“ஒரு நாவலை படித்து முடித்துவிட்டு, அப்படியே நெஞ்சு விம்மி விம்மி வெடித்து விடும் என நினைத்ததுண்டா? சோகம் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. ஒரு நிறைவு. மனம் நிறைந்துவிட்டது. இனி எதுவும் தேவையில்லை அதில் போட்டு நிரப்ப. அப்படியே இருந்துவிடலாம். இது தான் எனது இப்போதைய நிலை. இதில் ஒரு வார்த்தையை கூட நான் யோசித்து எழுதவில்லை. அப்படியே கொட்டிக்கொண்டிருக்கிறது. இதுவரை நான் இலக்கியம் என படித்துக் கொண்டிருந்ததெல்லாம் இதோ இந்த கணத்தை அடையத்தான் என ஓர் எண்ணம். தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் படித்து முடித்த கையோடு எழுதுகிறேன்.
இதற்கு மேல் எது எழுதினாலும் அது உளரலாகத் தான் இருக்கும். இத்துடிப்பு அடங்கட்டும். பிறகு நாவலை பற்றி எழுதுகிறேன்.”
[ஆறு மாதத்திற்கு முன்பு அம்மா வந்தாள் படித்து முடித்த கையோடு அன்புடனில் எழுதியது. இந்த ஆறு மாதங்களில் பேச்சு, கலந்துரையாடல், விவாதம், விமர்சனமென நண்பர்கள் மத்தியில் நாவலை அக்கு அக்காக பிரிந்த்தாயிற்று. முதல் வாசிப்பில் எனக்கு தந்த உணர்வை இத்தனைக்குப் பிறகும் அது தன்னகத்தே தக்கவைத்துள்ளது.]