படம் : சொர்கத்தின் நிறம் (Color of Paradise)
நாடு: இரான்
மொழி: ஃபார்சி
இயக்கம்: மஜித் மஜீதீ
நடிப்பு: மொஹ்சன் ராமெசானி, ஹுசைன் மஹ்ஜுப், சாலிம் ஃபெய்சி
ஆண்டு: 2000
மஜித் மஜிதியின் சொர்கத்தின் நிறம் நான் பார்த்த இரண்டாவது இராணிய படம். முதல் படம் அப்பாஸ் கிரோஸ்தமியின் “செர்ரியின் சுவை” (Taste of Cherry). ஒருவன் தற்கொலைக்கு முயற்சிக்கிறான். அதற்கு உதவ ஓர் ஆளை தேடுகிறான், தேடுகிறான், தேடிக்கொண்டே இருக்கிறான். படம் முடிந்து விடுகிறது. என்னாங்கடா விளயாட்றீங்களா? என்று கேட்க தோன்றியது அந்த படத்தை (ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு) பார்த்ததும். ஒரு வேளை இன்னும் கொஞ்சம் வயசாக வேண்டுமோ என்னமோ அதை ரசிக்க. சரி அது போகட்டும். விஷயத்துக்கு வருவோம். முதல் அனுபவம் சோதனையாய் மாறி விட்ட நிலையில் கொஞ்சம் பயந்த படியே தான் சொர்கத்தின் நிறத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆச்சரியத்துடன் பார்த்து முடித்தேன்.
படம் மகம்மத் என்ற பார்வையற்ற சிறுவனை பற்றியது. கைகளால் , புலன்களால், மனதால் உலகை நா வரண்ட மிருகமாய் பருகிக்கொண்டிருக்கும் ஓர் பார்வையற்ற சிறுவனை பற்றியது. கண் இருந்தும் எதையோ தேடி, இருப்பதை தவிர்கும் அவனது தந்தை ஹாஷெமை பற்றியது. போதனைகளின்றி, துருத்திக்கொண்டு நிற்கும் பிரம்மாண்டங்களின்றி (திரைக்கதையிலும்) மிக மிக நேர்மையாக சொல்லப்பட்ட படம். நேர்மை தான் படத்தின் பலமே.
படத்தின் ஆரம்பத்தில் ஓர் காட்சி. மகம்மத் பள்ளியில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு போக வேண்டும். தந்தை வந்து அழைத்துப்போவதற்காக காத்திருக்கிறான். தோட்டத்தில் ஓர் மரத்தில் இருந்து பறவைக்குஞ்சு ஒன்று கீழே விழுந்து விடுகிறது. அதை மகம்மத் எடுத்து, மரத்தில் ஏறி கூட்டில் வைக்கிறான், ஒலியின் உதவியை மட்டும் கொண்டு. sensationalization ஏதும் இல்லாமல், இயற்கை ஒலி/ஒளிகளை மட்டுமே பின்னணியாக கொண்டு காட்டப்படுகிறது இக்காட்சி. இதயத்துடிப்பை அதிகப்படுத்த, பெருமிதத்தில் நெஞ்சை விம்ம செய்ய, ஜிகனா வேலைகள் எதுவும் தேவையில்லை, மனதோடு மனதை பேசவிட்டாலே போதும் என அறியதந்த காட்சி அது.
படத்தின் ஆதாரம் மகம்மதாய் நடித்த மொஹ்சென் ராமெசானியின் நடிப்பு. ஒரு இடத்தில் தச்சன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்கையின் அழுவான் மகம்மத். கண் தெரியாத, உலகையே பருகும் ஆசையுடன் அலையும் ஓர் சிறுவனின் அழுகை அது. சிறுவனை மடியில் வைத்து கொஞ்ச வேண்டும் போல இருந்தது. 🙂 . தச்சனுடனான இந்த உரையாடல் படத்தில் மிக முக்கியமான ஒன்று. படத்தின் முடிவில் ஓர் காட்சி. சொர்கத்தின் நிறம் மகம்மதிற்கு “காட்டப்படும்” காட்சி. அதை விளங்கிக்கொள்ள இந்த உரையாடல் முக்கியம்.
படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றுமோர் விஷயம், ஒளி/ஒலிப்பதிவு. ஒளிப்பதிவாளர் வடக்கு இரானின் அழகை பருக தந்திருக்கிறார். ஒலிப்பதிவு, மகம்மத் கேட்கும் இயற்கை ஒலிகளை மட்டுமே (மரங்கொத்தி, நீரோடை, சில்வண்டுகள்) கொண்டு நம்மையும் அவனது உலகிற்கு அழைத்து செல்கிறது.
டிவிடி கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.
பி.கு: மகம்மதின் தங்கைகளாக வரும் அவ்விரு பூனைக்கண் சிறுமிகளும் குட்டி கவிதைகள். 🙂
– சித்தார்த்
7 replies on “சொர்கத்தின் நிறம்”
Taste of Cherry and Imamura’s The Ballad of Narayama are two ways to look one’s life (sic) in a way of controlling one’s own death
சுவாரஸ்யமான பதிவுகள், தொடர்ந்து எழுதவும். தமிழ்மணம் ratingsஐ இணைத்துக்கொள்வதுகுறித்து ஆலோசிக்கவும். நன்றி.
சித்தார்த் பட அறிமுகத்துக்கு நன்றி நானும் இரானிபடம் கேட்டு வைத்திருக்கிறேன். இந்த வாரம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கு ( யூ. ஏ. ஈ) அடிக்கடி இரானிய படங்களைப் பற்றி நல்லவிதமான விமர்சனங்கள் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கின்றன, அதிலிருந்து ஒரு ஆசை.
//Taste of Cherry and Imamura’s The Ballad of Narayama are two ways to look one’s life (sic) in a way of controlling one’s own death//
நான் கட்டுரையில் கூறியது போல, இன்னும் சிறிது காலம் கழித்து பார்த்தால் சிடிக்குமோ என்னமோ. இமாமுராவின் படத்தை பார்க்க முயற்சிக்கிறேன். btw, யார் இந்த பெயரிலி?
//சுவாரஸ்யமான பதிவுகள், தொடர்ந்து எழுதவும். தமிழ்மணம் ratingsஐ இணைத்துக்கொள்வதுகுறித்து ஆலோசிக்கவும். நன்றி.//
நன்றி சன்னாசி. wordpress templateல் மாறுதல்கள் செய்ய முடியவில்லை. தமிழ்மணம், தேன்கூடு logoக்களை போட முயற்சித்தேன். அதுவும் இயலவில்லை.
நன்றி உஷா. நல்ல படம் பார்த்தால் எனக்கு பரிந்துரை செய்யுங்கள்.
Thanks for suggesting a good film. I will suggest my students to watch the film.
not yet on கீற்றுக்கொட்டாய் ?
[…] But, personal blogs run by film buffs – and who ain’t one here! – with zealous, passionate write-ups on Tamil films are a different matter altogether. So, it was rather pleasant to read some film-related write-ups, reviews as I dug through the archives in Gilli, ranging from the usual suspects – Iranian films, Hollywood & other foreign films, Bengali art-house – to our very own K. B. Sundarambal and Goundamani. […]