தவமாய் தவமிருந்து பார்த்தேன். படத்தை பார்த்து முடித்த இக்கணம் தோன்றும் சில எண்ணங்களை பதிவு செய்யலாம் என தோன்றியது.
படத்தின் முடிவில் ஓர் காட்சி. தந்தையை அடக்கம் செய்துவிட்டு சுடுகாட்டில் இருந்து இராமலிங்கமும் (சேரன்) அவனது மகனும் நடந்து வருவார்கள். நின்று அடக்கம் செய்த இடத்தை திரும்பிப்பார்க்கும் போது இராமலிங்கத்தின் உதடுகளில் மென்புன்னகை ஒன்று பூக்கும். ஓர் பரிபூரண வாழ்க்கைக்கான பரிசு அந்த புன்னகை.
படம் நீளம் என்பதை முடிந்த போது கடிகாரத்தை பார்த்து தெரிந்து கொண்டேன். கொஞ்சம் நீளம் தான். படத்தொகுப்பு இன்னும் நேர்த்தியாய் இருந்திருக்களாம். ஆடோகிராஃப் அளவிற்கு திரைக்கதையில் கச்சிதம் இல்லை. இப்போது பதிவாய் எழுத உட்காரும்போது எனக்கு தோன்றும் குறைகள் இவை. இனி படத்தை பற்றி பேசலாம். 🙂
சில படங்களை ஏன் பார்த்தோம் என நினைப்போம். சில படங்கள் நம்மை “அட” போட வைக்கும் (சண்டைகோழி இப்படி இருந்தது). ஆனால் சில படங்கள் காட்சிக்கு காட்சி நம்மையும் உள்ளிழுத்து, அதனுடன் வாழவைத்து, ஏதோ ஒன்றை நம்மிடம் தந்து விட்டு போய்விடும். சினிமா என்ற ஊடகத்தின் பலம் இது. 3 மணி நேரத்தில் ஓர் வாழ்க்கையை வாழ்ந்து மீளளாம். தவமாய் தவமிருந்து இந்த வகை. இது ஓர் அனுபவம்.
எங்கள் குடும்பத்தில் நானும் எனது தங்கையும் தான் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என கூட்டு குடும்பத்தில் வளர்ந்த கடைசி குழந்தைகள். எங்களுக்கு பிறகு வந்தவர்கள் எல்லாம் “எங்க தாத்தா வில்லேஜ்ல இருக்காரு. நாங்க லீவுக்கு போவோம்” கோஷ்டிகள். அவர்கள் எதை இழந்தார்கள், அதன் தாக்கம் என்ன என என்னால் உணர முடிகிறது. இப்படத்தில் சேரனின் குடும்பத்தை பார்த்தபோது என்னுள் ஓர் சந்தோஷம், நிறைவு.
திரைப்பட விழாக்கள், டிவிடி கடைகள், 5 நட்சத்திர விடுதிகள் என தமிழ் சினிமா எங்கெங்கேயோ கதை தேடிக்கொண்டிருக்க, சேரன் அதை வாழ்க்கையில் தேடிப்பிடித்திருக்கிறார். எதற்கு என்றே தெரியாத ஓர் ஓட்டத்தில் தலைகால் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.. ஓட்டத்தில் எதையெதையோ இழந்து விட்டோம். அதை பற்றி பேசுவது கூட cliché ஆகி விட்ட இந்நேரத்தில் தலையில் ஓர் குட்டாய் வந்திருக்கிறது இப்படம். பழைய பீம்சிங் படங்களை போல. ஆனால் அதன் செயற்கை தனம் இல்லாமல்.
One reply on “தவமாய் தவமிருந்து”
நல்ல விமரிசனம். படத்தைப் பார்க்க ஆவல்.