரில் அது வெளிவந்தது. அதை படித்த காந்தி அதை குஜராதியில் மொழிபெயர்க்க டால்ஸ்டாயின் அனுமதி கேட்டு கடிதமெழுதி உள்ளார். அதுவே அவர்கள் இருவருக்குமான கடித தொடர்புக்கு ஆரம்பமாக அமைந்தது. இது 1910ல் டால்ஸ்டாய் இறக்கும் வரை தொடர்ந்தது.

இது இன்று விகிபீடியாவில் காந்தியை [http://en.wikipedia.org/wiki/Gandhi] பற்றி படித்தபோது கிடைத்த தகவல். அம்மொழிபெயர்பிற்கு காந்தி எழுதிய முன்னுரை மிக நன்றாக வந்திருந்தது. தமிழில் மொழிபெயர்க்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். முடிக்க முடிந்தால் இங்கு இடுகிறேன்.

அக்கடிதத்திற்கான சுட்டி : http://en.wikisource.org/wiki/A_Letter_to_a_Hindu
காந்தி நினைவு 3

எனது தாத்தா மதுராந்தகம் ஓ.நா. துரைபாபு ஒரு சோஷியலிஸ்ட். ஜெயபிரகாஷ் நாராயண் காங்கிரஸை விட்டு வெளியேறிய போது அவருடன் வெளியேறிவர். அனேக சோஷியலிஸ்டுகளை போல தனது கடைசி காலம் வரை காந்தியை கிட்டத்தட்ட தொழும் நிலையையே மேற்கொண்டார். பாட்டி சொன்ன செய்தி. 1948ல் காந்தியின் மறைவை பற்றி கேள்விப்பட்ட உடனே புஜையறையில் இருந்த கடவுள் படங்களை போட்டு உடைத்தாராம். அதன் பிறகு அவர் கடவுளை வணங்கியதே இல்லை. தினமும் காலை அவரது தாயாரின் படத்திற்கு பூவைத்து கைக்கூப்புவதோடு சரி. தாத்தா இறக்கும் வரை கதரை மட்டுமே உடுத்தினார். தனக்கென எதையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்காத ஓர் ஆன்மா அவருடையது. தாத்தா தான் நான் பார்த்த முதல் காந்தியவாதி. அவர் மூலமாக அறிமுகமாகியதாலேயே காந்தியின் மேல் எனக்கு இவ்வளவு மரியாதையோ என கூட தோன்றுகிறது சில சமயங்களில்.

தாத்தாவின் மறைவின் போது இந்தியா சென்றிருந்தேன். அப்போது அவரது நண்பரும் சக சோஷியலிஸ்டுமான கடலூர் பண்டரிநாதன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீட்டிலிருந்து மதுராந்தகம் பேருந்து நிலையம் வரை என் கையை பிடித்த படியே நடந்து வந்தார். தாத்தாவின் மரணம் எங்கள் எல்லோரையும் விட அவரை வெகுவாக பாதித்திருந்தது. வயது 78 – 80 இருக்கும். அப்போதும் கடலூரில் லஞ்சத்திற்கு எதிராக ஓர் இயக்கத்தை நடத்தி வந்தார். அவரது பேருந்து அன்று கிளம்பி சென்ற போது கண்களில் இருந்து என்னையுமறியாமல் கண்ணீர் எட்டிப்பார்த்தது. காரணம் தெரியவில்லை.

இதை எழுத வைத்தது, இன்று நியூ கேரளா இணைய இதழில் படித்த ஒரு செய்தி [http://www.newkerala.com/news.php?action=fullnews&id=83921].
இந்தியா முழுவதிலிருந்தும் காந்தியவாதிகள், இந்த ஏப்ரலில் கூடி, சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வரை நீண்ட நடைபயணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான பயணம் இது.

இதை நமது சமூகம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது, இதற்கு எந்த அளவிற்கு ஆதரவிருக்கப்போகிறது, முதல் பக்கத்தில் ஒரு நாளைக்காவது இச்செய்தி இடம் பிடிக்குமா என்பதை காண ஆர்வமாக உள்ளது.

– சித்தார்த்

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

2 replies on “காந்தி – சில சிந்தனைகள்”

Ashis Nandy has written on Gandhi.A short and interesting essay that appeared in The Little Magazine is in the web.
Ramachandra Guha has also written on Gandhi and some of his articles are in indiatogether.org
The critiques by Ambedkar and Periyar on Gandhi and his
philosophy are important.Nehru disagreed with Gandhi on many important issues and the divergences in their views on the post-independent India have been written about.I can later give more details on this. You have cited some
observations by Sundara Ramaswamy on Ganhi, from the book by Jayamohan. If I happen to read that in full i may
comment on it.

நன்றி ரவி ஸ்ரீனிவாஸ். நான் காந்தியை பற்றி மேலும் கற்கவேண்டும் என உள்ளேன். அதற்கான சுட்டிகளை தந்ததற்கு நன்றி.

உங்கள் வலைப்பதிவை கண்டேன். ஆழமான கட்டுரைகள்.

உங்களின் ஆங்கிலப் பதிவின் முகவரி என்ன?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s