கதை ஆரம்பித்துவிட்டதை பற்றி கவலையில்லை. ஏனெனில் கதகளி வெகு நாட்களுக்கு முன்பே, மிகச் சிறந்த கதைகளின் ரகசியத்தை தெரிந்துவைத்திருந்தது. அவற்றில் ரகசியங்கள் ஏதும் இல்லை என்பது தான் அவற்றின் ரகசியமே. சிறந்த கதைகள் யாவுமே நீங்கள் பல முறை கேட்டவை, இன்னும் கேட்க விரும்புபவை. அவற்றில் எங்கு வேண்டுமெனினும் உள்ளே நுழைந்து, சாவகாசமாக ரசிக்க ஆரம்பித்து விடலாம். விறுவிறுப்புகளையும், திடீர் திருப்பங்களையும் கொண்டு நம்மை ஏமாற்றுவதில்லை அவை. எதிர்பார்க்காதவற்றை கொண்டு நம்மை ஆச்சரியப்படுத்துவதுமில்லை. அவை உங்களுக்கு மிகவும் அறிமுகமானவை. உங்கள் வீட்டை போல, அல்லது உங்கள் காதலியின் உடல்வாடையைப் போல். அதன் முடிவு உங்களுக்கு தெரியும். இருந்தும் தெரியாததை போல் கேட்பீர்கள். நீங்கள் ஓர் நாள் சாகப்போவது தெரிந்தும், தெரியாதது போல வாழ்கிறீர்களே, அது போல. சிறந்த கதைகளில் யார் வாழ்கிறார்கள், யார் இறக்கிறார்கள், யாரது காதல் நிறைவேறுகிறது, யாருடையது முறிகிறது, இவை எல்லாம் நமக்கு தெரியும். இருந்தும் தெரியாதது போல கேட்போம்.
அவற்றின் மர்மமும் மந்திரமும் அதே.
ஓர் கதகளி ஆட்டக்காரனுக்கு, இக்கதைகள் தான் குழந்தைகள். அவனது பால்ய காலமும் அவை தான். அவற்றுடன் தான் அவன் வளர்ந்தான். அவன் வளர்ந்த வீடும், அவன் ஆடிய மைதானமும் அவை. அவனது ஜன்னலும், பார்வையும் அவை. அது அவனிடத்தில் வரும்போது, அதை ஓர் குழந்தையை போல, அவனுடைய குழந்தையை போல கையாள்கிறான். அதை கிண்டல் செய்கிறான். தண்டிக்கிறான். நுரைபோல் மேலனுப்புகிறான். அதனுடன் சண்டையிட்டு கீழே தள்ளி, மீண்டும் மேலெழுப்புகிறான். அதை காதலிப்பதால், அதை பார்த்து சிரிக்கிறான். அவனால், அண்டம் முழுதையும் நிமிடத்தில் சுற்றிவர முடிகிறது. மணிக்கணக்காய், உதிரும் இலையை பார்த்திருக்கவும் முடிகிறது. அல்லது குரங்கின் வாலோடு விளையாடவும். அவனால் போர்களத்தின் உக்கிரத்தில் இருந்து மலையருவியில் குளிக்கும் ஓர் பெண்ணின் மென்மையை இயல்பாக அடைய முடிகிறது. உயிர்துடிப்புள்ள ஓர் அரக்கனிலிருந்து, கதையளக்கும் மலையாளியாக. பாலூட்டும் பெண்ணின் மௌனத்திலிருந்து, கண்ணனின் குறும்புச் சிரிப்பாக. இன்பத்தின் உள் உறைந்திருக்கும் மென்சோகத்தை வெளிகொணற முடியும் அவனால்.
கடவுள்களின் கதைகளை சொல்கிறான் அவன். ஆனால், அதன் இழைகள் கடவுட்தன்மையற்ற, மனித இதயத்திலிருந்து நூற்கப்படுகின்றன.
மனிதர்களிலேயே மிகவும் அழகானவன் கதகளி கலைஞன். ஏனெனில், அவனது உடல் தான் அவனது ஆத்மா. அவனது ஒரே கருவி. மூன்று வயதிலிருந்தே சமன் படுத்தப்பட்டு, இழைக்கப்பட்டு, மொத்தமாக கதைசொல்லலுக்காகவே தயார்படுத்தப்படுகிறது. வர்ண முகமூடிக்கும், அலைகழிக்கும் தோலுக்கும் உள்ளே உள்ள மனிதனிடம் மந்திரம் உள்ளது.
ஆனால் இந்நாட்களில் அவன் செல்லாகாசாகிவிட்டான், நடைமுறைக்கு அந்நியமான பழம்பொருளாய். அவனது குழந்தைகளும் அவனை மதிப்பதில்லை. அவனாய் இல்லாத எதுவாகவும் வளர ஆசைப்படுகின்றனர் அவர்கள். அவன் பார்த்துகொண்டிருக்கும் போதே, அவர்கள் குமாஸ்தாவாகவும், பேருந்து நடத்துனராகவும், அரசு பணியாளர்களாகவும் ஆகின்றனர். அவர்களுக்கென தனியாக தொழிற்சங்கங்களுடன்.
ஆனால் பூமிக்கும் சொர்கத்திற்கும் இடையில் திரிசங்காய் தொங்கிக்கொண்டிருக்கும் அவனால் அவர்கள் செய்வதை செய்ய முடியாது. சில்லரை எண்ணிக்கொண்டும், பயனச்சீட்டு விற்றுக்கொண்டும் பேருந்தின் முன்னும் பின்னும் நடக்க முடியாது . தனக்கு ஆணையிடும் மணியோசைக்கு பதில் சொல்ல முடியாது. தேனீரும், மேரி பிஸ்கட்டும் வைக்கப்பட்டிருக்கும் தட்டிற்கு முன்னால் கூனிக்குறுகி நிற்க முடியாது.
செய்வதறியாமல், சுற்றுலாவின் பக்கம் திரும்புகிறான் அவன். சந்தைக்குள் நுழைகிறான். அவனிடம் இருப்பதெல்லாம் ஒன்று தான். அவன் உடல் கூறத்துடிக்கும் கதைகள்.
வட்டார மணம் ஆகிறான் அவன். ”
[அருந்ததி ராயின் God of small things புதனித்தில் இருந்து ஒரு பகுதியின் மொழிபெயர்ப்பு.]
– சித்தார்த்