கண்ணுக்கெட்டிய தூரம் வரை (அதற்கு மேலும்) பரந்த வெளி. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வின்கற்கள். அங்கே… என்ன அது? ஆம். அங்கே ஓர் ஆமை நீந்திக்கொண்டிருக்கிறது. மிகப் பெரியது. நமது பூமி அளவிற்கு (கிட்டத்தட்ட). எங்கே நீந்துகிறது அது? அதன் இணையை தேடி, என்பது நம்பத்தகுந்த வட்டாரங்களின் யூகம். அதன் மேல் நான்கு மிக மிக பெரீய்ய்ய்ய்ய்ய யானைகள். அவற்றின் முதுகுகளின் மேல் பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய தட்டு. இது தான் தட்டு உலகம்.
ரொம்ப ஒலர்ரேனா? சரி சரி விஷயத்துக்கு வரேன். டெர்ரி பிராட்செட் (Terry Pratchett) இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாயஜால கதைகள் எழுதும் எழுத்தாளர். அவர் உருவாக்கியது தான் இந்த தட்டைஉலகம். இந்த தட்டை உலகத்தை (Discworld) சுற்றி தான் இவரது நாவல்கள் பின்னப்பட்டுள்ளன. இது வரை 32 நாவல்கள் வந்துள்ளன. இவரது நாவல்களில் நகைச்சுவை பிரதானமாக இருக்கும். நகைச்சுவையை விட, அங்கதம் (satire) தூக்கலாக இருக்கும். அது தான் இவரது நாவல்களுக்கு இலக்கிய தரத்தை தருகிறது என எண்ணுகிறேன். இவரது தட்டை உலகத்தில் பல நாடுகள். அதில் உள்ள ஒவ்வொரு நாடும் நமது உலகின் ஏதோ ஒரு பிரதேசத்தை நினைவு படுத்தும். அரேபிய நாடுகளை போன்ற கிலாட்ச் என்ற நாடு. ஆஸ்திரேலியாவை போன்ற ஒரு நாடு. ஜெர்மனி, திபெத், இந்தியா என பட்டியல் நீளும்.
ஆனால் பெரும்பாலும் கதை நடப்பது அங்க்-மோர்போர்க் என்ற நாட்டில் தான். இது அங்க் என்ற நதிக்கரையினிலே அமைந்துள்ள ஒரு விசித்திரமான நாடு. கொலை கொள்ளைகள் பெருகிய போது இந்நாட்டை சேர்ந்தவர்கள் ஒரு முடிவு செய்தனர். கொலை, கொள்ளை, இன்ன பிற இத்தியாதிகளை ஒழிக்க முடியாது. பிறகு என்ன செய்யலாம்? ஒழுங்கு படுத்தலாம். எப்படி? அனைத்திற்கும் சங்கம் வைத்து. இப்போது அங்கு அனைத்திற்கும் சங்கம் உண்டு. கொலைகாரர்கள் சங்கம், கொள்ளைகாரர்கள் சங்கம், ரசவாதிகள் சங்கம், பிச்சைகாரர்கள் சங்கம், இசை கலைஞர்கள் சங்கம் என பட்டியல் நீளும். உதாரணமாக, எல்லா கொள்ளைகாரர்களும் சங்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். நிறுவனங்கள் சங்கத்திற்கு சந்தா கட்டிவிடும். சந்தா கட்டும் நிறுவனங்களில் கொள்ளை அடிக்கப்பட மாட்டாது. சரி, சங்கத்தில் சேராமல் வெளியில் இருந்து யாராவது திருடினால்? அதை சங்கம் பார்த்துக்கொள்ளும். 🙂 பேருந்தில் தனியாக சிரித்துக்கொண்டே சென்றிருக்கிறேன், இவரது நாவல்களை படித்து. (வுட் ஹயுஸிற்கு (p.g.woodhouse) பிறகு என்னை பேருந்தில் சிரிக்க வைத்தவர் இவர் தான் 😉 ).
சமீபத்தில் படித்த நாவல் “காலத்தின் திருடன்” [Thief of Time]. சற்றே குழப்பமான கதை அம்சம் கொண்ட நாவல். ஆனால் டெர்ரி மிக அழகாக கையாண்டுள்ளார். நாம் காலத்தில் தான் பயணம் செய்கின்றோம். ஒவ்வொரு நொடியும் காலம் நம்மை புதுப்பித்து கொண்டிருக்கின்றது. இந்த நொடியில் இருந்து அடுத்த நொடிக்கு பயணம் செய்கிறோம். ஆக காலம் நின்றுவிட்டால்? நாமும் நிற்க வேண்டியது தான்.காலத்தை நிறுத்த திட்டம் போடுகிறது ஓர் கூட்டம். யார்? ஆடிடர்கள்.
எனது, உங்களது அலுவலகத்தில் நாம் இந்த வருடம் வேலை செய்தோமா, அல்லது அன்புடனுக்கு மடல் அனுப்ப மட்டும் அலுவலகம் வந்தோமா என வருடக்கடைசியில் கணக்கு பார்க்கிறார்களே, அந்த ஆடிடர்கள் இல்லை. உலகம், ஒழுங்காக இயங்குகிறதா என சரி பார்க்க நியமிக்கப்பட்ட (யாரால்?) வஸ்துக்கள். உலகை சுற்றி சுற்றி வரும் இவை. நன்றாக தான் போய்கொண்டிருந்தன இவற்றின் வேலை. மனிதர்கள் தோன்றும் முன். அதுவரை இவைகளால் எல்லாவற்றையும் பகுக்க முடிந்தது. ஆராய முடிந்தது. சுருக்கத்தில், அதுவரை இவற்றிற்கு எல்லாம் புரிந்தது. ஆனால் மனிதர்கள் வந்த பிறகு புரியாத சில விஷயங்களும் கூட சேர்ந்து வந்துவிட்டன. அன்பு, காதல், வெறுப்பு, பக்தி என பல விஷயங்களை இவற்றால் புரிந்து கொள்ள முடியவேயில்லை. புரியாதவற்றை நிறுத்திவிட முடிவு எடுக்கின்றன…. இது தான் காலத்தின் திருடன், கதை. காலம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு விளையாடி இருக்கிறார் டெர்ரி. கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்.
டெர்ரியை பற்றிய வலை தளம்
http://en.wikipedia.org/wiki/Terry_Pratchett
தட்டு உலகை பற்றிய வலை தளம்
http://en.wikipedia.org/wiki/Discworld_%28world%29
டெர்ரியின் சமீபத்திய நாவலான Going Postal அருமையாக இருந்தது. அதை பற்றி இன்னொரு நாள்.
– சித்தார்த்
One reply on “Discworld – A Fantasy by Terry Pratchett”
About ur blog in today’s dinamalar…
http://www.dinamalar.com/2006jan06/flash.asp