“இஸ்லாத்தின் பிரச்சினைகள் ஒரு மறுபார்வை”. அஸ்கர் அலி எஞ்சினியர் எழுதிய புத்தகம். தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி சிங்கராயர். மறப்பதற்கு முன்பு, மொழிபெயர்ப்பை பற்றி சொல்லி விடுகிறேன். ஒரு மொழிபெயர்ப்பு நூலை படிக்கிறேன் என்ற உணர்வே எனக்கு வரவில்லை. அதுவே மொழிபெயர்ப்பாளரின் மிகப்பெரிய வெற்றி என நினைக்கிறேன்.
எனக்கு மதங்களை பற்றி ஆர்வம் உண்டு. மதம் என்பது உளவியல், சமூகவியல் சம்பந்தப்பட்ட விஷயம் என நான் நம்புகிறேன். 4 வருடங்களுக்கு முன் யூத மதத்தை பற்றி படிக்க ஆரம்பித்த போது தான் மதத்தை பற்றிய ஆர்வம் தோன்றியது. பிறகு கிருத்துவம். கொஞ்சம் இந்து மதம். இப்போது கொஞ்சம் நாளாக இஸ்லாம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமை பற்றி என்னுள் இருந்த பல சந்தேகங்களை அஸ்கர் அலியின் இந்த புத்தகம் தீர்த்துவைத்தது. புத்தகத்தின் சாரம் என எனக்கு தோன்றியது:
- இஸ்லாம் ஓர் சமூக மறுமலர்ச்சி இயக்கமாக தோன்றிய ஒன்று. சமூக மறுமலர்ச்சி இயக்கத்திற்கே உண்டான உயரிய அற நோக்கங்களை கொண்டது.
- இஸ்லாத்தின் போதனைகள் இரு வகையானவை. ஒன்று மானுட சமூகம் முழுவதையும் நோக்கி பேசும் அறம் சார்ந்த லட்சிய வரிகள். மற்றொன்று, அரபி மக்களை நோக்கி பேசிய சூழல் சார்ந்த வரிகள். இவற்றை குழப்பிக்கொள்ளும் போதே பிரச்சனைகள் தோன்றுகின்றன என்கிறார் அஸ்கர் அலி.
- ஓர் மதம், அது எந்த மதமாக இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதை கொள்கை அளவில் எதிர்க்க வேண்டியது அம்மத நம்பிக்கையாளர்களின் கடமை.
ஒரு மதத்தை பற்றிய நூலாக மட்டும் இல்லாமல், மதம் என்ற அமைப்பின் சமூகவியல் காரணங்களையும் அலசுகிறது இந்த நூல்.
அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். இன்றைய நிலையில், இஸ்லாமை குறித்த புரிதல் அனைவருக்கும் தேவை என எனக்கு படுகிறது. இந்நூல் அதற்கு நல்ல ஆரம்பம்.
– சித்தார்த்.