இன்று ஆர்.எஸ். மனோகர் காலமான செய்தியை வலைப்பதிவுகளில் பார்த்து அறிந்தேன். அவரது சாணக்கியன் நாடகத்தை பல முறை பார்த்திருக்கிறேன். உபயம் : சென்னை தொலைக்காட்சி. திரைப்படங்களில் அவர் என்னை அவ்வளவாக ஈர்த்தது கிடையாது. ஆனால் நாடகங்களில், தலைவர், நீரில் மீன். அவரது மரணம் சென்னைத் தொலைக்காட்சியை பற்றி சிந்திக்க வைத்தது.
பத்து வருடங்களுக்கு முன்பு வரை சென்னை தொலைக்காட்சி நமது வாழ்வுடன் பின்னியிருந்தது. தொல்லைக்காட்சி ,அறுவை என என்ன சொன்னாலும், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியுமையும் ஞாயிற்றுக்கிழமை (தூசு தட்டி எடுத்துப்போட்ட) திரைப்படத்தையும் விடுவதில்லை.
தாத்தாவிற்கு வயலும் வாழ்வும், அத்தைக்கு மனைமாட்சி, பாட்டிக்கு உலா வரும் ஒளிக்கதிர் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருந்தது பார்க்க. இதன் மூலம் தான் சோ, மௌளி, ஆர். எஸ். மனோகர் , பிரஸன்னா ஆகியோரின் நாடகங்கள் எனக்கு அறிமுகமாயின. சன் டிவியின் தொடக்கம் தூர்தர்ஷனின் மீது இடியாக விழுந்தது. அது இன்று சுதந்திர தினத்திற்கு நயன்தாரா பேட்டி என்ற நிலையில் நிற்கிறது.