அவன் பணக்காரன். அவள் ஏழை. சிறு வயது முதல் நண்பர்கள். ஏதோ ஓர்
புள்ளியில் அவர்களையும் அறியாமல் அது காதலாய் மாறுகிறது. இடையில் இருவர்
வாழ்விலும் வேறு யாரோ நுழைய, பொறாமை, சிக்கல், ஊடல், பிரிவு கடைசியில்
சுபம்.
இது தான் நான் இன்று பார்த்த பரிணீதா (திருமணமானவள்)வின் கதை. மிக மிக
“சாதாரனமான” கதை. சரத் சந்தர் சதோபாத்யாயவின் (தேவதாசும் இவருடைய புதினம்
தான்) புதினம் படமாக்கப்பட்டு இருக்கிறது. 1914ல் எழுதப்பட்ட புதினம்.
1913 நிகழ்வதாய் களம். படத்திற்காக அதை 1962ற்கு மாற்றி இருக்கிறார்கள்.
விது விநோத் சோப்ராவின் தயாரிப்பில் பிரதீப் சர்காரின் இயக்கத்தில்
வெளிவந்துள்ள இந்தி படம். சயஃப் அலி கான், வித்யா பாலன், சஞ்சய் தத்,
ரைமா சென் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பார்வையாளனின் கவனத்தை ஈர்க்க கதைகள் அசாதாரமாய் இருக்க தேவையில்லை
என்பது என் எண்ணம். சமீபத்தில் நான் மிகவும் ரசித்த பல படங்கள் மிக
சாதாரன கதைகளை கொண்டவை தான். ரெயின் கோட், ஏழு சாமுராய்க்கள், அமேலி,
இப்போது பரிணீதா. நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் தட்டையாய் பாவிக்காமல்
அதன் அனைத்து பரிமானங்களையும் சேர்த்துக்கொள்ளும்போது (இதற்கு மௌனம் மிக
நல்ல சாதனமாய் எனக்கு படுகிறது) எந்த கதையும் சாதாரன கதையாய்
தங்குவதில்லை.
லோலித்தா தனது பெற்றோரின் மரணத்திற்கு பிறகு மாமாவின் வீட்டிற்கு தங்க
வருகிறாள். சேகர் பணம் படைத்த வீட்டின் ஒரே வாரிசு. இசையில் ஆர்வம்.
இருவருக்கும் 10 – 12 வயது தான் இருக்கும். மிக அருமையான ஓர் நட்பு இன்று
உருவாகிறது. அவளுக்கு பணம் கொடுப்பதில் அவனுக்கோ, அவனிடமிருந்து
பெறுவதில் அவளுக்கோ எந்த தயக்கமும் இல்லை. அவனது பணப்பெட்டியின் சாவி
அவளிடம் தான் இருக்கிறது, அவர்களது நட்பின் உருவகமாய்.
படத்தின் கதையை நான் இங்கு கூறப்போவதில்லை. படம் பாருங்கள். படத்தில் பல
திருப்பங்களை சரத் சந்தர் வைத்துள்ளார். அதை இங்கு கூறிவிட்டால் பிறகு
நான் தூங்கும்போது ஆவியாக வந்து என் கண்ணை குத்தி விடுவார்.
நட்பு காதலாய் மாறும் தருணம், பொறாமை, ஊடல் இவை யாவும் பக்கம் பக்கமாய்
வசனங்கள் இல்லாமல், காட்சிகளினூடாகவே “உணர்த்தப்படுகின்றன”. ஆம்.
இயக்குனர் நமக்கு இவற்றை சொல்வதில்லை. உணர்த்தலை மட்டுமே செய்கிறார்.
இந்த உணர்த்தல் ஏற்படுத்தும் மௌனமே படத்தின் அழகுணர்ச்சியாய் நிற்கிறது.
படத்தின் பல இடங்களில் “காதல்னா….”, “நட்புங்கறது….” போன்ற
சொற்பொழிவுகளுக்கான வாய்ப்பு இருந்த போதும் அதை பயன்படுத்தாது தனது
எழுதுகோல் மையினை மிச்சப்படுத்திய பிரதீப் சர்காருக்கு அநேகம்கோடி
நன்றிகள்.
படத்தின் அடிநாதம் கதை தான் என்ற போதும், இப்படத்தை மற்றவற்றில் இருந்து
தனித்து காட்டும் பல அம்சங்கள் உள்ளன. களம். 1960களின் கொல்கத்தாவை நம்
கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள். கலை, உடை, ஒளி என எல்லாம் சேர்ந்து
நம்மை 1960களுக்கு கொண்டு சென்றுவிடுகிறது. இசை. படத்தில் பாடல்கள்
அதிகம். ஆனால் இசை நன்றாக இருப்பதால் இது ஒரு குறையாகவே தெரியவில்லை.
கூடவே வித்யாபாலனை இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருக்களாமே 😀
அப்படி ஒரு அழகு. தமிழ் பெண்ணாம். கேரளாவில் வளர்ந்து பிறகு இந்தியில்
சில விளம்பரங்களில் நடித்திருக்கிறார். இது இவரது முதல் படம். அம்மனி
சகட்டு மேனிக்கு படங்களை ஒப்புக்கொண்டு மரத்தை சுற்றி ஆடாமல் திட்டமிட்டு
நடித்தால் இந்தியாவின் அடுத்த நந்திதா தாஸ் தயார். வித்யாவிற்காக இன்னொரு
முறை பார்க்கலாம் என இருக்கிறேன் (ரொம்ப வழியறனோ?)
சயஃப் அலி கானின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. “ஹம் தும்”
மிற்க்காக சென்ற வருடம் விருது வாங்கி என் வயிற்றெரிச்சலுக்கு ஆளானதில்
இருந்து இப்போது கொஞ்சம் விடுதலை ஆகிறார். விருது இந்த படத்திற்காக தான்,
“ஹம் தும்” காக இல்லை என சமாதானப் படுத்திக்கொள்ளலாம். 🙂 கணமான
பாத்திரம் தன் பின்னால் இருப்பதால் சஞ்சய் தத் அதிகம் அலட்டிக்கொள்ளாமல்
வந்து போகிறார்.
படத்தின் குறை என எனக்கு பட்டது அதன் கடைசி காட்சியில் கதாநாயகன்
கடபாறையை தூக்கிக்கொண்டு சுவரை இடிக்க, அதற்கு சுற்றி உள்ளவர்கள் அவரை
உற்சாகப்படுத்துவது. இது நாவலில் உள்ளதா இல்லை “முடிவு” வேண்டும்
என்பதற்காக இயக்குனர் செய்த வேலையா என தெரியவில்லை. தெளிந்த நீரோடையாய்
சென்று கொண்டிருந்த படத்தில் கல்லாய் விழுகிறது இக்காட்சி.
நல்ல படம். பாருங்கள்.
படம் : பரிணீதா (திருமணமானவள்)
வெளிவந்த ஆண்டு : 2005
கதை : சரத் சந்திர சதோபாத்யாய
மொழி: இந்தி
இயக்குனர்: பிரதீப் சர்கார்
நடிப்பு: வித்யா பாலன், சயஃப் அலி கான், சஞ்சய் தத் மற்றும் பலர்.
One reply on “பரிணீதா”
—வித்யாவிற்காக இன்னொரு
முறை பார்க்கலாம் என இருக்கிறேன் (ரொம்ப வழியறனோ?)—
இல்லீங்கோ ;;-))